க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

'என்ன நல்லதொரு குடை கொண்டுவாறியள்?
என்ன விலை இது?
இது விலைக்கு வாங்கேல... ஏபிசி இல அடகு வைக்கிறவக்கு திரும்பவும் குடை குடுக்கினம்...
ஆம்... இந்த சலுகைகளை பெற்றுக்கொள்ள ஏபிசி நிறுவனத்தை இன்றே நாடுங்கள்..."

இலங்கையிலுள்ள பிரபல வங்கி ஒன்றின் அடகுவைக்கும் சேவைக்கான வானொலி விளம்பரமே அது. அந்த விளம்பரத்தில் என்ன பிழை என்று கேட்கத் தோன்றலாம். அடகு வைத்தல் என்பது அவசர தேவைகளுக்காக மேற்கொள்ளப்படுவது மாத்திரமே. 'இந்த சலுகைகளை பெற்றுக்கொள்ள ஏபிசி நிறுவனத்தை இன்றே நாடுங்கள்..." என்பது எல்லோரையும் அடகு வைக்க அழைப்பது போலல்லவா இருக்கிறது?அந்த விளம்பரம் இப்படி இருந்தால் என்ன?
'என்ன நல்லதொரு குடை கொண்டுவாறியள்?
என்ன விலை இது?
இது விலைக்கு வாங்ககேல... ஏபிசி இல அடகு வைக்கிறவக்கு திரும்பவும் குடை குடுக்கினம்...
அப்பிடியே? போன கிழமை நான் வேறொரு இடத்தில அடகு வைக்கேக்க எனக்கு இப்பிடி ஒண்டும் கிடைக்கேல...
இதுக்கு தான் ஏபிசி நிறுவனத்தை எல்லாரும் தேடிப் போறவ..."

அவர்கள் சொல்ல வந்த கருத்தை இப்படியும் சொல்லலாம். ஆனால் அடகு வைத்தல் என்பது அவசர தேவைக்காக மட்டுமே. அதில் குடை கிடைக்கின்றது என்பதற்காக யாரும் அடகு வைக்க வைக்க போவதில்லை. ஆகவே குடை வழங்கப்படுகிறது என்பதை பிரதான விடயமாக கூறுவது சரியாக அமையப் போவதில்லை.
(யாழ்ப்பாணத்தில் கொள்ளைக் கோஷ்டியினர் வீடு புகுந்து துப்பாக்கி முனையில் காசு, நகைகளை கொள்ளையடிப்பதால் தமது நகைகளை காப்பாற்றுவதற்காக யாழ்ப்பாண மக்கள் நகைகளை வங்கிகளில் அடகு வைத்து விட்டு அதற்கு வட்டி செலுத்துவது யாழ்ப்பாண மக்கள் மட்டுமே இந்த உலகத்தில் அனுபவிக்கும் கொடுமைகளில் ஒன்று.-யாழ்ப்பாணத்தில் வங்கிகளில் லொக்கர் எனப்படும் பாதுகாப்புப் பெட்டி வசதி இதுவரை இல்லை.)

சரி... ஓர் அற்ப விடயத்தை பெரிதாக காட்டுகிறார்கள் என்றால் ஏனைய விளம்பரங்களோடு ஒப்பிடுகையில் மேற்படி விளம்பரம் பரவாயில்லை எனத்தோன்றும்
நூடில்ஸ் விளம்பரம் ஒன்றில் ஒரு பெண் அந்த நூடில்ஸ் கையில் பிடித்தவாறு ஆடுவார். அது தான் விளம்பரம்.
ஒரு பெண் அழகி (அழகி என்று சொல்லிக் கொள்கிறார்கள். அசிங்கம் என்கிறேன் நான். அவர்கள் அணியும்(?) உடைகளின் பெறுமதி வேண்டுமானால் உயர்வாக இருக்கலாம். ஆனால் அதன் அளவு சிறியது தானே? அழகு என்பது மனம் சார்ந்தது. இதுவரை இதை சினிமாக் காரர்களோ, விளம்பர நிறுவனங்களை சார்ந்தவர்களோ, திருமணத்திற்கு பெண் தேடும் மாப்பிள்ளைகளோ ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை) கிடைத்தால் போதும். அவரை திரையில் காட்டினால் போதும். அது தான் விளம்பரம் என்று எம்மைப் பார்க்க சொல்கிறார்கள்.
இதன் போது தான் யாழ்ப்பாணத்தில் உள்ள செல்வவடிவேல் என்ற பிரபல விஞ்ஞானமும் தொழிநுட்பவியலும் ஆசிரியர் தரம் 7 ல் அவரிடம் படித்த போது சொன்ன விடயம் ஞாபகத்திற்கு வருகிறது.
'ஒரு அப்பளம் ஒண்டுக்கு விளம்பரம் காட்டோணும் எண்டா நானும் பாஸ்கரனும்(அக் கல்வி நிறுவன உரிமையாளர்) 10 கட்டு அப்பளத்த மொறு மொறு எண்டு கடிச்சு திண்டிற்று 'அப்பளம் சூப்பர்" எண்டு சொன்னா யாராவது வாங்குவாங்களா? ஒருத்தனும் வாங்க மாட்டான். ஆனா ரஜினிகாந்த விட்டு 'ஆ... சூ... சு... அப்பளம்... ஹா ஹா ஹா..." எண்டு சொல்ல விட்டா போதும். நாளைக்கு உங்கள் எல்லார் வீட்டயும் அந்த அப்பளம் தான் இருக்கும்."
அவர் ரஜினிகாந் என்று சொன்னதிற்கு பதில் 'ஒர் அரைகுடை ஆடையணிந்த பெண்" என்று நான் சொல்கிறேன்...
(வாத்தியார் படிப்பிச்சத உடன மறந்து போட்டு அவர் எப்பயோ ஒருக்கா சொன்னத ஞாபகம் வச்சிருக்கிறனே... நம்மள போல ஆட்கள தான் நல்லத விட்டிற்று தேவையில்லாதத வச்சிருக்கிற வடி எண்டு சொல்றது போல...!!!)

இது இப்படி என்றால் இன்னோரு குளிர்பான விளம்பரம்.
ஒரு பிரபலமான பாடகர் மேடையில் பாடிக் கொண்டிருப்பார். பார்வையாளர்களிலே ஒரு பெண் குளிர்பானம் வைத்திருப்பார். உடனே இவர் அந்த பெண்ணை மேடைக்கு அழைப்பார். குளிர்பானத்தை வாங்கி குடித்து விட்டு அந்த பெண்ணோடு நெருக்கமாக (வேறு சொற்பாவனை வேண்டாமே...) ஆடுவார். ஏன் அப்படி மட்டரகமான சிந்தனைகள்?
இதே போல் நிறைய விளம்பரங்கள்.
ஒரு குளிர்பானத்தால் அல்லது சொக்ளற்றினால் ஒரு பெண் மீது ஒரு ஆணுக்கு காதல் வருமென்றால் (காதல் என்ற பெயரில் அவர்கள் குறிப்பிடுவது வேறு தான் என்றாலும் காதல் என்று வைத்துக் கொள்வோம்.) எத்தனையோ பெண்கள் சீர்தனம் அல்லது சீதனப் பிரச்சினைகளினாலும், சாதகப் பிரச்சினைகளினாலும் திருமணம் முடிக்க முடியாமல் கஷ்ரப் படுகிறார்களே, அவர்களிடம் அந்த குளிர்பானத்தையோ அல்லது சொக்ளற்றையோ கொடுத்து விடுங்களே... அவர்களின் கவலை தீருமல்லவா?

இது இப்படி என்றால் இலங்கையின் தேசிய தொலைபேசி வழங்குனர் 4 வகையான புதிய தொலைபேசிப் பொதிகளை வழங்குகிறார்கள். அவை ஒவ்வொன்றினதும் பெயர் பிளாற்றினம், பொன், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகும். ஒரு ஆண் மேடையிலே ஆடிக்கொண்டிருப்பார். மேற்படி நான்கு பொருள்களினதும் நிறங்களை உடைய ஆடைகளை அணிந்த பெண்கள் ஒவ்வொருவராக வந்து அவரோடு ஆடிச்செல்வார்கள். மேடை நாடகங்களில் குறியீட்டு வகை என்று ஒன்று உண்டு. உதாரணமாக மழை பெய்வதை மேடையில் காட்ட முடியாது ஆகையால் குடைகளை மேடைகளில் ஆங்காங்கே கட்டித் தொங்க விடுவர். ஆகவே மழை எனப் பொருள் படும். எனினும் இந்தக் குறியீட்டு வகையை புரிந்து கொள்ள சிறிதளவு நாடக அறிவு தேவை.
ஆகவே மேற்படி விளம்பரமும் குறியீட்டு வகை விளம்பரம் போலும்... நான்கு வகைத் தொலைபேசி பொதிகளை 4 பெண்களை ஒரு ஆணுடன் ஆடவிட்டு தான் காட்ட வேண்டுமா? வேறு முறைகள் இல்லையா?
என்ன கொடுமை ஷரவணா இது...
மேற்படி மட்டரகமான விளம்பரங்களைத் தான் காட்ட வேண்டுமா?
இதை நினைத்து அந்நியன் அம்பியைப் போல் மனதிற்குள் புழுங்கற் தான் முடியும். அம்பி நியாயம் கேட்ட மாதிரி கூட கேட்க முடியாதே... ஆகவே நான் அம்பியிலும் வல்லமை குறைந்தவன் போலும்...

பெண்களுக்கு சமவுரிமை வேண்டுமென வாய் கிழிய ஓலமிடுபவர்கள் பெண்களை போகப் பொருளாக அல்லது கூப்பிட்டால் வந்து விடும் கதாபாத்திரங்களுக்கு எதிராகவும் குரலெழுப்புவார்கள் என இப்போதும் கூட என்னிடம் நம்பிக்கை உண்டு.

காலம் பதில் சொல்வதற்கு இங்கு எதுவுமே இல்லை. நாம் தான் நம்முடைய மனச்சாட்சி தான் பதில் சொல்ல வேண்டும்.

0 பின்னூட்டங்கள்: