க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

யூலை மாதம் 8ம் திகதி 1972ம் ஆண்டு இந்தியாவின் கல்கத்தா பிரதேசத்தில் பிறந்தவர் தான் இந்த வங்காளப் புலி, கொல்கத்தாவின் இளவரசன், டாடா, மகாராஜா என்றெல்லாம் அழைக்கப்படுகின்ற சவ்ரவ் கங்குலி.

இந்தியாவின் மிகச்சிறந்த ரெஸ்ற் அணித்தலைவர், இந்தியாவின் மிகச்சிறந்த இடதுகைத் துடுப்பாட்ட வீரர் போன்ற பெருமைகளை தன்னகத்தே கொண்ட ஆக்ரோஷமான வீரர்.

11ம் திகதி ஜனவரி 1992ம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக தனது ஒருநாள் அறிமுகத்தைப் பெற்ற மகாராஜாவால் 4 வருடங்களுக்கு மேலாக காத்திருக்க வேண்டி ஏற்பட்டது தனது ரெஸ்ற் அறிமுகத்தை மேற்கொள்ள. 20ம் திகதி யூன் மாதம் 1996ம் ஆண்டு தான் கங்குலியால் தனது ரெஸ்ற் அறிமுகத்தைப் பெற்றுக் கொள்ள முடிந்தது.

அவுஸ்ரேலிய தொடரிற்கு முன்னர் 109 ரெஸ்ற் போட்டிகளில் 41.74 என்ற ஓட்ட சராசரியையும், ஒரு நாள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் 311 போட்டிகளில் 41.02 என்ற ஓட்ட சராசரியையும் கொண்டிருந்தார். ஒரு நாள் போட்டிகளில் 100 இலக்குகளையும் கைப்பற்றியிருக்கும் கங்குலி ஒரு நாள் போட்டிகளில் தன்னை ஒரு சகலதுறை ஆட்டக் காரராக வெளிப்படுத்தினார்.
மிதவேகப் பந்து வீச்சாளரான கங்குலி பந்துகளை இலக்குகளுக்கு நேரே வீசும் இயல்பைக் கொண்டிருந்ததால் ஒருநாள் போட்டிகளில் அடித்து ஆட முற்படும் போது ஆட்டமழக்க சாத்தியக்கூறுகள் அதிகம். ஆனால் ரெஸ்ற் போட்டிகளில் வீரர்கள் அவ்வளவாக அடித்து ஆட மாட்டார்கள் என்பதால் கங்குலியால் 32 இலக்குகளையே கைப்பற்ற முடிந்தது.
ஆனால் துடுப்பாட்ட வீரராக 11 363 ஓட்டங்களை ஒருநாள் போட்டிகளில் பெற்றிருக்கும் கங்குலி உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரே.

தனது ஆக்ரோஷமான அணித் தலைமைப் பண்பால் பலதரப்பட்ட வெற்றிகளை பெற்றுக் கொடுத்த கங்குலிக்கு அதே குணம் தான் எதிரியாக அமைந்தது. மைதானத்தில் ஆக்ரோஷமாக காணப்படும் கங்குலி பலதரப்பட்ட சர்சசைகளிலும்  சிக்கினார்.

கொல்கத்தாவின் செல்வந்தர்களில் ஒருவரான சண்டிதாஸ் அவர்களின் புதல்வனாக பிறந்த கங்குலியின் சகோதரரும் ஓர் கிறிக்கெற் வீரராவார். ஆரம்பத்தில் வலதுகைத் துடுப்பாட்ட வீரரான கங்குலி, தனது சகோதரரின் துடுப்பாட்ட உபகரணங்களை பயன்படுத்துவதற்காக இடதுகைத் துடுப்பாட்ட வீரராக மாறினார்.
(எல்லாம் நன்மைக்கே என்பதற்கு கங்குலியும் ஓர் சிறந்த உதாரணமாவார். சிலவேளைகளில் வலதுகைத் துடுப்பாட்ட வீரராக இருந்திருந்தால் இந்தளவுக்கு புகழ்பெற்றிருக்காமல் போயிருக்கவும் இடமுண்டு.)

தனது முதலாவது போட்டியில் வெறும் 3 ஓட்டங்களையே பெற்ற கங்குலி அணியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். பின்னர் 1996ம் ஆண்டுக்கான இங்கிலாந்து சுற்றுலாவுக்காவுக்காக மீண்டும் அழைக்கப்பட்ட கங்குலி ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடினார், அனால் முதலாவது ரெஸ்ற் போட்டியில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் நவ்ஜோத் சித்து அணியிலிருந்து வெளியேற லோட்ஸ் போட்டியில் ஆட வாய்ப்புப் பெற்ற கங்குலி தனது ரெஸ்ற் அறிமுகத்தை மேற்கொண்டார். அந்தப் போட்டியிலேயே ராகுல் ராவிட்டும் ரெஸ்ற் அறிமுகத்தை மேற்கொண்டார். முதல் இனிங்க்ஸில் 131 ஓட்டங்களை பெற்ற கங்குலி அன்றைய காலகட்டத்தில் தனது முதலாவது போட்டியில் லோட்ஸ் மைதானத்தில் சதமடித்த 3ஆவது வீரராக பதிவேட்டில் இடம்பிடித்தார். கங்குலியின் பின்னர் அன்ட்டூ ஸ்ரோஸ், மற் பிறயர் போன்றோரும் இச்சாதனையை புரிந்த போதும் 131 ஓட்டங்கள் என்பதே இதுவரையில் லோட்ஸ் மைதானத்தில் அறிமுக வீரர் ஒருவரால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும். அடுத்த ரெஸ்ற் போட்டியில் முதலாவது இனிங்ஸ்ஸில் 136 ஓட்டங்களை பெற்ற கங்குலி தனது முதலிரண்டு இனிங்க்ஸ்களிலும் சதமடித்த மூன்றாவது வீரராக சரித்திரத்தில் இடம்பிடித்தார். அந்தப் போட்டியில் சச்சின் ரென்டுல்கருடன் 255 ஓட்டங்களை பகிர்ந்த கங்குலி இந்தியாவை விட்டு வெளியே இந்தியர்கள் இருவரால் பெறப்பட்ட சிறந்த இணைப்பாட்டம் என்ற சாதனைக்கும் சொந்தக் காரரானார்.

ஆரம்ப காலத்தில் அசுரவேகத்தில் வளர்ந்து வந்த கங்குலிக்கு ஆப்பாக அமைந்தது 200ம் ஆண்டு தான். அந்த ஆண்டில் தான் அணித்தலைவராக ஆன போதிலும் 2000ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெற் பேரவை கொண்டுவந்த 'ஒரு நாள் போட்டிகளில் ஒரு பந்துப் பரிமாற்றத்திற்கு ஒரு தோட்பட்டைக்கு மேலால் செல்லும் பந்தை வீசலாம்' என்ற விதி தான் கங்குலியின் கிரிக்கெற் வாழ்க்கையை ஆட்டிப் பார்த்தது. ஏனென்றால் கங்குலிக்கு பெளன்சர் பந்துகளுக்கு ஆட்டமிழக்கும் ஒரு குறைபாடு இருந்தது. 200ம் ஆண்டுக்கு முன்பு 45.5 என்ற சராசரியை கொண்டிருந்த கங்குலி 2001-2005 வரையான காலப்பகுதியில் 34.9 என்ற அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. அதிலும் ரெஸ்ற் விளையாடும் நாடுகளுக்கு எதிராக (சிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் உட்பட) அவரது சராசரி 30.66 என்றளவுக்கு வீழ்ச்சியடைந்ததுது. இந்த 2001-2005 காலப்பகுதியில் 6 தடவை நூறு ஓட்டங்களைப் பெற்ற கங்குலி அதில் 3 தடவை கென்ய அணிக்கெதிராகவும், 1 தடவை நமீபிய அணிக்கெதிராகவும் பெற்றிருந்தார். எனவே இந்தக் காலப்பகுதி கங்குலிக்கு சோதனைக் காலப்பகுதியாக அமைந்தது. இந்தக் காலப்பகுதியில் கங்குலி ஏராளமான தடவைகள் தோட்பட்டைக்கு மேலால் செல்லும் பந்துகளிலேயே ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் 2001ம் ஆண்டில் போடர்-கவாஸ்கர் கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றும் வகையில் அணியை வழிநடத்தியமையால் ஏராளமான பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டார் கங்குலி. அத்தோடு பாகிஸ்தான் அணிக்கெதிராக ரெஸ்ற் மற்றும் ஒருநாள் தொடர்களில் முதல் முதலாக இந்திய அணியை வெற்றி பெறச் செய்தமையும் கங்குலியின் சிறந்த அணித்தலைமைத்துவத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்.

2005ம் ஆண்டு அணியிலிருந்து தூக்கி எறியப்பட்ட கங்குலி 2006ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சம்பியன் பட்டப் போட்டிகளில் ஏற்பட்ட தோல்வியினாலும் தென்னாபிரிக்க அணிக்கெதிரான தொடரில் 4-0 என்ற ரீதியில் வெள்ளையடிப்புச் செய்யப்பட்டதாலும் அணிக்கு மீள அழைக்கப்பட்டார்.
தென்னாபிரிக்க ஏ அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி 37 ஓட்டங்களுக்கு 4 இலக்குகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த பொழுது களமிறங்கி போட்டி வெல்ல காரணமான 85 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இந்தப் போட்டியில் கங்குலியின் துடுப்பாட்ட முறையில் மாற்றங்கள் காணப்பட்டன. வழமையாக கால்புற இலக்கில்(லெக் ஸ்ரம்ப்) நின்று ஆடும் கங்குலி அந்தப் போட்டியில் நடு இலக்கில்(மிடில் ஸ்ரம்ப்)  நின்று ஆடியமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் தென்னாபிரிக்க அணிக்கெதிரான குறைந்த ஓட்டங்கள் அடிக்கப்பட்ட ரெஸ்ற் போட்டியில் போட்டியை வெல்ல காரணமான 52 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இதன் மூலம் தனது மீள்வருகையை ஸ்திரப்படுத்திக் கொண்டார்.
மீள்வருகையின் போது தனது தோட்பட்டைப் பந்துகளுக்கு ஆட்டமிழக்கும் குறைபாட்டடிலிருந்து விடுபட்டிருந்தமை கங்குலிக்கு பெருத்த அனுகூலமாக அமைந்தது.

இந்த அசத்தலான ரெஸ்ற் மீள்வருகையை தொடர்ந்து ஒருநாள் அணிக்கு மீள அழைக்கப்பட்ட கங்குலி இரண்டு வருடங்களின் பின்னர் தான் ஆடிய முதல் ஒருநாள் சர்வதேச போட்டியில் போட்டியை வென்று கொடுத்த 98 ஓட்டங்களை பெற்றக் கொடுத்ததோடு இலங்கைக்கு எதிரான அத்தொடரில் 70ற்கு மேற்பட்ட சராசரியைக் காண்பித்து தொடராட்ட நாயகன் விருதையும் பெற்றுக் காண்டார்.

அதன் பின்னர் 2007ம் ஆண்டில் உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்திய அணி வங்காளதேச அணிக்கெதிராக தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. எனினும் அத்தொடரில் இந்திய அணி சார்பாக அதிக ஓட்டங்களை  பெற்றவர் கங்குலி ஆவார். இந்த வெளியேற்றத்தின் பின் அணியின் பயிற்றுவிப்பாளரான கிரேக் சப்பலுக்கம் கங்குலிக்குமிடையே முறுகல்கள் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

டிம்பர் மாதம் 12 ம் திகதி கங்குலி தனது முதலாவது இரட்டைச் சதத்தினை பாகிஸ்தான் அணிக்கெதிராக பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

2007ம் ஆண்டு கங்குலிக்கு ஒரு வசந்த காலமாகவே அமைந்தது.
ரெஸ்ற் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் 2007ம் ஆண்டில் பெற்றவர்களில் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டார் கங்குலி. (1106 ஓட்டங்கள்,  3 முறை நூறு ஓட்டங்கள், 4முறை 50 ஓட்டங்கள், சராசரி 61.44)(முதலிடம் ஜக்ஸ் கலிஸ்).
ஒருநாள் போட்டிகளில் 5 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார் கங்குலி. (சராசரி 44.28)

ஒக்ரோபர் மாதம் 2008 ஆண்டு 7ம் திகதி இந்த சாதனை மன்னன் தனது ஓய்வை அறிவித்தார். அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இந்தத் தொடருடன் ஓய்வு பெறுகிறார் கங்குலி.

சுழற்பந்து வீச்சுக்களை சிறப்பாக சந்திக்கும் திறமை படைத்த இந்த மகாராஜா, சுழற்பந்து வீச்சுக்கு இரண்டு கால் முன்னே வைத்து பந்தை லோங் ஓன் அல்லது லோங் ஓப் பகுதியூடாக ஆறு ஓட்டங்களை அடிக்கும் திறனை மிஞ்சிவிட இந்த உலகில் இதுவரை ஒருவர் பிறக்கவில்லை என்பதே உண்மையாகும்.

1 பின்னூட்டங்கள்:

உங்களோட தமிழ் ரொம்ப அழகா இருக்கு. அதற்க்காகவே படிக்கலாம். ரொம்ப நல்லாருக்கு.
:)