க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

போட்டியில் துடுப்பெடுத்தாடும் அணியின் சார்பாக களமிங்கும் இருவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாவர்.(openers)
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பொதுவாக அணியின் விசேடித்த துடுப்பாட்ட வீரர்களாக இருப்பர். ஏனெனில் ஆரம்ப பந்துப் பரிமாற்றங்களில் பந்தானது அதிகம் திரும்பும் தன்மை கொண்டதாக காணப்படும், அத்தோடு அதிகம் மேலெழும்பும் தன்மை கொண்டதாக காணப்படும். ஏனெனில் ஆரம்ப நிலைகளில் பந்தானது இறுக்கமாகவும் புதியதாகவும் மினுங்கும் தன்மை கொண்டதாகவும் காணப்படும்.. எனவே தமது ஆட்டத்தை காப்பாற்றி கொள்வதோடு அணிக்கு ஓட்டங்களை பெற்று ஓட்ட விகிதத்தை கௌரவாக பேணினால் மட்டுமே ஏனைய துடுப்பாட்ட வீரர்களால் அழுத்தமெதுவுமின்றி ஓட்டங்களை பெற முடியும். எனினும் ஆரம்ப பந்து பரிமாற்றங்களில் களத்தடுப்பு மட்டுப்பாடுகள் காணப்படுவதால் 4 ஓட்டங்களை பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களுக்கு அடுத்து களமிறங்குபவர் முதலாவது இறக்க வீரர்(one down) எனப்படுவார். முதலாவது இறக்க வீரருக்கு அடுத்து களமிறங்குபவர் இரண்டாவது இறக்க வீரர்(two down) எனப்படுவார். 1 ஆவது மற்றும் 2 ஆவது இறக்க வீரர்கள் பொதுவாக அணியின் பிரதான துடுப்பாட்ட வீரர்களாக இருப்பர். ஆரம்ப இலக்குகள் விரைவாக சரிந்தால் அணியை காப்பாற்றும் பொறுப்பு இவர்களுடையது.

களத்தடுப்பு செய்யும் அணி சார்பாக முதலிரண்டு பந்துப் பரிமாற்றங்களையும் வீசும் வீரர்கள் ஆரம்ப பந்து வீச்சாளர்கள்(open bowlers) ஆவர். மூன்றாவதாக பந்து வீசுபவர் முதலாவது மாற்ற பந்து வீச்சாளர்(1st change bowler) எனப்படுவார். நான்காவதாக பந்து வீசுபவர் இரண்டாவது மாற்ற பந்து வீச்சாளர்(2nd change bowler) எனப்படுவார்.
ஆரம்ப பந்து வீச்சாளர்கள் பந்தை திருப்பும் வல்லமையை கொண்டிருத்தல் அணிக்கு சாதகமாக இருக்கும்.

ஆரம்ப பந்து வீச்சாளர்கள் வேகப் பந்து வீச்சாளர்கள் வேகப் பந்து வீச்சாளர்களாக காணப்படுவர். ஏனெனில் ஆரம்ப பந்துப் பரிமாற்றங்களில் பந்து வழுக்கும் தன்மை பொண்டதாக காணப்படுமாதலால் பந்தை இறுக்கமாக பற்றி சுழற்றுவது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கடினமானது. அத்தோடு சுழற்பந்து வீச்சுக்கள் இலகுவாக உயர்த்தி அடிக்கக் கூடியனதானதால் (காரணம் வேகம் குறைவு) எல்லைக் கோடுகளில் களத்தடுப்பு அவசியம், ஆனால் ஆரம்ப நிலைகளில் களத்தடுப்பு கட்டுப்பாடு காணப்படுவதால் எல்லைக்கோடுகளில் அதிகமான களத்தடுப்பாளர்கள் களத்தடுப்பில் ஈடுபடல் சாத்தியமற்றது.


துடுப்பாட்ட அடிகள்...(Batting shots)
துடுப்பாட்ட அடிகள் ஆடும் போது பந்து விழும் இடத்திற்கு கிட்டவாக கால்கள் வைக்கப்பட்டு துடுப்பு கால்களுக்கு அருகில், அத்தோடு கால்களுக்கு முன்னால் வைத்து ஆடப்படும்.

தடுத்தாடுதல்-(blocking)
 கால்களை வைத்து துடுப்பை பந்திற்கு நேரே வைத்தல்.
 இது இரண்டு வகைப்படும்.
 1. முன் தடுத்தாடல்-(forward defense)
  கால்களை முன்னோக்கி வைத்து துடுப்பை பந்திற்கு நேரே வைத்தல்.
  இது இடை உயரத்திற்கு கீழ் வரும் பந்துகளை ஆடுவதற்கு பயன்படும்       முறையாகும்.
 2. பின் தடுத்தாடல்-(backward defense)
  கால்களிரண்டையும் பின்னோக்கி வைத்து சிறிது கால் விரல் நுனியில் நின்று      தடுத்தாடல். இது இடை உயரத்திற்கு மேல் வரும் பந்துகளை ஆடுவதற்கு பயன்படும்     முறையாகும்.

ட்ரைவ்-(drive)
 கால்களை வைத்து துடுப்பால் பந்தை முன்னோக்கி அடித்தல் ஆகும். இங்கு கால்களுக்கு அருகில் துடுப்பு   காணப்படும்.
 இங்கு முக்கியமான விடயம் அடித்த பின் பந்தானது தரையை ஒட்டியே செல்லும்.
 இது பிரதானமாக இரண்டு வகைப்படும்.
 1. முன் ட்ரைவ்-(fronfoot drive)
  கால்களை முன்னோக்கி வைத்து துடுப்பை பந்திற்கு நேரே வர முன்னோக்கி அடித்தல்..
  இது இடை உயரத்திற்கு கீழ் வரும் பந்துகளை ஆடுவதற்கு பயன்படும்       முறையாகும்.
  அடிக்கும் பந்து செல்லும் இடத்தை பொறுத்து இது 4 வகைப்படும்.
  1. கவர் ட்ரைவ்- (cover drive)கவர் திசைக்கு செல்வது.
  2. ஒன் ட்ரைவ்-(on drive) கால்த் திசையில் செல்வது.
  3. ஓவ் ட்ரைவ்-(off drive)துடுப்பாட்ட வீரரின் வலது புறத்தில் செல்வது.
  4. ஸ்ரெயிட் ட்ரைவ்-(straight drive) பந்து வீச்சாளர் ஓடி வரும் பகுதிக்கூடாக அதாவது மிட்    ஓவ் இற்கும்(mid-off) மிட் ஓனிற்குமிடையில்(mid-on) செல்வது.
 2.பின் ட்ரைவ்-(backfoot drive)
  கால்களிரண்டையும் பின்னோக்கி வைத்து சிறிது கால் விரல் நுனியில் நின்று அடித்தல்.
  இது இடை உயரத்திற்கு மேல் வரும் பந்துகளை ஆடுவதற்கு பயன்படும் முறையாகும்.
  இதுவும் மேற்கூறியவாறே 4 வகைப்படும்.


கட் அடி-(cut shot)
 வலது புறத்தில் சற்று அகலமாக செல்லும் பந்துகளை பின்னங்காலை வலது புறத்தில் வைத்து தலையை பந்தை நோக்கி முன்னோக்கி செலுத்தி அடித்தல். இந்த அடியானது கவர் பிரதேசத்திற்கும் ஹலி(gully) பிரதேசத்திற்குமிடையில் செல்லும்.

புள் அடி-(pull shot)
 உயர்ந்து உடம்பை நோக்கி வரும் பந்துகளை இடது மூலைப்பகுதியூடாக(square leg) மட்டையை கிடையாக அடித்து ஆடுதல்.

குக் அடி-(hook shot)
 புள் அடியைப் போன்றது. எனினும் சிறிது உயரம் கூடிய பந்துகளை பொதுவாக ஆறு ஓட்டங்களை  எதிர்பார்த்து அடிக்கப்படுவது.

ஸ்வீப் அடி-(sweep shot)
 சுழற்பந்து வீச்சை முன்னங்காலை முன்னே வைத்து முன்னங்காலை மடித்து பின்னங்கால் முட்டியில்  இருந்தவாறு மட்டையை கிடையாக டீப் ஸ்கூயார் லெக்(deep square leg) பகுதியை நோக்கி அடிக்கப்படுவது.

முன் தடுத்தாடல், பின் தடுத்தாடல், முன் ட்ரைவ், பின் ட்ரைவ், கட் அடி, புள் அடி, ஸ்வீப் அடி என்பன கிறிக்கெற்றின் ஆரம்ப அடிகள்(basic shots) அல்லது பிரதான அடிகள் எனப்படும்.

இவற்றை தவிர
 லெக் கிளான்ஸ்(leg glance), திருப்பல் அடி(reverse sweep) என்பனவும் உண்டு.
 லெக் கிளான்ஸ் என்பது பந்தை இடது புறம் நோக்கி மெதுவாக திருப்பி விடுதல் ஆகும்.
 திரும்பல் அடி என்பது ஸ்வீப் அடிக்கு வைப்பது போல கால்களை வைத்து விட்டு மட்டையை திருப்பி கவர்  அல்லது பொயின்ற் திசை நோக்கி அடித்தல் ஆகும்.
இவை வரையறுக்கப்படக் கூடிய அடிகளாகும்.
இவற்றை தவிர வேறு அடிகளும் உண்டு. இவ்வகை அடிகள்(குறுக்கு அடிகள்- cross shots) போட்டி இறுதிப் பந்துப் பரிமாற்றங்களிலோ அல்லது 'றபிற்(rabbit)', 'பெரற்(ferret)' என அழைக்கப்படும் குறை திறனுடைய வீரர்களால் ஆடப்படும். இங்கு கால்கள் வைக்கப்படும் இடத்துக்கும் அடிக்கப்டும் திசைக்குமிடையில் எவ்வித சம்பந்தமும் காணப்படாது.


பவர் பிளே.....(power play)

பவர் பிளே என்பது களத்தடுப்பு கட்டுப்பாடுகளுக்கானது அகும்.
3 வகை பவர் பிளே கள் உண்டு.
1 ஆவது பவர் பிளே-
 1ஆவதிலிருந்து 10 ஆவது பந்துப் பரிமாற்றங்கள் வரை வீசப்படும்.
 2 களத்தடுப்பு வீரர்கள் 30 யார் வட்டத்திற்கு வெளியே நிற்க அனுமதிக்கப்படுவர். அத்தோடு 2 வீரர்கள்  கட்டாயமாக பிடியெடுக்கும் களத்தடுப்பு நிலை(catching positions) எனப்படும் 15 யாருக்கு உட்பட்ட பகுதியில் களத்தடுப்பில் ஈடுபடல் வேண்டும்.
2 ஆவது பவர் பிளே-
 இது 5 பந்துப் பரிமாற்றங்களை உடையது. களத்தடுப்பு அணித்தலைவர் தான் விரும்பிய நேரத்தில்  பயன்படுத்த அனுமதிக்கப்படுவார். இங்கும் 2 களத்தடுப்பு வீரர்கள் 30 யார் வட்டத்திற்கு வெளியே நிற்க  அனுமதிக்கப்படுவர். ஆனால் பிடியெடுக்கும் களத்தடுப்பு நிலையில் 2 பேர் நிற்க வேண்டிய கட்டாயம்  இல்லை.
3 ஆவது பவர் பிளே-
 இதுவும் 5 பந்துப் பரிமாற்றங்களை உடையது. இதையும் களத்தடுப்பு அணித்தலைவர் தான் விரும்பிய  நேரத்தில் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார். 3 களத்தடுப்பு வீரர்கள் 30 யார் வட்டத்திற்கு வெளியே நிற்க   அனுமதிக்கப்படுவர். பிடியெடுக்கும் களத்தடுப்பு நிலை பற்றி இங்கும் எந்த கட்டுப்பாடும் கிடையாது.

2 ஆவது பவர் பிளேயை எடுத்து விட்டுத்தான் 3 ஆவது பவர் பிளேயை எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. மாறியும் பயன்படுத்தலாம்.

இலவச அடி-(free hit)
மட்டுப்படுத்தப்பட்ட பந்துப் பரிமாற்ற போட்டிகளில் ஒரு பந்து வீச்சாளர் கால்களை கோட்டிற்கு வெளியே வைப்பதன் மூலம் முறையற்ற பந்தொன்றை வீசுவாராயின் அந்த பந்து முறையற்ற பந்தாக அறிவிக்கப் படுவதோடு அடுத்த பந்து இலவச அடி என வழங்கப்படும். அந்தப் பந்தை வீச முன்னர் களத்தடுப்பில் மாற்றங்களை செய்ய அணித்தலைவரால் முடியும், எனினும் 5 பேர் மட்டுமே 30 யார் கோட்டிற்கு வெளியே நிற்பது அனுமதிக்கப்படும். இலவச அடியில் துடுப்பாட்ட வீரர் இலக்கு சரிதல், எல்.பி.டபிள்யு, ஸரம்ப்ற், பிடியெடுத்தல், இலக்கை மோதுதல் ஆகிய 5 முறைகளால் ஆட்டமிழக்க முடியாது. பந்தை கையாளுதல், களத்தடுப்பிற்கு இடைஞ்சல் செய்தல், பந்தை இருமுறை அடித்தல் என்பன அரிதானவை என்பதாலும், நேர ஆட்டமிழப்பிற்குரிய நிலைமைகள் இங்கு இல்லை என்பதாலும் இங்கு துடுப்பாட்ட வீரர் ரன் அவுட் முறையிலேயே ஆட்டமிழக்கலாம். எனவே துடுப்பாட்ட வீரர் எந்த வித பயமுமின்றி 6 அல்லது 4 ஓட்டங்களை பெறும் நோக்கோடு அடிக்க முற்படுவார்.


இரவுக் காவலாளி-(night watchman)
 ரெஸ்ற் போட்டிகளில் ஒரு குறிப்பிட்ட நாளின் ஆட்டம் முடிவடையும் தருணத்தில் ஓர் அணி புதிதாக துடுப்பெடுத்தாட ஆரம்பிக்கையில் அல்லது குறிப்பிட்ட நாளின் ஆட்டம் முடிவடையும் தருணத்தில் ஓர் புதிய வீரர் துடுப்பாட்ட வீரர் துடுப்பெடுத்தாட வேண்டி ஏற்படின் விசேடித்த துடுப்பாட்ட வீரருக்கு பதிலாக கீழ் வரிசை துடுப்பாட்ட வீரரொருவர் களமிறங்கி இலக்கு சரிவதை கட்டுப்படுத்தவார். ஆட்டம் முடியும் நேரத்தில் இலக்குகள் சரிவது விரைவாக நிகழும். இதற்கு தொழிநுட்ப ரீதியாக பெரிய காரணங்கள் இல்லாவிடினும் கடைசி நேரத்தில் துடுப்பாட்ட வீரர்களின் மன நிலையில் ஏற்படும் தொய்வும், அழுத்தமுமே காரணம் என கூறப்படுகிறது. எனவே விசேடித்த துடுப்பாட்ட வீரர் மறுநாள் அழுத்தமின்றி புதிய மனநிலையோடு துடுப்பெடத்தாட வழிவிட உதவும். இரவுக் காவலாளியாக செல்பவர் மறுமுனையில் நிற்கும் விசேடித்த துடுப்பாட்ட வீரரையும் காக்கும் விதமாக தானே அதிகளவு பந்துகளை விளையாடுவதோடு இயலுமானவரை விசேடித்த துடுப்பாட்ட வீரர் அடித்தாடாத பகுதியில்(non-striker's end) நிற்பதை உறுதி செய்வார். இரவுக் காவலாளியாக களமிறங்குபவர் பந்தை நன்றாக தடுத்தாடும் திறனை கொண்டிருக்க வேண்டும்.
(அவுஸ்ரேலிய அணியின் ஜேசன் கிலஸ்பி இரவுக் காவலாளியாக களமிறங்கி 200 ஓட்டங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. இரவுக்காவலாளி ஒருவரால் பெறப்பட்ட ஒரே இரட்டைச் சதம் இதுவாகும்.)

0 பின்னூட்டங்கள்: