க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

ஆடுகளம்...(Pitch)
செவ்வக வடிவானது.
20.12 மீற்றர் நீளமும் 3.05 மீற்றர் அகலமும் கொண்டதாக காணப்படும். இது புல்தரை(turf) பிட்ச் களுக்கான அளவீடாகும்.
செயற்கை பிட்ச்(Artificial pitch) எனின் ஆகக்குறைந்தது 17.68 மீற்றர் நீளமும், 1.83 மீற்றர் அகலமும் கொண்டதாக காணப்படும்.
எனினும் புல்தரை பிட்சே சர்வதேச போட்டிகளிலும், வியாபார ரீதியிலான ஆட்டங்களிலும் பயன்படுத்தப்படும்.
பிட்சை தயார் செய்யும் பொறுப்பு மைதான ஊழியர்களை சார்ந்தது எனினும் ஆட்டம் தொடங்கிய பின்னர் பிட்சானது நடுவருக்கு உரியதாகும்.


பந்து...
பந்தின் சுற்றளவு- 224 முதல் 229 மில்லி மீற்றர்கள்.
பந்தின் நிறை- 155.9 முதல் 163 கிராம்கள்.
மட்டுப்படுத்தப்பட்ட பந்துப் பரிமாற்றங்களுள்ள(Limited over) போட்டிகளில் வெள்ளை நிறப் பந்தும் ஏனைய போட்டிகளில் சிவப்பு நிறப் பந்தும் பயன்படுத்தப்படும்.
ஒவ்வொரு போட்டியின் போதும் புதிய பந்தே பயன்னடுத்தப்படும். ஒவ்வொரு இனிங்சின் போதும் புதிய பந்தே பயன்படுத்தப்படும்.
ரெஸ்ற்(test) போட்டிகளில் 80 ஆவது பந்துப் பரிமாற்றத்தின் பின்னரும், ஒருநாள் போட்டிகளில் 35 ஆவது பந்துப் பரிமாற்றத்தின் போதும் பந்து மாற்றப்படல் வேண்டும். மட்டுப்படுத்தப்பட்ட பந்துப் பரிமாற்றங்களுள்ள போட்டிகளில் 35 ஆவது பந்துப் பரிமாற்றத்தின் போது மாற்றப்படும் பந்து புதியதாக இருக்க முடியாது. ஏற்கனவே பாவித்த நல்ல நிலையிலுள்ள பந்தே பயன்படுத்தப்படும்.


துடுப்பாட்ட மட்டை...
ஒரு புறம் தட்டையாகவும் மறுபுறம் வளைந்த கூன் வடிவிலும் (மட்டையின் பல்த்தை கூட்டுவதற்காக) (humped) காணப்படும்.
அதிகபட்சமாக 10.8 சதம மீற்றர் அகலமும், 96.5 சதம மீற்றர் நீளமும் காணப்படலாம். எனினும் குறிப்பிட்ட அளவை விட சிறியதாக காணப்படலாம்.
துடுப்பாட்ட மட்டையானது மரத்தாலேயே செய்யப்படல் வேண்டும். பொதுவாக வெள்ளை வில்லோவினால் (white willow) செய்யப்படும். எனினும் விதியல்ல.
மட்டையின் கைபிடியும் மட்டையின் ஓர் அங்கமாகவே கருதப்படும். துடுப்பாட்ட மட்டையின் தட்டையான மேற்பரப்பில் பாரமான உலோகங்கள் என கிறிக்கெற்றில் அழைக்கப்படும் அலுமினியம் என்பன பூசப்பட முடியாது.
(றிக்கி பொன்டிங்கின் மட்டை இந்த விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளாகப் பட்டது குறிப்பிடத்தக்கது.)


இலக்குகள்...(Wickets)
பிற்சின் இருபுறமும் இலக்குகள் காணப்படும். மொத்தம் 6 இலக்குகள். 3 ஒரு பகுதியிலும் மற்றைய 3 மற்றைய புறத்திலும் காணப்படும்.
மரத்தாலான 71.1 சதம மீற்றர் நீளமானது. 3 இலக்குகளிடையேயும் சம இடைவெளி காணப்படல் வேண்டும். 3 இலக்குகளும் சேர்ந்து மொத்தமாக 22.86 சதம மீற்றர் அகலத்தை எடுத்துக் கொள்ளும்.
இலக்குகளின் மேல் 2 'பெய்ல்கள்'(Bails) காணப்படும். இவை இலக்கிற்கு மேலே 1.27 கதம மீற்றருக்கு மேல் செல்லக்கூடாது. எனினும் சீதோஷண நிலைமைகளால் 'பெயில்கள்' கீழே விழும் என நடுவர் தீர்மானிக்கும் சந்தர்ப்பங்களில் 'பெயில்களை" நடுவர் அகற்றலாம்.


உடை...
நீளக்காற்சட்டையும் மேலங்கியும்.
மேலங்கி முழு கைகளை முழுவதுமாக மூடியதாகவோ அல்லது அரைவாசி கையை மூடியதாகவோ அல்லது கைகளை மறைக்காததாகவோ காணப்படலாம்.
சிவப்பு பந்து விளையாடப்படும் போட்டிகளில் உடையானது வெள்ளையாகவோ அல்லது பழுப்பு நிறமாகவோ காணப்படலாம்.
வெள்ளைப்பந்து எனில் நிற ஆடைகள் அணிவர்;. எனினும் வீரர்கள் அனைவரும் ஒரே நிற ஆடைகளை அணிதல் வேண்டும்.
உடைகளில் வீரரின் பெயரையும் குறியீட்டு இலக்கத்தையும் இட வேண்டுமென்ற கட்டாயம் எதுவுமில்லை.


ஒரு இனிங்ஸ்...
மட்டுப்படுத்தப்பட்ட பந்துப் பரிமாற்ற போட்டிகளில் ஒரு அணி முழுமையாக ஆட்டமிழக்கும் வரை அல்லது குறிப்பிட்ட பந்துப்பரிமாற்றங்கள் நிறைவடையும் வரை ஒரு இனிங்ஸ் ஆகும்.
ரெஸ்ட் போட்டிகளில் ஓர் அணி ஆட்டமிழக்கும் வரை ஒரு இனிங்ஸ் தொடரும்.
நேரப் போட்டிகளில் குறித்த நேரம் நிறைவடையும் வரை அல்லது ஒரு அணி முழுமையாக ஆட்டமிழக்கும் வரை ஒரு இனிங்ஸ் ஆகும்.

நாணயச்சுழற்சிக்கு முன்னரே அணியின் விபரம் போட்டி நடுவரிடம் கையளிக்கப்பட வேண்டும். நாணயச்சுழற்சியின் பின்னர் தனது அணியிலுள்ள ஓர் வீரரை மாற்ற வேண்டி அணித்தலைவருக்கு ஏற்படின் தகுந்த காரணங்களை காட்டுவதன் மூலம் எதிரணித்தலைவரின் அனுமதி பெறப்பட வேண்டும்.


ஆட்டத்தை இடைநிறுத்தல்...
ஒரு அணியின் இனிங்ஸை அவ்வணித்தலைவர் தான் விரும்பிய நேரத்தில் இடைநிறுத்தம் செய்யலாம்.(declare)
ஒரு இனிங்ஸை ஆடாமல் அவ் இனிங்ஸை தன் அணி சார்பாக இடைநிறுத்தம் செய்யலாம்.(forfeiture)
எனினும் ஆட்டத்தை இடைநிறுத்தும் போது பந்து இறந்த நிலையில்(dead) காணப்பட வேண்டும். அதாவது பந்து வீச்சாளர் பந்தை வீசி முடித்து பந்து ஓய்வை அடைந்திருக்க வேண்டும்.


தொடர்ந்து ஆடப்பணித்தல்...(follow-on)
ரெஸ்ற் போட்டிகளில் முதலில் துடுப்பெடுத்தாடிய அணி பெற்ற ஓட்டங்களை விட 200 ஓட்டங்களை இரண்டாவது துடுப்பெடுத்தாடிய அணி பெறின் முதலில் துடுப்பொடுத்தாடிய அணியின் தலைவர் எதிரணியை தொடர்ந்து இரண்டாவது இனிங்ஸை ஆடுமாறு பணிக்கலாம். ஆனால் கட்டாயமில்லை...
3 அல்லது 4 நாள் போட்டிகள் எனின் முன்னிலை ஓட்டங்கள் 150 ஐ விட கூடுதலாக முதலாவது துடுப்பாடிய அணி பெறின் தொடர்ந்து ஆடப்பணிக்கலாம்.
2 நாள் ஆட்டம் எனின் 100 ஓட்டங்கள்.
1 நாள் ஆட்டமெனில் (மட்டுப்படுத்தப்பட்ட பந்துப்பரிமாற்ற போட்டி அல்ல) 50 ஓட்டங்கள்.


போட்டி தொடக்கம்...
போட்டி தொடங்கும் போது நடுவர் 'Play' என உரத்துக் கூறுவார்.
ரெஸ்ற் போட்டியின் ஒரு நாளுக்குரிய ஆட்டம் நிறைவடையின் 'Time' என கூறுவார்.
போட்டி தொடங்கிய பின்னர் மைதானத்தில் பயிற்சிகளுக்குரிய அனுமதி வழங்கப்பட மாட்டாது. பந்து வீச்சாளர் மாத்திரம் பயிற்சி ஓட்டத்தை மேற்கொள்ளலாம். எனினும் பயிற்சி ஓட்டத்தின் போது நேரம் வீணாகும் என நடுவர் கருதின் அதை தடுக்கலாம்.
ரெஸ்ற் ஆட்டத்தின் இறுதி நாளின் இறுதி மணித்தியாலத்தில் 20 பந்துப் பரிமாற்றங்கள் வீசப்பட வேண்டும். 20 பந்துப் பரிமாற்றங்கள் வீசி முடிக்கும் வரை போட்டியின் கால அளவு நீடிக்கப்படலாம். எனினும் விளையாடுவதற்குரிய சூழ்நிலை (போதிய வெளிச்சம், காற்று விளையாட்டை பாதிக்காமை, மழைத்தூறல்கள் இன்மை) காணப்படல் வேண்டும்.

ஓட்டங்கள்...

ஓட்டங்கள் பெறப்படக்கூடிய முறைகள்-
ஓடிப்பெறல்-(By running)
துடுப்பாட்ட வீரரின் துடுப்பு மட்டையில் அல்லது அவரின் உடலின் ஏதாவதொரு பகுதியில் பந்து படுமாயின் துடுப்பாட்ட வீரர் ஓட்டங்களை ஓடிப்பெறலாம்.
பந்தை அடித்து விட்டு அதிகபட்சமாக 4 ஓட்டங்கள் தான் ஓடிப்பெறப்படலாம் என்று எதுவித சட்டங்களும் இல்லை. எத்தனை ஓட்டங்களும் ஓடிப்பெறப்படலாம்.
ஒரு பந்து வீச்சை துடுப்பாட்ட வீரர் ஆடாமல் விட்ட பின்பு அந்த பந்தின் முலம் ஓட்டங்களை பெற முடியாது. உதாரணமாக கால்த்தடுப்பை மாத்திரம் பந்திற்கு நேரே வைத்து ஆடாமல் விடின் அந்தப் பந்தின் மூலம் ஓட்டங்களை பெற முடியாது.

எல்லையை பந்து தாண்டுதல்-(Boundries)
4 ஓட்டங்களும் 6 ஓட்டங்களும் இந்த வகையில் அடங்கும். எல்லைக் கோட்டை கடந்து பந்து செல்லும் முன்னர் நிலத்தை தொட்டிருப்பின் அது 4 ஓட்டமாகும். நிலத்தை தொடவில்லையெனில் அது 6 ஓட்டமாகும்.


முறையற்ற பந்துவீச்சு மூலம்-(No ball)
பந்து வீச்சாளரொருவர் முறையற்ற பந்து வீச்சை மேற்கொண்டால் எதிரணிக்கு 1 ஓட்டம் வழங்கப்படும்.
முறையற்ற பந்து வீச்சுகள்...
ஆடும் பிட்ச் இல் காணப்படும் கோடுகள் தடிப்பாக காணப்படுவதால் அந்த கோட்டின் உட்பகுதியே அதாவது இலக்குக்கு மிக அருகில் காணப்படும் கோடே(popping crease) கணக்கில் கொள்ளப்படும். எனவே பந்து வீச்சாளர் உட்பகுதி கோட்டை தாண்டி பந்து வீசுவாரெனில் அந்த பந்து முறையற்ற பந்து எனக் கொள்ளப்படும்.
பந்து வீசும் போது வீசும் கணத்தில் முழங்கையை நீட்டுவாராயின் அதாவது முழங்கையை நேர்ப்படுத்துவாராயின் அந்த பந்து முறையற்ற பந்து எனக் கொள்ளப்படும்.
பந்து வீச்சாளருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக வீசின் அந்த பந்து முறையற்ற பந்து எனக் கொள்ளப்படும்.
பந்து வீசும் போது ஆடுகளத்தில் பந்தானது இரு முறைகளுக்கு மேல் நிலத்தில் துள்ளுமாயின் அல்லது உருளுமாயின் அந்த பந்து முறையற்ற பந்து எனக் கொள்ளப்படும்.
பந்து தடுக்கும் வீரர்கள் முறையற்ற இடற்களில் நிற்பாராயின் அந்த பந்து முறையற்ற பந்து எனக் கொள்ளப்படும்.

இறந்த பந்து...(dead ball)
பந்து வீசும் போது பந்தானது இருமுறை நிலத்தை அடித்ததோடு இரண்டாவது அடிப்பு துடுப்பாட்ட வீரரின் கோட்டுக்கு முன்னர் அடித்தல்.
இறந்த பந்தின் மூலம் ஓட்டங்களோ, ஆட்டமிழப்போ வழங்கப்படமாட்டாது.

அகலப்பந்து...(wide ball)
ஒரு பந்து வீச்சை துடுப்பாட்ட வீரர் சௌகரியமாக ஆடி ஓட்டங்களை பெற முடியாதளவுக்கு பந்து அகலமாகச் செல்கிறது என நடுவர் தீர்மானிப்பாராயின் அது அகலப்பந்து ஆகும். துடுப்பாட்ட வீரரின் தலைக்கு மேலே செல்லும் பந்து சென்றாலும் அது அகலப்பந்து ஆகும்.

உதிரிகள் மற்றும் கால் உதிரிகள்...(byes and leg-byes)
துடுப்பாட்ட வீரரை பந்து தாண்டி செல்லும் போது துடுப்பாட்ட வீரரின் துடுப்பில் அல்லது துடுப்பாட்ட வீரரில் படாமல் சென்று ஓட்டங்கள் பெறப்படின் அது உதிரி ஆகும்.
துடுப்பாட்ட வீரரை பந்து தாண்டி செல்லும் போது துடுப்பாட்ட வீரரின் துடுப்பில் படாமல் துடுப்பாட்ட வீரரில் பட்டு சென்று ஓட்டங்கள் பெறப்படின் அது கால் உதிரி ஆகும்.


பிரதான ஆட்டமிழப்பு வகைகள்....
ஒரு துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழந்து விட்டார் என பந்து வீசும் அணி நினைக்குமாயின் ஆட்டமிழப்பை கோரலாம். 'How's that?' என கேட்கலாம்.
இலக்குகள் சரிதல்.
துடுப்பாட்ட வீரர் கோட்டுக்கு வெளியே நிற்கையில்.


ஒரு துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழக்கும் வகைகள் 10 ஆகும்.
1. இலக்குகள் சரிதல்.-(Bowled)
துடுப்பாட்ட வீரர் ஆடும் போது பந்து இலக்கை அடிக்குமாயின் அவர் ஆட்டமிழந்தவராக கருதப்படுவார். எனினும் 'பெயில்கள்" இலக்கை விட்டு அப்புறப்படல் வேண்டும். இலக்கை தாக்கும் முன்னர் பந்து துடுப்பாட்ட வீரரையோ, அவரின் மட்டையையோ தாக்கியிருப்பினும் ஆட்டமிழப்பு வழங்கப்படும்.

2. பிடியெடுப்பு.(Caught)
துடுப்பாட்ட வீரர் ஆடும் போது மட்டையில் பட்டு எதிரணி வீரர் ஒருவர் பந்து நிலத்தை அடிக்கும் முன்னர் பிடியெடுப்பாராயின் அது ஆட்டமிழப்பு ஆகும்.
துடுப்பாட்ட வீரரில் பட்டு பின்னர் மட்டையில் பட்டாலும், மட்டையில் பட்டு துடுப்பாட்ட வீரரில் பட்டாலும் ஆட்டமிழப்பு வழங்கப்படும். அதாவது எந்த ஒரு சந்தர்ப்பத்திலாவது துடுப்பாட்ட வீரரின் மட்டையில் பந்து பட்டிருத்தல் போதுமானது. துடுப்பை கைத்திருக்கும் கையில் பட்டாலும் அதுவும் துடுப்பில் பட்டதாகவும் கொள்ளப்படும்.
எனினும் களத்தடுப்பாளர் பந்தை பிடிக்கும் போதோ அல்லது பிடித்த உடனரோ எல்லைக் கொட்டை தாண்டுவாராயின் அது ஆட்டமிழப்பு என வழங்கப்பட மாட்டாது.
பந்தானது களத்தடுப்பு வீரரின் கைகளில் அல்லது உடலில் 8 செக்கன்கள் தங்கி இருந்தாலே ஆட்டமிழப்பாக கருதப்படும்.
பந்தை பிடிக்கும் போது களத்தடுப்பு வீரர் சிலவேளைகளில் பாதுகாப்புக்காக அணியும் தலைக்கவசத்தில் படுமாயின் அதுவும் ஆட்டமிழப்பாக வழங்கப்பட மாட்டாது.

3. இலக்குக் காப்பாளரால் ஸ்ரம்ப்ட் செய்யப்படல்.(Stumped)
கோட்டை விட்டு முன்னோக்கிச் சென்று ஒரு துடுப்பாட்ட வீரர் ஆட முயற்சிக்கையில் அந்தப் பந்து தவறவிடப்படுகையில் இலக்கு காப்பாளர் பந்தை சேகரித்து இலக்கை அடித்தல். பந்தை கொண்டிருக்கும் கையின் எந்தப் பகுதியாலும் இலக்கை அடிக்கலாம்.

4. இலக்கின் முன் காலில் பந்து படுதல்- எல்.பி.டபுள்யு -(L.B.W)
துடுப்பாட்ட வீரர் ஆடும் போது பந்தானது துடுப்பாட்ட வீரரின் உடலில் படுமாயின் அந்தப் பந்து இலக்கை தாக்கும் சந்தர்ப்பம் காணப்படின் ஆட்டமிழப்பு வழங்கப்படும். எனினும் கால் மட்டுமல்ல உடலின் எந்தப் பகுதி பட்டாலும் ஆட்டமிழப்பு வழங்கப்படும். துடுப்பில் பட்ட பின்னர் உடலில் படுமாயின் ஆட்டமிழப்பு வழங்கப்பட மாட்டாது. எனினும் உடலில் பட்ட பின்னர் துடுப்பில் பட்டு மேற்சொல்லப்பட்ட நிபந்தனைகளை திருப்தி செய்யுமாயின் ஆட்டமிழப்பு வழங்கப்படும்.

5. இலக்கை மோதுதல் -(Hit wicket)
வீரர் ஆடுப் போது துடுப்பாலோ அல்லது அவரது உடலினாலோ இலக்கை அடிப்பாராயின் ஆட்டமிழப்பு வழங்கப்படும்.
எனினும் ஓட்டங்கள் பெறப்படும் போது பாயும் போதோ அல்லது தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களிலோ ஆட்டமிழப்பு வழங்கப்பட மாட்டாது.

6. ரன் அவுட்-(Run out)
துடுப்பாட்ட வீரர் ஓட்டங்களை ஓடிப்பெறும் போது பந்து இலக்கிற்கு எறியப்படும் போது இலக்கில் பந்து படும் போது துடுப்பாட்ட வீரர் நிலத்தை தொட்ட படி இருத்தல் வேண்டும். அவர் ஏற்கனவே கோடுகளை அடைந்து நிலத்தை தொட்டிருந்தாலும் பந்து இலக்கில் படும் கணத்தில் நிலத்தை தொடாமல் வளியில் இருப்பாராயின் (பாய்தல் போன்றவற்றின் போது) அவர் ஆட்டமிழந்ததாக கருதப்படும்.

7. நேர ஆட்டமிழப்பு -(Time out)
ஒரு துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழந்து 2 நிமிடத்துள் மற்றைய துடுப்பாட்ட வீரர் களம் நுழையாமை. எனினும் இந்த ஆட்டமிழப்பு எதிரணி அணித்தலைவரால் விலக்களிக்கப்பட முடியும்.

8. களத்தடுப்புக்கு இடைஞ்சல் செய்தல்-(Obstucting the field)
ஒரு துடுப்பாட் வீரர் களத்தடுப்புக்கு இடைஞ்சல் செய்கிறார் என களத்தடுப்பு அணி ஆட்டமிழப்புக்கு கோரலாம். அந்த சந்தர்ப்பத்தில் துடுப்பாட்ட வீரர் வேண்டுமென்றே களத்தடுப்புக்கு இடைஞ்சல் செய்தார் என கருதின் ஆட்டமிழப்பு வழங்கப்படும். அத்தோடு களத்தடுப்பு அணியின் களத்தடுப்பை இடைஞ்சல் செய்யும் விதமாக சொற்களை பாவிப்பினும் ஆட்டமிழப்பு வழங்கப்படும்.

9. இரண்டு முறை அடித்தல். -(Hit the ball twice)
தனது ஆட்டத்தை பாதுகாக்கும் அல்லது எதிரணியின் அனுமதியின்றி பந்தை இருமுறை துடுப்பால் அடிப்பின் ஆட்டமிழப்பு வழங்கப்படும்.

10. பந்தை கையாளுதல் -(Handling the ball)
வேண்டுமென்றே பந்தை தொடுதல், எதிரணியின் அனுமதியின்றி பந்தை தொடின் ஆட்டமிழப்பு வழங்கப்படும்.

முதல் 5 வகைகளில் துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழப்பின் மட்டுமே பந்து வீச்சாளருக்கு உரிய இலக்கு கைப்பற்றலாக கருதப்படும். ஏனைய யாவும் அணிக்குரிய ஆட்டமிழப்புகள் ஆகும்.

6, 8, 9, 10 ஆகிய முறைகளில் ஒரு வீரர் முறையற்ற பந்து வீச்சின் போதும் ஆட்டமிழப்பார்.
1, 2, 3, 4, 5 ஆகிய முறைகளில் ஆட்டமிழக்க அந்தப்பந்து முறையான பந்தாக இருத்தல் வேண்டும்.

கள நடுவருக்கு ஆட்டமிழப்பா இல்லையா என்ற சந்தேகம் ஏற்படின் மூன்றாம் நடுவரை நாடலாம். மூன்றாம் நடுவருக்கும் தெளிவான முடிவை பெற முடியாமல் போயின் தீர்ப்பு துடுப்பாட்ட வீரருக்கு சாதகமாக வழங்கப்பட வேண்டும்.

நடுவரின் மீது பந்து பட்டு பந்து நிலத்தில் காணப்படின் விளையாட்டு தொடரும். நடுவரின் உடையில் பந்து தங்கி விடின் அந்தப் பந்து மேலும் விளையாட்டுக்குக்கு சேர்க்கப்பட மாட்டாது. இறந்த பந்தாக கருதப்படும்.

மாற்று ஓட்ட வீரர்...(Substitute runner)

துடுப்பாட்ட வீரர் ஒருவர் துடுப்பாடிக் கொண்டிருக்கும் போது உபாதைகள் ஏற்படின் தனக்கு ஒரு வீரரை ஓடுபவராக பயன்படுத்த விரும்பலாம். அப்படியான சந்தர்ப்பங்களில் அவர் அந்த வேண்டுகோளை நடுவரிடம் தெரிவிக்கலாம். எனினும் எதிரணியின் தலைவரின் அனுமதி கட்டாயமாக பெறப்பட வேண்டும்.

1 பின்னூட்டங்கள்:

This is nice ha.......