க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

நிறைய நாட்களாக தனிப்பட்ட விடயங்கள் காரணமாக எதுவும் எழுதவில்லையே என்று நிறைய கவலையில் இருந்தேன். இன்று தான் நிறைய நாட்களுக்குப் பிறகு ஒரு இடுகையாவது இடுகிறேன்…
நண்பனொருவன் உதவியொன்று கேட்டதற்காக இணைய உலாவும் இடத்திற்குச் சென்றேன்.
அங்கே அந்த நண்பனுக்கு தெரிந்த ஒருவர் வந்து இணையத்தைப் பயன்படுத்திக் கொண்டு இருந்தார். அன்று தான் அஜித் என்ற நடிகரின் புதிய திரைப்படம் வெளியாகி இருந்தது. காலை 10 மணிக்குக் காட்டப்படும் காட்சிக்காக காலை 6 மணியிலிருந்து வரிசையில் நின்று 10 மணிக்குப் படம் பார்த்து விட்டு உடனே அந்த இணைய உலாவும் இடத்திற்கு வந்து 2 மணித்தியாலங்களாக அந்தத் திரைப்படப் பாடல்களை பார்த்துக் கொண்டு இருந்தார். படத்தை அந்தளவு நேரம் காவலிருந்து பார்த்து விட்டு அதே பாடல்களை 2 மணித்தியாலங்களாக பார்க்கத்தான் வேண்டுமா?
எதிர்கால சந்ததி இப்படித் தான் இருக்க வேண்டுமா?
அஜித் குமாரின் படம் மாத்திரமல்ல ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் முதல் யாரினுடைய படமாக இருந்தாலும் நான் இதே கருத்தைத் தான் சொல்லியிருப்பேன்…
இரசிப்பது தவறல்ல… அடிமையாவது தான் தவறு…

உன் கைகளை விட்டு ஏதாவது கைநழுவிச் சென்றுவிட்டால் இறைவன் உன்னைத் தண்டிக்கின்றார் என்று நினைக்காதே… இன்னுமொரு பெரியதை தருவதற்கு உன் கைகளை இறைவன் வெறுமையாக்குகிறார் என்று நினைத்துக் கொள்…

அழுத்தமான வீதிகள் சிறந்த வாகன ஓட்டிகளை எப்போதும் உருவாக்காது…பிரச்சினை இல்லாத வாழ்க்கை சிறந்த மனிதனை உருவாக்காது… வாழ்க்கையைப் பார்த்து 'ஏன் நான் இதற்கு?'  என்று கேட்பதற்குப் பதில் 'இதற்கு நான் தான்' என்று சொல்லப் பழகு…

5,6 தேவதாஸ்கள் உருவாக்கப்பட்டதற்காக பல இலட்சக்கணக்கான அன்னை தெரேஸாக்களை கொண்ட பெண் சமூகத்தை தவறாக கூறுதல் எந்தளவுக்கு சரியானது...?

எப்போதோ ஒருமுறை ஒரு இணையத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது கிடைத்த தகவல்…

1993-1998 காலப்பகுதியில் உலக கணணி ஜாம்பவான் பில்கேட்ஸ் தனது எல்லாவித கணக்குகளுக்கும் (மின்னஞ்சல்கள், கணணி கணக்குகள் உட்பட..) வைத்திருந்த கடவுச்சொல் என்னவென்று தெரியுமா?
IwiLlWInThi$WOrldIn@DecAde
இதே கடவுச் சொல்லைத் தான் எல்லாக் கணக்குகளுக்கும் பயன்படுத்திய பில்கேட்ஸ் இந்த கடவுச்சொல் யாராவது ஒருவரால் களவாடப் பட்டால் என்ன நிலைமை என்று சிந்திக்கவில்லை
ஆனால் பாருங்கள் தனது கடவுச்சொல்லில் பில்கேட்ஸ் குறிப்பிட்டதை எவ்வாறு அடைந்திருக்கிறார் அல்லது நிறைவேற்றியிருக்கிறார் என்று…
(ஆனால் எனக்குள்ள ஒரே சந்தேகம் எவ்வாறு இந்த கடவுச்சொல் வெளியானது என்று…
இந்தத் தகவல் உண்மையானதாக இருக்க வேண்டும் என்று நம்பகிறேன்…)

SOS என்பது அவசர உதவிக்கு அழைக்கப்படும் ஓர் சுருக்கக் குறியீடு ஆகும். சாதாரணமாக கைப் பேசிகளில் காணலாம்.
அவுஸ்ரேலிய அணியின் வளர்ந்து வரும் நட்சத்திரம் ஷோன் மார்ஷ் ற்கும் செல்லப் பெயர் SOS என்பது தான். அணியை ஆபத்திலிருந்து காப்பாற்றுபவர் என்பதால் தான் இந்தப் பெயர் என நீங்கள் யோசிப்பது விளங்குகிறது. ஆனால் அதுவல்ல அர்த்தம். Son Of Swampy என்பது தான் அதற்குரிய அர்த்தமாம். பாருங்கள் சேற்றின் மைந்தன் என்பதை நாகரிகமாக SOS என்று அழைக்கிறார்கள்.
என்னே அறிவு...

ரெண்டுல்கர் சிறுவனாக இருக்கும் போது வலைப்பயிற்சியில் ஈடுபடும் போது மணிக்கணக்காக துடுப்பெடுத்தாடுவாராம். அப்போது அவரின் பயிற்றுனர் இலக்குகளின் மேல் நாணயக்குற்றியொன்றை வைத்துவிட்டு ரெண்டுல்கரை துடுப்பாடச் சொல்வாராம். பயிற்சியின் போது ரெண்டுல்கரின் இலக்கை பந்துவீச்சாளர் கைப்பற்றினால் அந்த நாணயம் பந்து வீச்சாளருக்கு என்றும், ரெண்டுல்கர் தப்பித்தார் என்றால் அந்த நாணயம் ரெண்டுல்கருக்கு என்றும் வைக்கப்பட்டிருக்குமாம். அத்தகைய 13 நாணயங்களை தனது பெரும் சொத்தாக ரெண்டுல்கர் இப்போதும் வைத்திருக்கிறாராம்...

ரெண்டுல்கர் தனது 79 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தான் தனது முதலாவது ஒருநாள் கதத்தைப் பெற்றுக் கொண்டார்.

4 பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் தமது ஆய்வு ஒன்றிற்காக ஒரு வனப்பிராந்தியத்தைப் பார்வையிட சென்றிருந்தார்கள். அதற்கு அடுத்த நாள் அவர்களுக்குரிய ஆண்டுப் பரீட்சையும் இருந்தது. அவர்கள் தமக்குத் தேவையான தகவல்களை பெற்று விட்டு திரும்ப நினைக்கையில் அந்த வனத்தின் இயற்கை கொஞ்சும் எழில் அந்த நான்கு மாணவர்களையும் கவர்ந்து விட ஒரு மாணவன் சொன்னான், 'எம்மிடம் தான் கார் உள்ளதே நாம் இரவு இங்கே தங்கிவிட்டு நாளை அதிகாலை புறப்பட்டு சென்றாலென்ன?'. மற்றவர்களுக்கும் அது பிடித்து விட அதிகாலை நேரத்துக்கே எழுந்து செல்வதென்ற முடிவோடு நித்திரைக்குச் சென்றனர். எழில் கொஞ்சும் வனத்தின் சில்லென்ற தென்றல் அவர்களை வருட அவர்கள் தங்களை மெய்மறந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நித்திரையை விட்டு எழ வேண்டிய நேரத்தை கடந்து நிறைய நேரங்களின் பின்னர் நித்திரையை விட்டு எழுந்து நிலைமையை உணர்ந்து விட்டு விரிவுரையாளரிடம் பொய் சொல்லி சமாளிப்பது என்று பொய்யொன்றையும் தயார் செய்து கொண்டு பல்கலைக்கழகம் சென்றனர். அங்கு சென்று விரிவுரையாளரிடம், 'சேர் நாங்கள் ஆய்விற்காக காட்டுப்பகுதிக்கு சென்று திரும்பும் போது காரின் ரயரில் ஓட்டை ஏற்பட்டதால் அதை சரிசெய்து எடுத்து வர நேரமாகிவிட்டதால் பரீட்சைக்கு தோற்ற முடியவில்லை. ஆய்வுத் தேவைக்காகவே சென்றதால் தயவுசெய்து எங்கள் நால்வருக்கும் வேறு ஒரு பரீட்சை ஏற்பாடு செய்யுங்கள்' என்று கேட்டனர். விரிவுரையாளரும் நாளை வாருங்கள் உங்களுக்கு புதிய பரீட்சை வைக்கிறேன் என்றுவிட்டு சென்று விட்டார். மாணவர்களுக்கோ தங்கள் பொய் வேலை செய்து விட்டதால் ஒரே மகிழ்ச்சி. மகிழ்ச்சியோடு விடுதிகளுக்கு சென்று மறுநாள் வந்தனர்.
விரிவுரையாளர் நான்கு மாணவர்களையும் தனித்தனி அறைகளில் இருத்திவிட்டு பரீட்சை வினாத்தாளை விநியோகித்தார். முதலாவது வினாவை வாங்கிப் பார்த்தார்கள். 'ஆவர்த்தன அட்டவணையில் முதலாவது மூலகம் யாது?' என்பதே முதல் வினா. அதற்கு கீழே அந்த வினாவிற்கு 5 புள்ளிகள் என்று எழுதப்பட்டிருந்தது. மாணவர்கள் அனைவருக்கம் ஒரே மகிழ்ச்சி. ஐதரசன் என்பதை விடையாக எழுதிவிட்டு 5 புள்ளிகளுக்கு இவ்வளவு இலகுவான வினாவா என்று கீழே பார்த்தனர் அதற்கு கீழே '95 புள்ளிகளுக்கான வினாவிற்கு மறுபக்கம் திருப்பவும்' என இடப்பட்டிருந்தது. மாணவர்களும் ஆர்வமாக மறுபக்கம் திருப்பினர்.
அடுத்த பக்கத்தில் 95 புள்ளிகளுக்கான வினா என தலைப்பிட்டு கேட்கப்பட்டிருந்தது 'நீங்கள் வந்த காரின் எந்த சில்லின் ரயருக்கு ஓட்டை ஏற்பட்டது?' என்று. அப்போது தான் அவர்களுக்கு விளங்கியது தாங்கள் எந்த சில்லின் ரயருக்கு ஓட்டை ஏற்பட்டது என்பதை முன்னரே கதைத்திருக்கவில்லை என்பது. பிறகென்ன மாட்டிக் கொண்டார்கள்.
இந்த கதையை நல்ல விதமாக எடுப்பவர்கள் பொய் சொல்லக் கூடாது என்று நினைப்பார்கள், வேறு சிலர் பொய் சொல்லும் போது எல்லாவற்றையும் திட்டமிட்டு பொய் சொல்ல வேண்டும் என்ற படிப்பினையை எடுத்துக் கொள்வார்கள். ஏனெனில் இவர்கள் மகாத்மா காந்தியின் நண்பரொருவரின் பரம்பரையினர்.
(பெருமையாக நினைக்க வேண்டாம். மாகாத்மா காந்தியும் அந்த நண்பரும் அரிச்சந்திரன் நாடகத்தை பார்க்கச் சென்றார்களாம். நாடகம் நிறைவடைய இந்த நாடகத்திலிருந்து என்ன விடயத்தை பெற்றுக் கொண்டீர்கள் எனக் கேட்டதற்கு மகாத்மா காந்தி சொன்னாராம் 'உண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டேன். இன்றிலிருந்து இனி பொய் சொல்வதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறேன்' என்று. அந்த நண்பர் சொன்னாராம் 'அவசரத்துக்கு பொண்டாட்டியையும் அடகு வச்சக்கலாம் எண்டத படிச்சுக் கொண்டன்' என்று.)