குடும்பத்தில் வறுமை, பிரச்சினை, அக்கா தங்கைகளுக்கு திருமணம் செய்ய பணமில்லை, குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று நகைகளை, வீட்டை அடைவு வைத்து விட்டு கதாநாயகன் சோகப்பாடல் பாடுவதாக அமெரிக்காவில் படம் எடுக்க முடியுமா...
முடியாது...
ஏனென்றால் குடும்பம், அதன் கட்டமைப்பு என்றால் என்னவென்றே தெரியாமல் வாழந்து கொண்டிருக்கிறார்கள்... ஆனால் நாங்கள் அப்படியா...
தமிழர்களின் பாரம்பரியங்களில் குடும்பம் என்ற கட்டமைப்பும் ஒன்று...
சமூகம் என்ற கட்டமைப்பை இந்த உலகிற்கு எடுத்துக் காட்டிய பெருமை எங்கள் தமிழ் சமூகத்தை சார்ந்தது.
சிவாஜி கணேசன் அவர்களின் படம் ஒன்றின் பாடலில் இந்த வசனம் வரும்...
'எங்களுக்கு குறை என்றால் கடவுளிடம் முறையிடுவோம், ஆனால் கடவுளே கண்கலங்கி நின்றால் நாங்களெல்லாம் என்ன செய்வோம்' என்று...
அதே போலத்தான்... சமூகக் கட்டமைப்பை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்தோம்... ஆனால் எங்களிலே சமூகக் கட்டமைப்பிலே குழப்பம் என்றால் எங்களுக்கு யார் சொல்லித் தருவார்...???
சமூகக் கட்டமைப்பைப் பற்றி கதைக்க முற்பட்டாலே முதலாவதாகவே வருவது சமூகக் கலாசார சீரழிவுகள். இதில் கொடுமையான விடயம் என்னவெனில் பலர் கலாசாரம் என்பதை கலாச்சாரம் என்று குறிப்பிட்டு வருகின்றனர். கலாசாரம் என்பததை சரியாக எழுத்துக்கூட்ட முடியாதவர்களால் எவ்வாறு கலாசாரத்தை வளர்க்க முடியும்?
ஆனால் கலாசாரம் என்ற வகைக்குள் பெண்களை மட்டும் உள்ளெடுத்து உடைகளை பற்றி கதைத்து கலாசார சீரழிவு என்று கூறுவதில் எந்த வித பிரயோசனமும் இல்லை.
ஏனென்றால் கலாசாரம் என்பது மிக விரிவானது.
எமது கலாசார முறையை பற்றி சிறப்பாக எடுத்துக்காட்ட கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதத்தில் அருமையாக குறிப்பிட்டிருப்பார்...
'பெண்கள் வெளியே செல்லும் போது எதிரே ஆண்களை கண்டால் தமது ஆடைகளை சரிசெய்து கொள்வார்கள். தமது ஆடைகள் சரியாக இருந்தாலும் அதை உறுதிப்படுத்துவதற்காக சரிசெய்து கொள்வார்கள். அதற்கு காரணம் தங்கள் ஆடை விலகுவதன் மூலம் எதிரெ வரும் ஆடவனின் மனம் சஞசலமடையக் கூடாது என்பதாகும்.'
இங்கே அவர் ஆடைகளை பற்றி கதைக்கவில்லை, மாறாக மனத்தூய்மையை பற்றிக் கதைக்கின்றார்.
எமது கலாசாரத்தில் மனத்தூய்மை என்பது மிக மிக முக்கியமானது.
இன்று எங்களிடம் மனத்தூய்மை இருக்கிறதா??? நாங்கள் அனைவரும் எங்கள் மனதை தொட்டுப்பார்த்து எம்மிடமே இரகசியமாக கேட்க வேண்டிய கேள்வி இது.
இன்று திரைப்படங்களில் ஓர் வசனம் பொதுவாக வருவதை அவதானித்தேன்...
'திருமணத்தின் முன் தான் எந்த ஆணையும் நினைத்துப் பார்க்கவில்லை என்று ஒரு பெண்ணாலும், திருமணத்தின் முன் தான் எந்த பெண்ணையும் நினைத்துப் பார்க்கவில்லை என்று ஒரு ஆணாலும் கூற முடியுமா? ஒருவராலும் கூற முடியாது. எல்லோரும் அப்படித்தான்'. இப்படியான வசனங்கள் எமது கலாசாரத்தை எந்த வகையில் வெளிப்படுத்துகின்றன?
உலகில் சிறந்த கற்புக்கரசிகள் யாரென்று கேட்டால் உடனே சீதை, கண்ணகி என்று புராண கால பெயர்களை சொல்லும் இன்றைய ஆண்கள் ஏன் தனது தாய், மனைவி, அக்கா, தங்கை, உறவுகளை சொல்வதில்லை? தங்கள் உறவுகள் மீது நம்பிக்கை இல்லையா?
ஏன் பெண்கள் கூட கண்ணகி, சீதை என்று தானே கூறுகிறார்கள்? ஏன் நீங்கள் உங்களையும், உங்கள் அம்மாவையும், உறவுகளையும் சொல்வதில்லை? நீங்கள் சரியாக இருக்கிறீர்கள் என்றால் உங்களை நீங்களே கற்பில் சிறந்தவர்கள் என்று உங்கள் மனதில் திடமான எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதன்பிறகு உலகமே உங்களை சீதை, கண்ணகிக்குப் பதிலாக சொல்லும்.
நாங்கள் ஏன் உலகத்திற்காக வாழவேண்டும், என்னைப் பொறுத்தவரை நான் சரியாக இருந்தால் போதும் என்று சொல்பவரா நீங்கள்? சரி உலகம் வேண்டாம், உங்கள் கணவன், தாய், சகோதரர்கள், சகோதரிகளாவது சொல்ல வேண்டாமா?
கண்ணகி தனது கற்பால் மதுரையை எரித்தது உண்மையானால் உங்களாலும் இந்த உலகத்தையே எரிக்க முடியும்.
ஆண்களினதும், பெண்களினதும் மனதில் தூய்மை ஏற்பட்டால் எம் நாடு வளப்பெறும், என் நாடு வளம்பெற்றால் இவ்வுலகமே வளம்பெறும்...
மனதில் தூய்மையை பேணுவோம், வளமாய் வாழுவோம்...
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக