க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

ரெஸ்ற் போட்டி விளையாடும் நாடுகளில் அதிக வயதுடன் சமீபமாக விளையாடிய வீரராக சனத் ஜெயசூரியாவாக தான் இருக்கப் போகிறார் போலும். ஏனென்றால் வழமையாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தான் 40 வயது வரைக்கும் கிரிக்கெற் விளையாடுவார்கள். அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் இளையவர்களுக்கு வழிவிடுவதற்காக விரைவிலேயே ஒதுங்கி விடுவார்கள். மெக்ராத், கில்கிறிஸ்ற் போன்றவர்களோடு கெவின் பீற்றர்சன் அணியில் இடம்பெறுவதற்காக விலகிக் கொண்ட கிரஹாம் தோர்ப் உம் சில உதாரணமானவர்கள். அன்று கிரஹாம் தோர்ப் சிறிது காலம் கூடுதலாக விளையாடி இருந்தால் கெவின் பீற்றர்சன் இந்தளவுக்கு வளர இன்னும் காலம் எடுத்திருக்கும். மெக்ராத் ஓய்வு பெற்றிராவிட்டால் மிற்சல் ஜோன்ஸன், ஸ்ருவர்ட் கிளார்க் போன்றவர்கள் இன்று விருட்சமாக இருந்திருக்க முடியாது, மாறாக கற்கும் பருவத்திலேயே இருந்திருப்பர்.

ஆனால் ஆசிய நாடுகளில் உள்நாட்டு கிரிக்கெற் பெரிதாக ஊக்குவிக்கப் படுவதில்லை. இதனால் ஒரு சாதனை வீரர் ஓய்வு பெற்றால் அவரின் இடம் வெறுமையாக காணப்படும். இதனாலும் பல வீரர்கள் அதிக வயது வரை விளையாட வேண்டி ஏற்படுகிறது. உதாரணமாக இலங்கை அணியிலிருந்து சனத் ஜெயசூரியா ஓய்வு பெற்றால் அவரின் இடத்தை நிரப்ப மஹேல உடவத்த, மலிந்த வர்ணபுர போன்றோர் இருந்தும் அவர்கள் சர்வதேச அனுபவத்தைப் பெற வாய்ப்புகள் அரிதாகவே வழங்கப்படுகின்றன. எனினும் சனத் ஜெயசூரியாவின் துடுப்பாட்டத்தை அவர்களால் நிரப்ப முடியுமாக இருப்பினும் அவரது சகலதுறை வீரர் என்ற இடத்தை நிரப்புவதற்கு புதிதாக ஒருவரை தான் கண்துபிடிக்க வேண்டி இருக்கிறது. அவுஸ்ரேலிய அணியில் ஷேன் வற்சன் போல இங்கும் ஒருவர் தேவை. பந்து வீச்சு என்றால் தனி பந்து வீச்சாளரளவு பந்து வீசக்கூடியவராகவும், துடுப்பாட்டம் என்றால் தனி துடுப்பாட்ட வீரரளவு துடுப்பாட கூடியவராகவும் உள்ள ஒருவர் தேவை. கண்டுபிடிப்பார்களா...???

சரி... இது இப்படி என்றால்...
இலங்கை அணியில் அஜந்த மென்டிஸ் என்றொரு புதுமுகம் கலக்கி வருகிறார். தான் விளையாடிய முதல் ரெஸ்ற் தொடரில் மொத்தமாக 26 இலக்குகளை வீழ்த்தி உலக சாதனை படைத்திருக்கிறார். விளையாடிய எதிரணியும் சாதாரண அணி அல்ல... சுழற்பந்து வீச்சாளர்களை திறமையாக சந்திக்கும் அணி என்று சொல்லப்படும் இந்திய அணி. இதற்கு நல்ல உதாரணம் முத்தையா முரளிதரன். முரளிதரன் தனது மாயாஜாலத்தை மற்றைய அணிகளளவுக்கு காட்ட முடியாத அணிகள் இந்தியாவும் அவுஸ்ரேலியாவுமாகும். அவுஸ்ரேலிய அணியை விட இந்தியா மிகச்சிறப்பாக சுழற்பந்து வீச்காளர்களை எதிர்கொள்ளும் அணி ஆகும். டிராவிட், லக்ஸ்மன், சச்சின், கங்குலி போன்ற சுழற்பந்து வீச்சை நன்றாக சமாளிக்கும் வீரர்கள் சோடை போனது தான் இங்கே பரவலாக கதைக்கப்பட்டது.முரளிதரனுக்கு தூஷ்ரா என்றால் மென்டிஸ்ற்கு கரம் பந்து.

சில தமிழ் ஊடகங்களில் மென்டிஸ் இன் பந்து வீச்சு முறையின் பெயர் கரம் பந்து வீச்சு முறை என்கிறார்கள். மென்டிஸ் வீசும் ஒரு வகை பந்து வீச்சு முறையே கரம் பந்து வீச்சு என்பதை அவர்கள் இன்னும் திருத்தி கொள்ளவில்லை.

இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினை இலங்கை ஒருநாள் அணியைப் பற்றிய பிரச்சினை ஆகும்.
ரெஸ்ற் அணியில் பெரிதாக பிரச்சினைகள் இல்லை.ஒரு நாள் அணியில் முரளிதரன், மென்டிஸ் இருவரும் தற்போது விளையாடுகிறார்கள். ஓர் ஒருநாள் அணியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் விளையாடுவது எவ்வளவு காலத்திற்கு சாதகமாக அமையும் என்று தெரியவில்லை. யாராவது ஒரு சுழற்பந்து வீச்சாளர் தான் விளையாடுவது என்ற நிலைமை ஏற்படின் இலங்கை சார்பாக யார் விளையாடுவார்கள் என்பதே தற்போதுள்ள கேள்வி...சாதனை வீரரான முரளிக்கு வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது புதிய மாயாஜாலப் பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பதே கேள்வி...
5 பந்து விச்சாளர்கள் விளையாடும் போட்டி எனின் 3 வேகப்பந்து வீச்சாளர்களும் 2 சுழற்பந்து விச்சாளர்களும் விளையாடுவது பெரியளவுக்கு பிரச்சினையாக இருக்காது. ஆனால் 4 பந்து வீச்சாளர்களோடு மற்றைய 10 பந்துப் பரிமாற்றங்களை பகுதிநேரப் பந்து வீச்சாளர் மூலம் நிரப்பும் போட்டிகளில் 2 சுழற்பந்து விச்சாளர்கள் முடியுமா?அப்படியான சந்தர்ப்பத்தில் யார் விளையாடுவார்? முரளிதரன் சமீப காலமாக தன் பந்து வீச்சு முறையை இலக்கு கைப்பற்றுவதிலிருந்து மாற்றி ஓட்ட விகிதத்தை குறைக்கும் பந்து வீச்சாளர் என்று மாற்றி விட்டார் போல உள்ளது. இலக்குப் பக்கமாக (அதாவது Bowling over the wicket) முறையில் பந்து வீசும் போது பந்து அதிகளவு திரும்பும். ஆனால் தற்போது முரளிதரன் இலக்கை சுற்றி வந்து வீசும் போது திரும்பலளவு குறைவாகவே காணப்படும். ஆனால் ஒரு சாதனை பந்து வீச்சாளர் எதுவித நோக்கங்களுமற்று அப்படி பந்து வீச மாட்டார். தூஷ்ரா வீசும் போது இலக்கை சுற்றி வந்து வீசுதலே சிறப்பாக காணப்படும். ஆனால் சமீப காலமாக, ஏறத்தாழ 4 அல்லது 5 வருடங்களில், முரளிதரன் ஒருநாள் போட்டிகளில் 5 இலக்குப் பரிதியை பெறத்தவறி வருகிறார். அண்மையில் ஆசியக் கிண்ணப் போட்டிகளில் வங்களாதேச அணிக்கெதிராக 5 இலக்குப் பரிதியை பெற்றிருந்தார். 2004 ம் ஆண்டிற்கு பிறகு முரளிதரன் பெற்றுக் கொண்ட முதல் 5 இலக்குப் பரிதி இதுவாகும். எனினும் ஒரு சவாலான அணிக்கெதிராக 5 இலக்குப் பரிதியொன்றை பெறுவதே முரளிதரன் மீதான விமர்சனங்கள் எழாமல் இருக்க உதவும்.
இது இப்படி என்றால் இந்தியாவில் இந்நிலமை மோசமாக உள்ளது.
நான்கு மூர்த்திகள் எனப்படும் டிராவிட், லக்ஸ்மன், சச்சின், கங்குலி ஆகியோர் அண்மைக்காலமாக சோபிக்கத் தவறி வருகின்றனர். இவர்களில் லக்ஸ்மன் 5 நாள் போட்டிகளுக்காக என தனியாக ஒதுக்கப்பட்டவர். டிராவிட், கங்குலி ஆகியோர் கிட்டத்தட்ட அதே நிலைமையில் தான். இதில் சச்சின் தான் கொஞ்சம் மரியாதைக்காக அணியில் வைத்திருக்கப் பட்டிருக்கிறார். உலகில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற சாதனை மட்டும் சச்சினிடம் இல்லையென்றால் இதே நிலைமை தான்.5 நாள் போட்டிகளிலும் இனி கங்குலி, டிராவிட், லக்ஸ்மன் போன்றவர்களுக்கு இடம் கிடைக்குமா என்பதும் பெரிய சந்தேகம் தான்.
சுரேஸ் ரெய்னா போன்றவர்கள் ஒரு நாள் போட்டிகளிலும் பத்ரினாத், அஸ்னோக்கர், ஸ்ரீகார் டவான் உட்பட ஏராளமானோர் உள்நாட்டுப் போட்டிகளிலும் கலக்கி வருவதால் இளசுகள் தான் முந்துவார்கள் போலிருக்கிறது....

0 பின்னூட்டங்கள்: