க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

1927 ம் ஆண்டு கார்த்திகை மாதம் 27ம் திததியன்று மகாத்மா மாந்தி அவர்கள் யாழ்ப்பாணத்து இந்துக்கள் மத்தியில் பேசும் போது பின்வருமாறு குறிப்பிட்டார் 'நீங்கள் நல்ல இந்துக்களாக இருக்க விரும்பினால், நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் தீண்டாதார் என்று அழைக்கப்படுபவர்களுக்கு எல்லா ஆலயங்களின் கதவுகளையும் திறந்து விடுங்கள்" என்று.உலகத்தையே ஆண்டு வருகின்ற அமெரிக்கா தேசம் போய் அங்கு பலரை தனது சீடர்களாக பெற்ற சுவாமி விவேகானந்தர் அவர்கள் 'மதங்கள் வேறாயினும் அவை நோக்கிச் செல்லும் பாதை ஒன்று தான்" என்றார்.இதிலிருந்து தெரிவது ஒன்று தான். மனித வாழ்க்கையில் மதம் ஒரு பகுpயாக இருக்கலாமே தவிர, மதமே வாழ்க்கையாகி போய் விடக் கூடாது என்பது தான்.சைவ சமயம் என்பது எல்லா சமயங்களுக்கும் மூத்த சமயம் என்றும் ஆதியும் அந்தமும் இல்லாததென்றும் சொல்லப்படுவதுண்டு.ஆனால் சமயம் என்பது ஆடம்பரத்திற்குரிய ஒரு அம்சமாக இருத்தல் கூடாது, ஏனெனில் பக்தி என்பதற்கு பணம், அந்தஸ்து என்பன தேவையற்றன. இதற்து உதாரணமாக மன்னர் காலத்தில் அரசன் கூட மத அறிஞர்களுக்கு மரியாதை செய்ததாக புராணங்கள் செப்புகின்றன. இன்று ஜனாதிபதி கூட தம் இன மதத் தலைவருக்கு காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுகின்றார்.ஆகவே சமயம் என்பதற்கும் அந்தஸ்து, பதவி என்பன தேவையற்றன என்ற முடிவிற்கு வரலாம். ஊடகங்கள் வேண்டுமானால் அவர் கோவிலுக்கு சென்றார், ஆசீர்வாதம் பெற்றார் என்பதை பெரியதாக காட்டி 'பெரிய நட்சத்திரங்களுக்கு" விளம்பரம் தேடுவதோடு தாம் விளம்பரம் பெறுவதையும் செய்யலாம். ஆனால் பக்திக்கு உண்மை மட்டும் போதும்.
இன்று சைவ சமயத்தினரான நாம் செய்வது என்ன?வெள்ளிக்கிழமைகளில் 'பட்டையோடு, பொட்டோடு" விரதம் அனுஷ்டிக்கும் நாம் மறுநாள் உயிர்களை கொன்று புசிக்கும் ஊனுண்ணிகளாக மாறும் கொடுமைகள் ஏன்?விரதம் அனுஷ்டிக்கும் நாட்களில் விரதம் அனுஷ்டிப்பவர் கொஞ்சம் அதிகமாக மற்றவர்களோடு 'எரிந்து" விழுவார். கேட்டால் 'விரதக் களைப்பு" என்ற பதில் பெறப்படும்.'உணவை விடுத்தேனும், சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றாலும் இறைவனை மெய்யன்போடு வழிபடல் தான் விரதமாகும்" என நல்லை நகர் நாவலர் கூறியுள்ளார்.விரதத்தில் பிரதானமானது வழிபாடே ஆகும். எங்கே வழிபாடு? உணவை ஒரு வேளை விடுவது மட்டும் விரதம் என்றால் உலகில் கோடிக்கணக்கான மக்கள் தினமும் விரதம் அனுஷ்டித்து வருகிறார்கள்.இன்று கோவில்கள் என்பன வியாபார ஸ்தாபனங்களாக மாறி விட்டன. அர்ச்சகருக்கு மரியாதை நிமித்தம் முன்பு வழங்கப்பட்டு வந்த தட்சணை இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு ஒரு நிலையான பெறுமதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோயில்கள் கூட ஏழைகள் செல்லும் கோவில்கள், பணம் படைத்தவர்கள் செல்லும் கோவில்கள் என பிரிக்குமளவிற்கு வணிகயமாக்கப்பட்டுள்ளது.பக்கத்தில் 5 நாள் சாப்பிடாத ஒருவன் பசியால் துடித்துக் கொண்டிருக்கும் போது அவனுக்கு பக்கத்திலிருந்து 'பிட்சா" சாப்பிடும் தொழிலைத்தான் இக் கோவில்கள் செய்கின்றன.உண்மையான பக்தி என்பது இரண்டாம் பட்சமாகி மூலையில் கிடக்கின்றது.மதம் என்பது மக்களின் வாழ்வோடு ஒன்றியிருக்க வேண்டும். அத்தோடு மக்களின் வாழ்க்கையை மாற்ற உதவும் அம்சமாகவும் காணப்படல் வேண்டும்.எவ்வளவோ மக்கள் உணவின்றி பசியால் துடிக்கும் போது அபிடேகம் என்ற பெயரில் உணவுப்பொருட்களை அர்ச்சனைக்காக மிகையாக பயன்படுத்தி கழுவித் தள்ளுங்கள் என்று எந்த புராண நூலில் உள்ளதோ தெரியவில்லை. அப்படி இருந்தாலும் காலத்திற்கு ஏற்றவாறு மாறுவதில் எந்தவிதமான தவறுகளும் இல்லை. மக்களின் நாளாந்த வாழ்க்கையோடு சமாந்தரமாக பயணித்து கோவில்கள் எப்போது சமூகப் பொறுப்பை உணர்கின்றனவோ அப்போது தான் உண்மையான பக்திநெறியை போதிக்க இக்கோவில்களால் முடியுமானதாக இருக்க முடியும்.

கோவில்கள் இவ்வாறு என்றால் மக்கள் ஒருபடி மேல் போய் கோவில்களிலும் தமது 'கலாசார மேன்மையை" காட்டுகிறார்கள். அணிவது நீளக்காற்சட்டையாக இருந்தாலும் கோவிலிற்கு பக்தியோடு வழிபட வரும் உண்மையான பக்திமான்கள் நீங்கள் அணியும் உடையால் மனம் நொந்து போகுமளவிற்கு அணிவதை தவிர்ப்பது சிறந்தது.உடைகளை மட்டும் பற்றி கதைத்து எதுவித பலனுமில்லை.கோவில்கள் மக்களின் நாளாந்த வாழ்வோடு சமாந்தரமாக பயணிக்க வேண்டுமென்றேன், வேறு சிலரும் அதே கருத்தை தான் கொண்டிருக்கிறார்கள் போலும். தங்கள் வீட்டில் நடக்கும் முழு விடயங்களையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் இடங்களாக கோவில்கள் மாறியமை தான் கொடுமையிலும் கொடுமை. இந்த விடயத்தில் பெண்கள் அனைவரும் ஆண்களில் 'பெண் தேடும்" பருவ இளைஞர்களும் தான் முன்ணணியில் உள்ளார்கள்.
சைவ சமயத்தை இன்று பின்பற்றுபவர்கள் யாவரும் பரம்பரை வழி வந்த சமயத்தினாலேயே பின்பற்றுகிறார்கள். ஆனால் பலர் மதம் மாறுகிறார்களே... பலர் வேற்று மதங்களுக்கு புதிதாக செல்வது போல் சைவ சமயத்தை புதிதாக ஏற்றுக் கொள்வோர் அரிதிலும் அரிதாக இருப்பதற்கு காரணம் என்ன? இன்றைய காலத்திற்கெற்றவாறு கோவில் சுவர்களுக்கு 'மாபிள்" பதித்து கோவில் சுவரை இன்றைய கால கட்டத்திற்கு மாற்ற எடுத்த முயற்சியின், எடுத்த ஆர்வத்தின் சிறுபகுதியையாவது கோவில்களை மக்கள் நேசமான நிலைக்கு எடுத்துச் செல்ல வழங்காததே காரணம்.

'தகுதி உள்ளோர் விமர்சிக்க தவறியதால், தகுதியற்ற நான் விமர்சிக்க தகுதியுள்ளவனானேன்...."

0 பின்னூட்டங்கள்: