க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...


படத்தை பெரிதாகப் பார்க்க படத்தில் அழுத்தி பாருங்கள்...

ம்...
படம் என்ன தான் நல்லா இருந்தாலும் ஒரு படத்தை மட்டும் போட்டு பதிவாக்கி பார்க்க வரும் ஒன்றிரண்டு பேரையும் ஏமாற்ற விரும்பவில்லை...
ஆகவே சில அறுவைகள் உங்களுக்காகவே...

ஓர் முட்டையை கொங்கிறீற் தரை மீது அதை உடைக்காமல் எப்படிப் போடுவீர்கள்?
கொங்கிறீற் தரை உடைவது கடினம்.

ஓர் சுவரை கட்டுவதற்கு எட்டு மனிதர்களுக்கு 10 மணித்தியாலங்கள் தேவைப்பட்டது எனில், அதை 4 பேர் செய்ய எவ்வளவு நேரம் தேவை?
நேரமே தேவையி்ல்லை. ஏற்கனவே கட்டிமுடிக்கப்பட்டு விட்டது.

உங்கள் ஓர் கையில் 4 தோடம்பழங்களும், மறுகையில் 4 அப்பிள்களும் 4 தோடம்பழங்களும் இருந்தால் உங்களிடம் என்ன இருக்கிறது?
பெரிய கைகள்.

பாதி அப்பிள் எவ்வாறு தோற்றமளிக்கும்?
மறு பாதியைப் போல்.

நீங்கள் உங்கள் காலை உணவில் உண்ணவே முடியாதது?
இரவு உணவு.

இலங்கை கிறிக்கெற் அணி ரெஸ்ற் தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு வந்தது தெரியும், ஆனால் எப்போது பெரியளவில் தோற்றது என நினைக்கிறீர்களா??? சிலவேளைகளில் பாகிஸ்தான் அணியுடனான கடைசி இரண்டு ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளின் தோல்விகளையும், இருபதுக்கு இருபது போட்டியின் தோல்வியையும் சொல்கிறேனா என்றும் யோசிக்கலாம்.
ஆனால் அதுவல்ல விடயம். கிறிக்கெற்றில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்பதை அறியாத மூடன் அல்லன் நான்.

இலங்கை கிறிக்கெற் அணி கடந்த சிலவருடங்களாக போட்டியின் ஒழுங்குமுறைக்கமைவாக விளையாடும் அணி (Team playing with the Spirit of the game) என்ற விருதை பெற்று வந்தது நீங்கள் அறியலாம்.
ஆனால் கடந்த பாகிஸ்தான் தொடரும், இவ் நியூசிலாந்து தொடரும் அவ்வாறு செல்வதாக தெரியவில்லை.

பாகிஸ்தான் அணியுடனான 2 ஆவது ரெஸ்ற் போட்டியின் போது சங்கக்காரவை நடுவர் பிழையான முறையில் சயீட் அஜ்மலின் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்ததாக அறிவிக்க சங்கக்கார முணுமுணுத்தபடி நடுவரை திரும்ப திரும்ப பார்த்து சென்றமை குறிப்பிடத்தக்கது. அந்த ஆட்டமிழப்பு அறிவிப்பு தவறானது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால் நடுவர் ஆட்டமிழப்பு வழங்கியதும் வெளியேறுவது விதிகளின் படி அவசியம் என்பது சங்கக்கார அறியாதது இல்லை.
பின்னர் ஒருநாள் போட்டித் தொடரில் களத்தடுப்பாட்ட வீரர் எறிந்த பந்து அப்துல் ரஸாக் இன் துடுப்பில் பட்டது தற்செயலாக. ரஸாக் அதைக் கவனிக்காமல் (அப்படித் தான் எனக்குத் தெரிந்தவரை தொலைக்காட்சியில் காட்டினார்கள்) இன்னொரு ஓட்டத்தை ஓட சங்கக்கார ரஸாக் இடம் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. அப்துல் ரஸாக் ஓர் அமைதியான வீரர் எனக் கணிக்கப்படுபவர். அப்படிப்பட்ட அமைதியான வீரர் மீது சங்கக்கார வாக்குவாதப்பட முற்பட்டது பற்றி சில கிறிக்கெற் விமர்சகர்களும் அதிருப்தியை தெரிவித்திருந்தார்கள்.
அதே போல் ஓர் சம்பவத்தில் அப்ரிடி ஈடுபட இம்முறை ஜெயவர்தனா வந்து வாக்குவாதப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எல்லாவற்றிலும் மேலாக யுனிஸ்கானின் ஆட்டமிழப்பொன்றை நடுவர் வழங்காது விட யனிஸ்கான் தானாக வெளியேறியிருக்க வேண்டும் என்ற ரீதியில் யுனிஸ்கானிடம் வார்த்தைப் பிரயோகங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு முரளி கூட அப்ரிடியை ஆட்டமிழக்கச்செய்த பின்னர் போகுமாறு சைகை செய்ததும், இளம்வீரர் உமர் அக்மல் ஆறு ஓட்டமொன்றை அடித்தபின்னர் அடுத்த பந்தில் இலக்குகள் சரிந்து ஆட்டமிழக்க ஆக்ரோஷமான பார்வையை முரளி வெளிப்படுத்தியதும் அடுத்த முறை இலங்கைக்கு விதிகளின் படி ஒழுங்குமுறையாக விளையாடும் அணிக்கான விருது கிடைக்காது என்பதை அடித்துச் சொல்கின்றன.

அணிக்குள்ளும் வீரர்கள் கோப வார்த்தைகளை வீசுவதும் வழக்கமாகிவிட்டது.
லசித் மலிங்க பாகிஸ்தான் அணிக்கெதிராக ஓட்டங்களை வாரிவழங்க சங்கக்கார கத்தியதும், நேற்று முரளி களத்தடுப்பில் ஈடுபடாமல் கால்பந்து விளையாட்டில் ஈடுபட்டு சோம்பறித்தனமாக இருந்ததும், ரங்கன ஹேரத்தின் கையில் பந்து பட்டு பந்து விலகிச்செல்ல முரளி பந்தை எடுக்கும் அவசரம் இன்றி ஆறுதலாக ஓடி (நடந்து) சென்றதும் அவ்வளவு நல்லதாக தெரியவில்லை.
பாகிஸ்தானுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சனத் ஜெயசூரியா பிழையான அழைப்பு மூலம் சங்கக்காரவை ரண் அவுட் செய்ய சங்கக்கார கடுமையான முணுமுணுப்புக்களுடனும், கோபத்துடனும் வெளியேறியதும் அதன் பின்னர் அடுத்த போட்டியில் சனத்திற்கு ஓய்வு (அப்பிடி தான் சொல்றாங்க.) வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய காலகட்டங்களில் அணித்தலைவர் அமைதியானவராக வேண்டப்படுகின்ற வேளையில் சங்கக்கார அனுபவங்களின் மூலம் தனத உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும், ஏனென்றால் கிரேம் ஸ்மித், டோனி போன்ற Captain Cool அணித்தலைவர்கள் மூலம் அவ்வணிகள் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது உள்ளங்கை நெல்லிக்கனி.

சங்கக்காரவின் கிறிக்கெற் அறிவோ, அல்லது அனுபவமோ கேள்விக்குரியதன்று. நாமெல்லோரும் அதை அறிவோம்.

(பம்பல் பதிவர் கனககோபி சீரியஸாக மாறக் கூடாது என்பதால் ஒரு தகவல்-
இரட்டைக் குழந்தைகள் பிறந்ததால் குழந்தைகள் இரவில் அழுது சங்கக்காரவை நித்திரை செய்யவிடாமல் தடுப்பதால் தான் சங்கக்கார இப்படி ஆக்ரோஷமாக நடந்துகொள்கிறாரோ???!!!)

வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதி- பிட்ஸா ஹட் நிலையத்துக்கு அழைத்தமைக்கு நன்றி. நான் உங்கள்...

வாடிக்கையாளர்- பொறுங்கள்... நான்...

வா.சே.பி- பொறுங்கள்... நான் உங்கள் பல நோக்கு பயன்பாட்டு அட்டை இலக்கத்தை அறிந்து கொள்ளலாமா?

வாடிக்.- ஆ.. சற்றுப் பொறுங்கள்.. ஆ... இதோ... 867456477546-788-46464

வா.சே.பி- நன்றி... ஆம்.. நீங்கள் திரு.கோபி.. இலக்கம் 234, கண்டி வீதி, வவுனியாவிலிருந்து அழைக்கிறீர்கள். உங்கள் வீட்டுத் தொலைபேசி இலக்கம் 338675. உங்கள் கைத்தொலைபேசி இலக்கம் 78346346743648. உங்கள் அலுவலக இலக்கம் 57545347. எந்த இலக்கத்திலிருந்து சேர் கதைக்கிறீர்கள்?

வாடிக்- வீட்டு இலக்கத்திலிருந்து. அது சரி, என்னுடைய இலக்கங்கள் எவ்வாறு உங்களுக்கு தெரியும்?

வா.சே.பி- நாங்கள் வலையமைப்போடு இணைந்திருக்கிறோம் சேர். We are connected to the system Sir.

வாடிக்- நான் கடல் உணவு சேர்ந்த பிட்ஸாவை ஓடர் செய்ய விரும்புகிறேன்.

வா.சே.பி- அது சிறந்த திட்டம் இல்லை சேர்.

வாடிக்- ஏன் அப்படி?

வா.சே.பி- உங்களுடைய மருத்துவ அறிக்கைகளி்ன் படி உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது, அத்தோடு கொலஸ்ரோல் அளவும் கூடுதலாக உள்ளது சேர்.

வாடிக்- என்னது? அப்ப எனக்கு என்ன உணவை பிரேரிக்கிறீர்கள்?

வா.சே.பி- எங்களது கொழுப்பு மிதமான வெங்காய பிட்ஸாவை வாங்குங்கள் சேர். அது உங்களுக்கு விருப்பமானது.

வாடிக்- எவ்வாறப்படி உறுதியாக சொல்கிறீர்கள்?

வா.சே.பி- தேசிய நூலகத்திலிருந்து கடந்த வாரம் தான் 'பிரபலமான வெங்காய உணவுகள்' என்ற புத்தகத்தை பெற்றுச் சென்றீர்கள் சேர்.

வாடிக்- சரி. விடுங்கள். எனக்கு 2 தாருங்கள். எவ்வளவு செலவாகும்?

வா.சே.பி- 10 பேர் கொண்ட உங்கள் குடும்பத்திற்கு 2 போதாது சேர். 3 வாங்க வேண்டும். 3 இன் விலை 49.99 டொலர்கள் சேர்.

வாடிக்- எனது கடனட்டை மூலம் செலுத்தலாமா?

வா.சே.பி- மன்னிக்க வேண்டும் சேர். உங்கள் கடனட்டையின் கடன் நிலுவை கடனெல்லையைத் தாண்டி விட்டது. உங்கள் கடனட்டையின் கடன் மீதி தற்போது 4067.33 டொலர்கள் சேர். ஆகவே நீங்கள் உடன் பணம் மூலம் செலுத்த வேண்டும்.

வாடிக்- அப்போது நான் அருகிலுள்ள தன்னியக்க மீளப்பெறல் இயந்திரத்திலிருந்து பணத்தை மீளப்பெற்று உங்கள் விநியோகப்பிரதிநிதி வீட்டை வந்தடைய முன்னர் தயாராக இருக்க வேண்டும்.

வா.சே.பி- உங்களால் முடியாது சேர். அறிக்கைகளின் படி இன்றைய நாளுக்குரிய அதிகபட்ச பணத்தை மீளப்பெற்று விட்டீர்கள் சேர்.

வாடிக்- அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம். நீங்கள் பிட்ஸாவை அனுப்புங்கள் பணம் தயாராக இருக்கும். எவ்வளவு நேரம் எடுக்கும் நீங்கள் விநியோகம் செய்ய?

வா.சே.பி- கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் சேர். ஆனால் விரைவாக வேண்டுமெனில் நீங்கள் உங்கள் மோட்டார் வண்டியில் வந்து பெற்றுக் கொள்ளலாம் சேர்.

வாடிக்- என்னது?

வா.சே.பி- எங்களிடமுள்ள அறிக்கைகளின் படி உங்களிடம் ஒரு ஹீரோ ஹொண்டா, ஸ்பிளென்டர் வகை மோட்டார் வண்டி உள்ளது சேர். பதிவு இலக்கம் NP ZZ 5768.

வாடிக்- (தனக்குள்) ஐயோ கடவுளே.

வா.சே.பி- வேறு ஏதாவது வேண்டுமா சேர்?

வாடிக்- வேண்டாம். ஆனூல் நீங்கள் வாக்களித்தபடி 3 கொக்க கோலா பானங்களை வழங்குவீர்கள் தானே?

வா.சே.பி- வழமையாக நாங்கள் வழங்குவதுண்டு. ஆனால் உங்கள் விடயத்தில் நீங்கள் நீரிழிவு நோயாளி என அறிக்கைகள் கூறுவதால் குளிர்பானங்களை வழங்க முடியாது சேர்.

வாடிக்- #$$^%&$@$%^

வா.சே.பி- நீங்கள் உங்கள் வார்த்தைகளை கவனித்துக் கொள்வது நல்லது சேர். கடந்த 1987 ம் ஆண்டு யூலை மாதம் 18ம் திகதி நீங்கள் காவல்துறை அதிகாரி மீது அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தியதால் நீதிமன்றத்தால் எச்சரிக்கப்பட்டமையை நினைவுறுத்த விரும்புகிறேன் சேர்.

வாடிக்கையாளர் மூர்ச்சையடைந்து விட்டார்.

ஆண்களை பெண்கள் எவ்வாறு வார்த்தைகளால் சேதப்படுத்துகிறார்கள் என்று பாருங்கள்...

ஆண்: நான் ஒரு புகைப்பிடிப்பாளன். உங்கள் முகத்தைப் போல ஒரு முகத்தைத் தான் இதுவரை நாளும் தேடிக் கொண்டிருந்தேன்.
பெண்: நான் ஒரு பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணர். உன் முகத்தைப் போல ஒரு முகத்தைத் தான் நான் தேடிக் கொண்டிருந்தேன்.

ஆண்: உன்னுடன் ஆடும் சந்தோஷத்தைப் பெறலாமா?
பெண்: இல்லை. நானும் சந்தோஷமாக இருக்க விரும்புகிறேன்.

ஆண்: எவ்வாறு நீ இப்படி அழகாக இருக்கிறாய்?
பெண்: உன் பங்கும் என்னிடம் வந்துவிட்டது போலும்.

ஆண்: உன்னை சந்தோஷப்படுத்த முடியும் என நான் நம்புகிறேன்.
பெண்: ஏன், என்னை விட்டு விலகப் போகிறாயா?

ஆண்: உன்னை மணம்முடிக்க நான் கேட்டால் என்ன சொல்வாய்?
பெண்: ஒன்றுமில்லை. என்னால் ஒரே நேரத்தில் சிரிக்கவும் கதைக்கவும் முடியாது.

ஆண்: ஏதாவதொரு படம் பார்க்கப் போகலாமா?
பெண்: நாங்கள் பார்க்கப் போகும் படத்தை நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன்.

ஆண்: எம் இருவரையும் விதி தான் ஒன்று சேர்த்தது என நம்புகிறாயா?
பெண்: சீ.. சீ... அது வெறும் துரதிஷ்ரம் தான்.

ஆண்: இதுவரை நாளும் என் வாழ்க்கையில் வராமல் எங்கிருந்தாய்?
பெண்: உன்னிடமிருந்து ஒளிந்து கொண்டிருந்தேன்.

ஆண்: உன் பக்கத்திலிருக்கும் இருக்கை வெறுமையாகவுள்ளதா?
பெண்: ஆம். நீ அங்கே இருந்தால் நான் இருக்கும் இருக்கையும் வெறுமையாகும்.

வலைப்பதிவர் இலங்கனுக்கு (http://ilangan.blogspot.com ) திருமண ஆசை வந்து விட்டதால் அவர் அண்மையில் பத்திரிகையொன்றில் பெண் தேவை என விளம்பரம் செய்திருந்தார்.
அவர் தனது வலைத்தளத்தில் 'வலைப்பதிவு எழுதுபவர்களில் நான் தான் சிறியவன்' என சொல்லி தன்னை இளைஞனாக அல்லது சிறுவனாக காட்டிக் கொள்ள விரும்பினாலும், அவரது உண்மையான வயதை அறிந்து விட்டார்கள் அனைவரும்.
அவரது சுயம்வரம் வித்தியாசமான முறையில் நடந்தது. அவரது பெண்தேடும் படலத்தில் கலந்து கொண்ட மணப்பெண்களைப் பாருங்கள்...

வாழ்க்கையில் எப்போதுமே நம்பிக்கையை இழக்கக் கூடாது என்பதற்கு பதிவர் இலங்கனின் சுயம்வரம் ஓர் சாட்சி.

பேருந்து ஓட்டுநர் அடம்பிடித்து என்னை பிந்தச்செய்ததால் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் பிந்தித் தான் சந்திப்புக்குச் செல்லக் கிடைத்தது. நானும் ஒரு 20,30 பேர் இருப்பார்கள் என நினைத்தால் அங்கே விநோதன் மண்டபத்தில் உள்ள கதிரைகளில் ஒன்றிரண்டைத் தவிர மற்றையவற்றில் பதிவர்கள் அமர்ந்திருந்தார்கள். சந்திப்பும் ஆரம்பித்துவிட்டது. நானும் எனது நண்பரும் தான் சென்றோம். பிந்திச் சென்ற குற்றவுணர்ச்சியுடன் உள்நுழைந்தால் அந்த பதற்றத்தில் என் கண்களில் வெறுமையான கதிரைகளைக் காணமுடியவில்லை.

'ஆகா! ரொம்பத் தான் பிந்திற்றமோ?' என வடிவேல் பாணியில் யோசித்தவாறு சென்றால் லோஷன் அண்ணாவிற்குப் பக்கத்து கதிரை வெறுமையாக இருக்க அவர் அதிலே அமரலாம் என சைகை செய்தார்.

(லோஷன் அண்ணாவ எனக்குத் தெரியும் எண்டெல்லாம் தப்புக் கணக்குப் போடக் கூடாது. இந்......தாப் பெரிய உருவம் எழும்பி நிண்டா மற்றவங்களுக்கு மறைக்கும் தானே? அதுக்கு தான் இருக்கச் சொன்னார்.) நானும் இருந்துவிட்டேன்.
சதீஷன் என்பவர் தான் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். சந்திப்பு என்பதைவிட ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வாகத் தான் இருந்தது. Formal meeting என்பதற்கு பேசும் போது யாரோ தமிழ் அர்த்தம் கேட்டதும் ஞாபகத்திற்கு வருகிறது.

ஆதிரை என்பவர் புளொகரின் 10ஆவது பிறந்த நாளும் நேற்று என்பதால் அதைக் கொண்டாடும் முகமாக கேக் வெட்டிக் கொண்டாடும் திட்டத்தை அறிவித்தார். அவர் தான் புளொகரின் 10 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடும் பொறுப்பு முழுவதையும் செய்திருந்தார் என நம்புகிறேன்.சமூகமளித்திருந்த பதிவர்களில் பத்துப் பேர் எழுமாற்றாகத் தெரியப் பெற்று மெழுகுதிரி ஏற்ற அழைக்கப்பட்டார்கள். உண்மையாக அனைவரையும் முதல்முறை பார்த்தமையால் என்னால் முழுமையாக ஞாபகம் வைத்திருக்க முடியவில்லை. மன்னிக்கவும். புகைப்படங்களை கீழே இணைத்திருக்கிறேன்.பின்னர் இன்னும் நான்கு பேர் கேக் ஐ வெட்டினார்கள்.
சுபானு என்பவர் வலைப்பதிவிடுதலும் சட்டதிட்டங்களும் என்ற பெயரிலும், Cherankrish என்பவர் தொழிநுட்ப விடயங்கள் தொடர்பாகவும், லோஷன் அண்ணா வலைப்பதிவிடுலும் அனுபவங்களும் என்ற சார்பிலும், மருதமூரான் திரட்டிகள் பற்றியும் உரையாற்றினார்கள். சொற்பொழிவாற்றினார்கள் என்று சொல்லி உரையாற்றியவர்களை பம்பல் அடிக்க (இது எப்பிடி இருக்கு???!!!) விரும்பவில்லை.

பின்னர் கலந்துரையாடல் இடம்பெற்றது.அதிகம் கதைக்கப்பட்டது விசைப்பலகைகள் தொடர்பாகவும், யாழ்தேவி தொடர்பாகவும் தான்.யாழ்தேவி என்பது குறிப்பிட்ட பிரதேசத்தை குறிப்பது போல இருக்கிறது என சிலர் கருதுவதாக கூறினர். நானும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன் என்பதால் இந்த விடயத்தில் என் கருத்து நடுநிலையாக இருக்காது என நம்புகிறேன். ஆகவே அதைப்பற்றிய கருத்துக்கள் இல்லை.சிலர் காத்திரமான சில கருத்துக்களை முன்வைத்திருந்தார்கள். குறிப்பாக என் கருத்துக்களை அஷோக்பரன் என்பவரும் கொண்டிருந்ததை கண்டு வியந்தேன். ஏனென்றால் அவர் இலங்கை பதிவர்கள் எங்கள் சுயத்தை இழந்து இந்திய மொழிமுறைக்கு மாறியதை எதிர்த்திருந்தார். இதே எதிர்ப்பை நானும் கொண்டிருக்கிறேன் ஆனால் என் பதிவுகளில் சிலவற்றில் இந்தியவழக்கு சிலவேளைகளில் புகுந்திருக்கலாம் என நம்புகிறேன்.
வந்தியத்தேவன் தான் நன்றியுரை ஆற்றினார்.
நடுவில் தரப்பட்ட வடை, பற்றீஸ், கேக், கோப்பி என்பவற்றைப் பற்றி குறிப்பிடாவிட்டால் அவற்றை ஏற்பாடு செய்த புல்லட் என் மீது புல்லட்களை ஏவலாம் என்பதால் அதையும் தெரிவித்து விடுகிறேன். இடக்கிடை புல்லட் வந்து சென்றதையும் குறிப்பிட்டுத் தான் ஆக வேண்டும்.
(எனக்குப் பலரின் அறிமுகம் இல்லாததால் பெயர்களை கூற முடியவில்லை. மேலே கூறிய பெயர்களில் ஏதும் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.)
புகைப்படங்களைப் பார்க்க இங்கே அழுத்துக. http://img24.imageshack.us/gal.php?g=bloggersmeeting001.jpg

ஓர் இளைஞனுக்கும் ஓர் வயதானவருக்குமிடையிலான உரையாடல். ஒரு தடவை நேரம் சொல்வதால் என்ன நடக்கும் எனப் பாருங்கள்.
இளைஞன்: பெரியவரே! நேரம் என்னெண்டு சொல்ல முடியுமா?
முதியவர்: நிச்சயமா முடியாது.
இளைஞன்: ஐயா? ஆனா ஏன்? எனக்கு ஒருக்கா நேரம் சொல்றதால ஏதாவது குறைஞ்சிடுமா?
முதியவர்: ஓம். நிச்சயமா.
இளைஞன்: ஆனா, என்னெண்டு விளங்கப்படுத்த முடியுமா?
முதியவர்: இங்க பார். இப்ப நான் உனக்கு நேரம் சொன்னா நீ நிச்சயமா நன்றி சொல்லுவாய். அதோட நாளைக்கும் வரும் போதும் நேரம் கேப்பாய்.
இளைஞன்: ஓம். சாத்தியம்.
முதியவர்: அதுக்கு பிறகு 2,3 தரம் சந்திக்க வேண்டி வரலாம். நீ என்னட்ட என்ர பெயரயும் முகவரியயும் கேப்பாய்.
இளைஞன்: ஓம். நடக்கலாம்.
முதியவர்: பிறகொருநாள் என் வீட்டுக்கு வருவாய். அதால போகும் போது ஒருக்கா எட்டிப் பாத்திற்று போவம் எண்டு வந்தனான் எண்டு சொல்லுவாய். நானும் மரியாதைக்கு உனக்கு தேத்தண்ணி தருவன். என்ர மரியாதையான நடத்தையைப் பாத்து நீ திரும்ப திரும்ப வீட்டுக்கு வருவாய். இந்த முறை தேத்தண்ணி நல்லா இருந்ததெண்டு சொல்லி யார் தயாரிச்சதெண்டு கேப்பாய்.
இளைஞன்: ஓம். சாத்தியம்.
முதியவர்: பிறகு நான் அது என்ர மகள் எண்டு சொல்லுவன். பிறகு நான் என்ர இளமையான, அழகான மகளை உனக்கு அறிமுகப்படுத்த வேண்டி வரும். நீ என்ர மகளின்ர அழகில மயங்கி நிப்பாய்.
இளைஞன்: (புன்னகைத்தல்)
முதியவர்: அதுக்கு பிறகு நீ என்ர மகள அடிக்கடி பாக்க விரும்புவாய். அவளோட படத்துக்கு போகக் கேப்பாய். பிறகு தனியா எங்கயாவது வெளில போகக் கூப்பிடுவாய்.
இளைஞன்: (புன்னகை)
முதியவர்: அதுக்குப் பிறகு என்ர மகளும் உன்ன விரும்பத் தொடங்குவாள். உனக்காகக் காத்திருக்கத் தொடங்குவாள். நீ அவள காதலிக்கத் தொடங்குவாய். அவள கலியாணம் முடிக்கக் கேப்பாய்.
இளைஞன்: (புன்னகை)
முதியவர்: ஒரு நாள் ரெண்டு பேருமா ஒண்டா வந்து என்னட்ட கல்யாணம் முடிக்க அனுமதி கேப்பீங்க.
இளைஞன்: ஓம். நடக்கும்.
முதியவர்: (கோபமாக) ஒரு மணிக்கூடு கூட இல்லாத உன்ன என்ர மகளுக்கு எப்பயுமே கல்யாணம் கட்டித்தர மாட்டன். தொலைஞ்சு போ!.

எனது அண்ணாவின் செல்வ மகன் ஹரிஷ் லக்ஷ்மன் பிறந்து 10 நாட்களே ஆன நிலையில் எம்மையெல்லாம் விட்டுச் சென்றுவிட்டான். அவனை விரும்பிய அனைவர் சார்பாகவும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை அவன் இறப்பால் வாடும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவன் பிறப்பைக் கூட முழுமையாக எல்லோரிடமும் சொல்லாத நிலையில் அவனின் இறப்புச் செய்தியை சொல்லும் விதி நமக்கு.


பத்து மாத எதிர்பார்ப்பும், பத்து நாள் மகிழ்ச்சியும், ஒரு முழுநாள் இலண்டன் வைத்தியத்தில் நம்பிக்கை கொண்ட எதிர்பார்ப்பும் சிதைந்து, சோகத்தைக் கவிழ்த்துக் கொட்டிவிட்டு ஹரிஷ் போய்விட்டான்.


'குவிமலர் போல் விழி மூடி கண்துயிலும் ஹரிஷ் லக்ஷ்மன் - நீ,
குவலயத்தில் குறு(ம்)நாட்கள் வாழ்ந்துவிட்டுப் போனதென்ன?'


தாயார் அழுகின்றார்.
தந்தையார் உடைந்துவிட்டார்
ஆசை அக்கா தேடுகிறாள்
பேரர்கள் அழுகின்றார்
பேர்த்திகள் புலம்புகின்றார்.
பூட்டிகள் கூட புலம்பி அழுகின்றார்
மாமன்கள், மாமியர்கள்
பெரியப்பர்கள், பெரியம்மாக்கள்
சித்தப்பர்கள், சித்திமார்கள்
அண்ணன்கள், அக்காக்கள்
மைத்துனிகள், மச்சான்கள்
உற்றார், உறவினர்கள்
எல்லார் விழிகளிலும்
இடையறாது (கண்) நீர்வீழ்ச்சி!
எங்கே போனாயடா?
எங்கள் ஹரிஷ் லக்ஷ்மன்…
இறைவனிடம் கேட்டுவிட்டு
இனிமேல் பிறப்பாயா
எங்கள் கிருஷ்ண தயாவிற்கு?
ஆற முடியவில்லை@ ஆற்றுவார்க்கும் கூட –
தேற்ற முடியவில்லை.
தெரிந்தவரும் அறிந்தவரும்
தேற்றுகிறார்…
ஹரிஷ் வக்ஷ்மன் தெரிகிறதா?
திரும்பி வாடா எம் செல்வா…!



பத்து மாதங்கள் தாயின் மணிவயிற்றில் வளர்ந்து, வைத்தியர்களின் கணிப்பிற்கு
பத்து நாட்கள் முன்னர் பிறந்து,
பத்து நாள் மகிழ்வில் தாய் தந்தை உற்றார் உறவினரை திளைக்கவைத்து
ஒரு நாள் நோயில் உயிர்துடிக்க மறைந்து- மீண்டும்
பத்து நாட்கள் வாடாமலராக பேழையுள் கிடந்து காட்சி தந்து


இன்று மண்ணுள் ஆழ்ந்து மூலப் பிரகிருதியுடன் ஒன்றாய்க் கலக்கும்
எம் செல்வனின் ஆத்மா இறைவன் திருவடியடைந்து இன்புற்றிருக்க வேண்டிப்
பிரார்த்திப்பதே எம் கடன்.