க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

'தமிழுக்கு அமுதென்று பேர்,
அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்'

'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதொன்றறியேன்'
இந்த இரண்டையும் சொன்ன போது நண்பனொருவன் சொன்னான் 'சிலவேளையில் பாரதிதாசனுக்கு ஆங்கிலம் தெரியாமல் இருந்திருக்கலாம் தானே? யாமறிந்த மொழிகளில் என்று தானே சொல்லியிருக்கிறார்' என்றான்.
அவனுக்கு தெரியாது பாரதிதாசன் அவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் உட்பட ஆறு மொழிகள் இளவயதிலேயே தெரியும்.
சரி இவ்வளவு பெருமைமிகுந்த தமிழ் மொழி தனது தூய்மைத்தன்மையை இழந்தது போன்று தற்போது காணப்படுகிறதே... ஏன்...

முதலாவது விடயம் எம் மொழியை இற்றைப்படுத்தும் செயலை நாங்கள் யாருமே செய்யவில்லை. அல்லது இற்றைப்படுத்தியதை பரவலாக்க வில்லை என்பது தான்.
'என்ர இணைய மேய்வானில் தான் ஏதோ பிழை. நான் வேற கணணிக்கு போய் தான் என்ர வலைப்பூவை இற்றைப்படுத்திற்று வந்தேன். அதோட என் வலைப்பூவிற்கு சில நல்ல பின்னூட்டல்கள் வந்திருந்திச்சு. அதோட என்ர மின்னஞ்சல் முகவரிக்கும் கனக்க அஞ்சல்களும் வந்திருந்தன' இப்படி நாங்கள் எல்லோரும் கதைக்கின்றோமா...
'என்ர இன்ரனெற் புறெளவசர்ல தான் ஏதோ பிழை (அல்லது ஏதோ அப்சற்). தான் வேற கொம்பியூட்டால போய தான் என்ர புளொக்க அப்டேற் பண்ணிற்று வந்தன். அதோட என்ர புளொக்குக்கு கொஞ்ச நல்ல கொமன்ற்ஸ்ம் வந்நிருந்திச்சு. அதோட என்ர மெயில் அட்ரசுக்கும் நிறைய மெயில் வந்திருந்தது.' இது தானே பெரும்பாலானோரின் தமிழாக உள்ளது. மேற்படி சொற்களிற்கு அழகான தமிழ் சொற்கள் இருக்கும் போது ஆங்கிலக் கலப்பு ஏன்...

இதற்து முக்கியமாக பல காரணங்களை சொல்லலாம்.
முதலாவது உலகில் தொழிநுட்பம் வளர்ந்த அளவிற்கு நாம் எங்களுடைய தமிழ் மொழியை இற்றைப்படுத்த வில்லை. இற்றைப்படுத்திய சொற்களை நாம் பயன்படுத்தவில்லை. வானொலிகள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் ஆங்கில சொற்களையே இப்போதும் பயன்னடுத்தி வருகின்றன. இன்று தொலைக்காட்சி மற்றும் வானொலி கலைஞர்களை இளைஞர்கள் திரைப்பட கதாநாயகர்கள் போன்று அதிகளவு விரும்புகிறார்கள். இக் கலைஞர்கள் தூய தமிழை கதைத்தால் அவர்களை பின்பற்றும் இளைஞர்களும் நிச்சயமாக தூய தமிழில் கதைப்பார்கள்.
அடுத்தவர்கள் திரைப்பட கதாநாயகர்கள்... முதலில் திரைப்பட மற்றும் வானொலி அறிவிப்பாளர்களை குறிப்பிட்டதன் காரணம் திரைப்பட கதாநாயகர்கள் சந்திப்பதை விட இவ் அறிவிப்பாளர்கள் மிக மிக அதிகமாக சநிதிக்கிறார்கள்.
திரைப்பட கதாநாயகர்கள் தமிழில் கதைத்துப் பார்க்கட்டுமே... தமிழ்; விரிவடையும்...
முன்பெல்லாம் தமிழ் வளர்த்த பெருமை திரைப்படங்களை சார்ந்தது. தூய தமிழை கேட்பதற்காகவே மக்கள் திரைப்படங்களை பார்க்க சென்றார்கள். இப்போது திரைப்படத்தில் சில செக்கன்கள் வரும் கதாபாத்திரம் கூட தன்னால் முடிந்தளவு ஆங்கில வார்த்தைகளை உதிர்த்து விட்டல்லவா செல்கின்றன... எதிலும் இலகுவில் 'எடுபட்டு' விடும் இளைஞர்கள் இலகுவாக தமிழை கொல்லும் முறையை அறிந்து விடுகிறார்கள்.

ஆகவே இதற்கு நாங்கள் குற்றஞ்சாட்டக் கூடியவர்கள் இன்றைய வயது முதிர்ந்த தமிழறிஞர்கள்...
அவர்கள் இளம் வயதில் தங்கள் கொள்ளை கொண்டோரை ஒன்றாக இணைத்துக் கொண்டு மேற்படி விடயங்களை கொஞ்சம் கொஞ்சமாக எதிர்த்திருந்தாலும் கூட இன்று இந்த நிலைமை இருந்திருக்காது. பட்டம் பெற்று, திருமணம் முடித்துவிட்டு, பிள்ளைகளை பெற்றுவிட்டு தான் தமிழ் வளர்க்க முயல்வதால் என்ன பிரயோசனம்...

தொலைக்காட்சிகளை பற்றி கதைக்கும் போது எனது வயது மாணவர்களிடம் காணப்படும் இன்னொரு கொள்கையை பார்த்து ஆச்சரியமடைந்தேன்...
இலங்கையிலுள்ள தொலைக்காட்சி ஒன்றின் இசைப் போட்டி ஒன்றில் அந்த அறிவிப்பாளினி ஆங்கில வார்த்தைகளை அளவுகணக்கின்றி பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டை நண்பனொருவனிடம் கதைக்கும் போது முன் வைத்தேன்...
அப்போது அவன் சொன்ன பதில் தான் என்னை இதை எழுத தூண்டியது...
அவன் சொன்னான்... 'இப்பிடியான புறோகிறாம்ல சத்த தமிழ்ல சதைச்சா வடிவா இருக்காது. இப்பிடி கதைச்சா தான் பார்க்க நல்லா இருக்கும். இப்பிடி கதைச்சா தான் ஸ்ரைலா இருக்கும்' என்று.
நான் அவனிடம் உடனடியாக கேட்டேன் 'அமெரிகன் ஐடல் போன்ற ஆங்கில நிகழ்ச்சிகளில் தனி ஆங்கிலத்தில் கதைத்தால் நீ சொல்கின்ற 'ஸ்ரைலா' இருக்காது என்பதற்காக "கியர் ஐ காவ் த நடுவர்களின் தீர்ப்பு. லெற் அஸ் ரேக் எ லுக் தற் கூ இஸ் கொன்னா கோ ரூ த இறுதிப் போட்டி" என்றா சொல்கிறார்கள்' என்று கேட்டேன். இதே கேள்வியைத்தான் எல்லோரிடமும் கேட்கின்றேன்... அவர்கள் தமது மொழி வளரவேண்டும் என்று நினைக்குமளவில் கொஞ்சம் கூட நாம் நினைப்பதில்லை...

இதற்கெல்லாம் காரணம் என்ன...
சுருக்காமாக சொல்வதானால்...
'வெள்ளைக்காரன் எங்கட நாட்டுக்கு வந்து செய்த பெரிய அழிவுகள் இரண்டு... முதலாவது தமிழ் ஒரு அழகற்ற மொழி;, தமிழ் கதைத்தால் மரியாதை இல்லை, ஆங்கிலம் தான் கதைப்பதற்கு ஏற்ற மொழி
இரண்டு-கறுப்பு நிறம் கூடாது. வெள்ளை நிறம் தான் மனிதரிற்கு அழகானது. என்ற இரண்டு மிகக் கொடுமையான, கேவலமான எண்ணங்களை எமது மனதில் பதித்து விட்டு சென்றது தான்.

--
க.கோபி கிருஷ்ணா.

1 பின்னூட்டங்கள்:

'தமிழுக்கு அமுதென்று பேர்,
அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்'
- பாரதி தாசன்
'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதொன்றறியேன்'
- பாரதி

உங்கள் ஆதங்கம் நியாயமானதே..
தமிழ் மேலும் சிறக்க நிறைய கண்டுபிடிப்புக்கள் வரவேண்டும். தமிழர்கள் தங்கள் கண்டுபிடிப்புக்களை தமிழிலேயே வெளியிட வேண்டும்.

//கறுப்பு நிறம் கூடாது. வெள்ளை நிறம் தான் மனிதரிற்கு அழகானது//

கருப்பே சிறப்பு. வெள்ளை நிறம் தோலில் மெலனின் என்கிற நிறமியின் குறைபாட்டால் வருவது.உலகின் முதல் மனிதன் தமிழன். உலகின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் மனிதன் கருப்பு.தமிழனின் நிறமும் கருப்பு. மற்றதெல்லாம் பிற விலங்கினங்களின் கலப்பு.