தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது 'இருக்கிற' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர் போலியான பதிவர்கள் சந்திப்பொன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தனர்.
சந்திப்பில் ஒல்லாந்தர் காலத்தில் தங்கள் கடைசிப் பதிவை இட்டுவிட்டு இன்றும் தங்களை பதிவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அழைத்துக் கொள்ளும் யோ என்று கத்தும் பதிவரும், பிரபலமான தொடரூந்துச் சேவையொன்றை நடத்துபவர்களில் ஒருவரும், கிங்கொங் பதிவரும் முன்னாள் பதிவர்கள் என்ற வகையில் கலந்து கொண்டார்கள்....
இவர்களைத் தவிர எழுமாற்றாக அறுவடை செய்பவர்களை அறுவடை செய்யாமல் அடித்துத் துரத்திய படுபாவிப்பதிவரும், அடிக்கடி ருவிற்றரில் இருப்பவர்களை மொக்கையர்கள் என்று அழைத்துவிட்டு பேஸ்புக்கில் நண்ப'னு'டன் (அப்படித் தான் சொல்லிக் கொள்கிறார்கள்) அரட்டையடிக்கும் இளமைப்பதிவரும், பஞ்சாப்பில் பிரீட்டி ஜிந்தா என்ன செய்கிறார் என்றும் அவர் தனது விருப்புக்குரிய விசயமுள்ள நடிகரோடு சோடி சேர வாய்ப்புக்கள் உள்ளதா என்று ஆராய்ச்சி செய்யும் மதிப்புக்குரிய பதிவரும், பழைய காலப் பெட்டிகளில் பதிவிடும் மற்றும் தனது புதியவகைத் தலைமயிர் ஸ்ரைலை நல்லாயிருக்கு எண்டு மூடநம்பிக்கையில் திரியும் பதிவரும், இவரோடு கொள்கையில் (முக்கியமாக சினிமாவில்) நன்றாக ஒத்துப் போகும் வவுனியாவை விரும்பும் பதிவரும், படங்களுக்கு கொமன்ற் போட்டு ஆப்பு வைக்கும் மூன்று கோணத்திலுள்ள மலைப் பதிவரும், கிங்கொங் பதிவரால் மொக்கைக் கவிஞர் என பாராட்டப்பட்டதால் அடிக்கடி கவிதைகளை எழுதிவரும் வைத்தியப்பதிவரும், தமிழையும் விசயமானவரையும் விரும்பும் புயலை, காற்றை வெறுக்கும் பதிவரும் கலந்து கொண்டனர்.
சந்திப்பு நடைபெற்ற இடத்தில் எலிகள் காணப்படும் என்ற பயத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்த ஆ!ஸ்கீறீன் என்று கத்தும் பதிவருக்கு சந்திப்பில் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
உம்பா, மாடு, பையன், சாராயம் என்று அடிக்கடி சொல்லும் 'பொறிமுறைப்' பதிவரும் அவரது தோட்டம் செய்யும் அண்ணாவும் சற்றுப் பிந்தியே சந்திப்பில் கலந்து கொண்டாலும் பதிவர்களுக்கு விளங்காத நிறைய விடயங்களை பகிர்ந்து கொண்டனர்.
சந்திப்பில் முதலில் சீரியஸ் பதிவுகளை எழுதுவது எப்படி என்று எழுமாற்று அறுவடையை தடுத்த படுபாவிப் பதிவர் விளக்கமளித்தார். எந்த விடயத்தையும் சீரியஸாக எடுக்க வேண்டும் என்றும் வாழ்க்கையில் சீரியஸாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்த கருத்துக்களை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். தான் சிறிது காலத்துக்கு முன்னர் எழுதிய மொக்கைப் பதிவொன்றிற்கு போதிய வரவேற்பு இல்லை என்று சொல்லி விம்மி விம்மி அழுத படுபாவிப் பதிவரை தாடியை விரும்பும் பேஸ்புக் பதிவர் தேற்றினார். அத்தோடு அனைவரும் படுபாவிப் பதிவரை மொக்கைப் பதிவுகளையும் அவ்வப்போது எழுதுமாறும் கேட்டுக் கொண்டனர்.
பின்னர் எழுந்த பிரீட்டி ஜிந்தாவை விரும்பும் பதிவர் பயனேயில்லாமல் பதிவெழுதுவது எப்படி என்று விளக்கமளித்தார். சமூகத்துக்கு வேண்டியதை பதிவர்கள் ஒருபோதும் எழுதக்கூடாது என்றும் பதிவர்கள் சுயத்தை இழந்தாலே அவ்வாறு பிரயோசனமில்லாமல் எழுதமுடியும் என்றும் கருத்துத் தெரிவித்தைதை கிங்கொங் பதிவர் விழுந்து விழுந்து வரவேற்க முயன்றதால் அப்பகுதியில் நிலநடுக்க, சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
அத்தோடு மொக்கைப் பதிவுகள் எழுதவே கூடாது என்றும் சீரியஸானவற்றையே எழுதவேண்டும் என்று விளக்கமளித்தார்.
அடுத்தாக ஆண்களும் பதிவுலகமும் என்ற தலைப்பில் பேஸ்புக் புகழ் இளமைப் பதிவர் உரையாற்றினார். பதிவுலகத்தில் ஆண்களுக்கு இருக்கும் வரவேற்பைவிட பெண்களுக்கு வரவேற்புகளும், பின்னூட்டங்களும் அதிகமாகக் கிடைக்கின்றன என்று கூறிய இவர் காதல் நல்லது என்றும் அதில் தனக்கு அனுபவமே இல்லை என்றும் நகைச்சுவைகளை அள்ளிவீசினார்.
தான் தனது ஒவ்வொரு பதிவிலும் முழுமையாக ஆடையணிந்த ஆண்களின் புகைப்படங்களை இடுவதன் மூலம் ஆணியக் (பெண்ணியத்துக்கு எதிர்ச் சொல்லாம்) கருத்துக்களைப் பரப்புவதாகவும் பெருமையுடன் கூறிக் கொண்டார். அததோடு தான் இன்று பழைய ரீ-சேட்டை அணிந்து வந்தது ஆண்கள் சிக்கனமானவர்கள் என்ற கருத்தை விளங்கப்படுத்துவதாகவும் கூறிக்கொண்டார்.
பேஸ்புக் பதிவர் சீரியஸாய்க் கதைத்ததால் அனைவரும் கடுப்பாகியதால் அனைவருக்கும் சூட்டுநாயும், பீச்சாக்களும் சாப்பிட வழங்கப்பட்டதோடு வைன், ஜின், விஸ்கி உட்பட்ட எனக்குப் பெயர் தெரியாத இன்னோரன்ன குடிபானங்களும் வழங்கப்பட்டன.
வழங்கப்பட்ட சூட்டுநாய்களையும், பீச்சாக்களையும் தாங்களே வீட்டில் தயாரித்ததாக சாராயப் பெயருடைய சகோதரரர்கள் கருத்துத் தெரிவித்ததால் அவர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
வழங்கப்பட்ட விஸ்கி, வைன் போன்றவற்றை தாங்களே காலைப்பயன்படுத்தி தயாரித்ததாக பெட்டிப்பதிவரும் இன்னும் சிலரும் தெரிவித்ததைத் தொடர்ந்து பலருக்கு ஏற்பட்ட வாந்திகளை (வாந்தி தான். எழுத்துப்பிழை எதுவும் இல்லை) அடக்கிக் கொள்ள புத்திசாலியான பேஸ்புக் பதிவர் தேசிக்காய் வழங்கி ஏற்படவிருந்த அனர்த்தத்தைத் தவிர்க்க பெரிதும் உதவினார்.
இதன்பின்னர் கூகுள் குழுமத்தை பயனில்லாமல் எப்படிப் பயன்படுத்துவது என்பது தொடர்பாக பெட்டிப் பதிவர் விளங்கப்படுத்தினார்.
தான் குழுமத்தை சிரிப்பதற்கு மட்டுமே பயன்படுத்துவதாகவும், அதுவே சிறப்பானது என்றும் தெரிவித்தார்.
அத்தோடு பாரம்பரிய உபகரணங்களை இளைய சமுதாயம் மறந்துவருவதால் அவற்றை இளைய சடுதாயத்திற்கு ஞாபகப்படுத்த புதிய கலந்துரையாடலொன்று ஆரம்பிக்கப்படவேண்டும் என்றும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.
அத்தோடு தான் கம்பஸ்ஸில் வாளி போடுவதாக வெளிவரும் தகவல்கள் பொய்யானவை என்றும் யாரும் அதைப் பற்றி குழுமத்தில் வாயைத் திறக்கக்கூடாது என்றும் தெரிவித்தார். அப்படிச் செய்யின் அவர்களுக்கு கறுத்த வான் அனுப்பப்படும் என்று மிரட்டினாலும் எழுந்த கிங்கொங் பதிவர் 'விம் இருக்கப்பயமேன்?' என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டு அமர்ந்து கொண்டார்.
இடையே எழுந்த படுபாவிப்பதிவர் தான் கணக்குவிடுவதில் வல்லவர் என்றும் தான் தரம் 6 இல் கணித பாடத்துக்கு 53 புள்ளிகளைப் பெற்றேன் என்றும் அதனால் பதிவர் சந்திப்புத் தொடர்பான கணக்கு விடுவதைத் தான் பொறுப்பெடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
இதன்பின்னர் இறுதி அம்சமான பின்னூட்டங்கள் பற்றிய கலந்துரையாடலை கிங்காங் ஆரம்பித்துவைத்து தான் அதிகமாக பின்னூட்டுவதை விரும்புவதில்லை என்றும் ஒரு பதிவுக்கு தலா ஒவ்வொரு பின்னூட்டம் மட்டுமே இடுவதை வலியுறுத்துவதையும் கேட்ட பெட்டிப்பதிவர் கடுப்பாகி கிங்கொங் பதிவருக்கு அடிக்கச் சென்றதோடு தன்னை இவர் ஒரு குழுவோடு ஓட ஓட விரட்டி 405 பின்னூட்டங்கள் போட்டதாகவும் இவர் பின்னூட்டமிடுவதை எப்படியாவது தடுக்கவேண்டும் என்றும் கூறினார்.
எனினும் கோபத்தோடு எழுந்த பேஸ்புக் பதிவர் தனது பதிவுகளை விட தனது தளத்தில் பின்னூட்டங்களிற்கே அதிக வரவேற்பு இருப்பதாக ஒரு இரகசிய அறிக்கை கிடைத்திருப்பதாகவும் அதனால் பின்னூட்டவாதிகள் யாரையும் தான் இழக்கவிரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
அத்தோடு பின்னூட்டங்களில் தாடிகள் பற்றிப் புகழ்ந்து பின்னூட்டமிடுமாறும் கேட்டுக் கொண்டார்.
இவ்வாறான ஆரோக்கியமான கலந்துரையாடல்களுக்குப்பின்னர் மண்டபத்துக்குள் இருபதுக்கு இருபது கிறிக்கெற் விளையாடப்பட்டது.
அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
மறுதலிப்பு 1: இது முற்றுமுழுதாக நகைச்சுவைக்காக மட்டுமே. யாரையும் புண்படுத்தும் நோக்கம் கிடையாது.
மறுதலிப்பு 2: இறுதியாக வெற்றிகரமாக நடந்துமுடிந்த பதிவர் சந்திப்பு 2 இனை கேவலப்படுத்தும் எண்ணமும் கிடையாது.
என்னைப் பற்றி
மூஞ்சிப் புத்தகம்
நல்லவர் பட்டாளம்....
மொக்கைகளில் எத்தனை வகைகளப்பா..... சபா...
தமிழ்
உண்மையாகவே இருக்கிறம் ஏற்பாடு செய்த அச்சுவலைச் சந்திப்புப் பற்றி பெரிதாகக் குறைசொல்லி எந்தப் பதிவும் இடக்கூடாது என்று தான் இருந்தேன்.
ஏனென்றால் பொதுவாகவே நான் சக்தி தொலைக்காட்சியை எதிர்த்துப் பதிவிட்டு, பின்னூட்டமிடுவதோடு, அம்மா பகவான் பற்றியும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தேன். இதனால் சில மஞ்சட் காமாலைக் கண்களுடையவர்கள் நான் குற்றம் சொல்லிப் பிரபலமடைய முற்படுவதாக நினைத்தார்கள்.
இதனால் சில விடயங்களை கொஞ்சம் அடக்கிவாசிக்கலாம் என்று நினைத்திருந்தேன்.
மற்றவர்கள் என்ன நினைத்தாலும் எனது மனச்சாட்சிக்குச் சரியென்று படுகின்ற எல்லாவற்றையும் சொல்கின்ற, செய்கின்ற கோபி எங்கே போனான் என்று என்னை யோசிக்க வைத்த சம்பவங்கள் அவை.
(நான் அம்மா பகவான் பற்றிப் பதிவிட்ட அன்று எனது கைத்தொலைபேசிக்கு ஒரு மனநோயாளி அழைப்பெடுத்த அவருக்கு அவரது தாய் தந்தையர்கள் அல்லது நண்பர்கள் சொல்லிக்கொடுத்த இனிய வார்த்தைகளை சம்பந்தமில்லாமல் கதைத்ததை அப்போது சும்மா விட்டுவிட்டேன். பின்னர் தான் யோசித்தேன் சிலவேளை அது அந்தப்பதிவை வாசித்த ஓர் பக்தரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று.)
என்னை இந்தப் பதிவை பதிவிட வைத்தது ஓர் பின்னூட்டம் தான்.
எனது கடந்த பதிவிற்கு kajee என்ற பெயரில் இடப்பட்டிருந்த அந்தப் பின்னூட்டத்தில்
'எல்லாரும் தண்ணியில தத்தளிச்சீங்களாமே?' என்று கேட்கப்பட்டிருந்தது.
அதைப் பதிவிட்ட நண்பர் சந்திப்பிற்கு வரவில்லை என்பது வெளிப்படை. இது ஒரு விஷமத்தனமான பின்னூட்டம் என்பதிலும் எனக்கு எந்த கருத்து வேறுபாடு கிடையாது.
ஆனால் 'எல்லாரும்' என்பதன் மூலம் சும்மா வாய் பார்த்துக் கொண்டிருந்த என்னைப் போன்ற ஏராளமான பதிவர்களுக்குமல்லவா கெட்ட பெயர்?
எனக்கு யார் மது அருந்தியது அல்லது மது அருந்தவில்லை என்பது பிரச்சினை கிடையாது. யாருடைய தனிப்பட்ட உரிமையிலும் மூக்கை நுழைக்கவிரும்பவில்லை.
மது அருந்துவதற்கு 21 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் சட்ட ரீதியாக முடியும்.
(இங்கும் நான் தட்டுப்படுகிறேன். எனக்கு இன்னும் 20 ஆகவில்லை)
ஆனால் எனது கேள்வி என்னவென்றால் என்னைப் போன்ற சிறியவர்கள் அன்று வந்து மது அருந்தி வீட்டிலோ அல்லது எங்கோ பிரச்சினை ஏற்பட்டிருந்தால் ஒட்டுமொத்தப் பதிவர்களுக்கும், சந்திப்புக்குமல்லவா கெட்டபெயர் ஏற்பட்டிருக்கும்.
(இப்போது மட்டும் சந்திப்புக்கு நல்ல பெயர் இருப்பதாக சொல்லவரவில்லை)
நான் கோக் ஒன்றை எடுக்கச் சென்ற பொழுது 'என்ன வேணும்?' என்று கேட்கப் பட்டது.
'நான் கோக் வேண்டும்' என்றேன்.
அப்போது அதில் நின்றவர் 'கோக் தான் வேணுமா?'என்றார்.
நானும் 'ஓம்' என்றேன். அவர் மீண்டும் 'கோக் ஆ?' என்று நான் ஏதோ விஷத்தைக் கேட்பது போலக் கேட்டார்.
இதை எனது மொழியில் 'மதுப்பழக்கத் திணிப்புகள்... கெளரவமான வடிவில்...' என்று சொல்லலாமா???
மது அருந்துதல் என்பது வெளிநாட்டு சந்திப்புகளில் சாதாரணம் என்ற நவீனக் கருத்தை பலர் சொல்லாம்.
உண்மை தான். ஆனால் அது மேற்கைத்தேய நாடுகளில்.
இங்கு மதுபான ஏற்பாட்டுக்களைச் செய்திருந்தால் அதை சந்திப்பு முடியும் தறுவாயில் ஆரம்பித்திருந்தால் சந்திப்பும் ஒழுங்காக இருந்திருக்குமல்லவா?
மு.மயூரன் அண்ணாவின் பதிவில் சொன்னது போல 'இளையதம்பி தயானந்தா அவர்கள் இணையம் மூலம் உரையாற்றும் போது உங்களோடு முடிவில் மீண்டும் கதைக்கிறேன். ஆனால் அப்போது நீங்கள் அதைக் கேட்கும் தறுவாயில் கேட்கும் நிலையில் இருப்பீர்களோ தெரியாது என்று சொன்னது தசாவதாரம் படத்தில் பூவராகவன் கமலிடம் சந்தானம் அவரது ஆட்கள் குடிபோதையில் மிதப்பதை சுட்டிக் காட்டியது' போல இருந்தது.
எங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் 'வலைப்பதிவர்களுக்கும் அச்சு இலத்திரனியல் ஊடகவியலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு' என்றே சொல்லப்பட்டதே தவிர 'இருக்கிறம் சஞ்சிகையின் ஒன்றுகூடல்' அல்லது 'இருக்கிறம் சஞ்சிகையின் கொள்கைவிளக்கச் சந்திப்பு' என்றோ குறிப்பிடப்படவில்லை.
வலைப்பதிவர்களிடமும் ஊடகவியலாளர்களிடமும் சந்திப்பை ஏற்படுத்துவதை செய்ய முற்பட்டீர்கள் என்றால் அதற்காக என்ன செய்தீர்கள், ஆரம்பத்தில் எங்களை சுருக்கமாக அறிமுகப்படுத்தச் சொன்னதைத் தவிர?
நிறையப் பதிவர்கள் தூர இடங்களிலிருந்து இந்தச் சந்திப்புக்காக வந்திருந்தார்கள். பணம் என்பது ஒருபுறமிருக்க அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு என்ன பதில்?
தூர இடங்களிலிருந்த வந்த பதிவர்கள் சிலரின் மன ஓட்டத்தை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
(பதிவர்கள் யாருக்காவது இந்தச் சந்திப்பு திருப்தியளித்தது என்றால் என்னிடம் காரணத்துடன் சொல்லுங்கள். காரணம் எற்புடையது என்றால் இந்தப் பதிவிற்காக நான் பகிரங்கமாக பதிவில் மன்னிப்புக் கோருகிறேன்.)
சிலர் புதிய காரணமொன்றுடன் வரலாம்.
இருக்கிறம் சஞ்சிகை யாரையும் வற்புறுத்தி அழைக்கவி்ல்லை, விரும்பியவர்களையே அழைத்தது என்று.
இதற்குப் பெயர் தான் சப்பைக் கட்டு கட்டுதல் என்பது.
'இலங்கைப் பதிவர்களையும் ஊடகவியலாளர்களையும் இணைக்கும் இனிய சந்திப்பு' என்றால் அந்தப் பதத்தின் மூலம் இலங்கையிலிருந்து பதிவிடும் ஒவ்வொருவரும் இந்தச் சந்திப்பின் காரணிகளாகிவிடுகின்றனர்.
பதிவர்கள் இந்தச் சந்திப்பைப் பகிஷ்கரித்திருந்தாலோ, அல்லது ஓரிருவர் மட்டும் கலந்து கொண்டிருந்தாலோ சந்திப்பு உண்மையில் தோல்வியடைய வேண்டும்.
பதிவர்களையும் ஊடகவியலாளர்களையும் இணைக்கும் சந்திப்பு என்றால் பதிவர்கள் சார்பாக யார் உரையாற்றினார்கள்?
லோஷன் அண்ணா ஊடகவியலாளர்.
மருதமூரான் அண்ணா யாழ்தேவி திரட்டியின் சார்பில்.
எங்கே பதிவர்கள் சார்பாக???
பதிவர்களைப் பற்றி யார் கணக்கெடுத்தது?
ஏதோ பாடசாலையில் வைத்து படிப்பிப்பது போல எம்மை நிற்கவைத்துவிட்டு (இருக்கிறம் சஞ்சிகையில் நின்றோம்... ஹா ஹா ஹா... மிக்க நன்றி) முன்னால் ஏதோ கதைத்துக் கொண்டிருந்தால் நாம் என்ன செய்வது?
இங்கே சிலர் பதிவர்கள் என்றால் என்ன பெரியவர்களா?
இலவசமாக புளொகர் அல்லது வேர்ட்பிரஸில் அல்லது வேற ஒரு தளத்தில் கணக்கைத் தொடங்கிவிட்டு ஓர் யுனிக்கோட் தமிழ் எழுதுவானும், ஒரு கணணியும், ஓர் இணைய இணைப்பும் இருந்தால் யாருமே பதிவிடலாமே.
பிறகென்ன நீங்கள் நின்றால் ஏதோ ஜனாதிபதி நின்றதைப் போல குறை சொல்கிறீர்கள் என கேள்வி எழுப்பலாம்.
நிச்சயமாக... நாம் சாதாரமானவர்கள் தான்...
எம்மிடம் இருப்பது சிறிய நகைச்சுவை உணர்வும், சிறிய தேடலும் தான்...
நாங்கள் டம்மிகள் தான்...
ஆனால் டம்மிகளை சந்திக்கவும், அவர்கள் மூலமாக ஒரு சஞ்சிகையை பிரபலப்படுத்த நடவடிக்கை எடுத்தீர்கள் என்றால் அந்த சஞ்சிகையை என்னவென்று சொல்வது?
(சஞ்சிகையின் பிரபலத்திற்கு(ம்) இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை திரு.இளையதம்பி தயானந்தா ஏற்றுக் கொண்டதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்)
பதிவர்கள் மீதும் குற்றச் சாட்டுக்கள் எழுப்பப்படலாம்.
இரண்டாம் கொட்டகையிலிருந்து அதற்குப் பின் யாருமே நிகழ்ச்சியைக் கவனிக்கவில்லை என்று.
உண்மை... இரண்டாம் கொட்டகையிலிருந்தவன் என்ற வகையில் அதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.
எங்களுக்கு எதுவுமே கேட்கவில்லை.
லோஷன் அண்ணா உரையாற்றத் தொடங்கியபோது எங்களுக்கு 'கிர் கிர் கிர்' என்று ஏதோ ஒரு சத்தம் தான் கேட்டது.
மருதமூரான் அண்ணா உரையாற்றியபோதும் அதே பிரச்சினை.
மற்றவர்களின் பேச்சுக்களை நாங்கள் கேட்க விரும்பவில்லை என்று நீங்கள் தப்பாக நினைத்துக் கொண்டாலும் மேலே குறிப்பிட்ட இருவரும் பதிவர்கள். அவர்கள் எங்களில் ஒருவர். அவர்கள் பேசும் போது அதைக் கேட்காமல் விடுத்து அவர்களை அவமானப்படுத்த எமக்கு என்ன அவசியம்?
மழையை நோக்கி விரலை நீட்டுவதை என்னால் ஏற்கமுடியவில்லை.
கொழும்பின் பொதுவான வானிலை சுட்டெரிக்கும் வெயில் தானே?
அன்று வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தால் பதிவர்கள் யாவரும் அந்த வெயிலில் காய வேண்டுமா?
மழை மட்டும் தான் அசெளகரியமா?
பலர் நேரடி ஒளிபரப்பில் குறை இருப்பதாக குறை சொல்லியிருந்தார்கள்.
ஐயா! நாங்கள் நேரே சென்றே எங்களால் ஒன்றையும் காணமுடியவில்லை. நீங்கள் நேரடி ஒளிபரப்பைப் பற்றிக் கதைக்கிறீர்கள்.
நேரடி ஒளிபரப்பை செய்த அதே கெளபோய்மது தான் பதிவர் சந்திப்பையும் நேரடி ஒளிபரப்புச் செய்தார்.
அங்கே போதுமான Extension code கள் கூட இல்லை என்று சொன்னதாக ஓர் நினைவு.
அவர் என்ன செய்யமுடியும்?
அது அவரது தனிப்பட்ட முயற்சி.
அவரது முயற்சிக்கு நான் தலைவணங்குகிறேன்.
நான் பலரிடம் தெரிவித்ததை திரும்பவும் சொல்கிறேன்...
அச்சு-வலை சந்திப்பு என்பதில் வலை என்பது குறிக்கும் வலைப்பதிவர்கள் சந்திப்பில் தனியே ஒரு மூலையில் நின்ற உணர்வு.
திருமண வீட்டிற்கு வருமாறு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வந்தவர்களை நிற்கவைத்து கடைசிப்பந்தியில் கருகிப்போன அடிப்பானைச் சோறு போட்ட உணர்வு...
நான் உறுதியாகத் தெரிவிக்கிறேன்... நான் அன்றைய சந்திப்பை பதிவர் சந்திப்பு என்று நினைத்து வந்து ஏமாறவில்லை.
வலைப்பதிவர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டுதான் சென்றேன்.
எங்கள் பதிவர்களின் இரண்டாம் சந்திப்பு இடம்பெறும் பாருங்கள்...
அப்போது நிகழ்ச்சிகளை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்றும், அழைப்பாளிகளை எவ்வாறு மதிப்பது என்றும் சொல்லித் தருகிறோம்.
*************************************************************************************************
எனக்கு இருக்கிறம் மீது எந்தத் தனிப்பட்ட கோபமும் கிடையாது.
நான் இனி இருக்கிறமை முன்பைவிட அதிகமாக வாங்கத் தான் போகிறேன், ஏனென்றால் எங்கள் பதிவர்களின் ஆக்கங்கள் எழுத்தில் வருவதை படிப்பதற்கு எனக்கு பெருமை, விருப்பம் தான்.
நான் எந்தத் தனிப்பட்ட நபர்களையும் தாக்கவில்லை. அந்த அவசியமும் கிடையாது.
எனது சில கருத்துக்கள் சில நண்பர்களின் பதிவுகளின் சொல்லப்பட்ட கருத்துக்களாக இருக்கலாம். எனினும் எந்தக் கருத்தையும் களவாடும் நோக்கம் எனக்கில்லை. சில கருத்துக்கள் பொதுவாக இருப்பது பிழையில்லையே. சில கருத்துக்கள் என்னைப் பாதித்திருக்கலாம்...
*************************************************************************************************
அன்றைய சந்திப்பிற்கு வந்த நண்பர்கள் தயவுசெய்து எனது மின்னஞ்சல் முகவரியான kanagagopi@gmail.com என்பதற்கு ஓர் மின்னஞ்சல் அனுப்புங்கள்.
என்னிடம் கொஞ்சப் புகைப்படங்கள் உள்ளன. அவற்றை மின்னஞ்சல் முகவரி தெரிந்த அனைவருக்கும் அனுப்பிவிட்டேன்.
அவற்றை வலைப்பதிவில் வெளியிட விரும்பாததால் தனித்தனியே அனுப்புகிறேன்.
வேண்டுமானால் தொடர்புகொள்ளுங்கள்.
இலங்கையிலிருந்து வெளியாகும் பொழுதுபோக்குச் சஞ்சிகையான 'இருக்கிறம்' ஏற்பாடு செய்த அச்சுலைச் சந்திப்பு நேற்று (02.11.2009)மாலை இடம்பெற்றது.
'அச்சு' ஊடகத்தினருக்கும் 'வலை'ப் பதிவர்களுக்குமிடையில் இணைப்பொன்றை ஏற்படுத்த இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மழை வந்து குழப்பிவிட ஏற்பாடுகள் ஒருகணம் ஆடிப்போயின.
எனினும் ஓரளவுக்கு சுதாகரித்துக் கொண்ட ஏற்பாட்டுக் குழுவினர் மாற்று ஏற்பாடுகளைச் செய்து நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு ஆவன செய்தனர்.
சரி... இனி எனது தமிழில்....
நான் அச்சவலைச் சந்திப்புக்குப் போனதே பெரிய பமபல்.
எனக்கு இருக்கிறம் அலுவலகம் எங்க இருக்கு எண்டு தெரியாது. சரி எண்டு வந்தியண்ணாற்ற கேட்டன். அவரும் ஆதிரை அண்ணாற்ற கேள் எண்டார்.
ஆதிரை அண்ணா தான் அலுவலகம் செல்ல வேண்டி இருப்பதால் சரியான நேரத்துக்கு வரமுடியாது என்பதால் பதிவர் பால்குடி அண்ணாவ தொடர்பு கொள்ளுமாறு அவரின் தொடர்பு கொள்ளுமாறு கூறி அவரின் அலைபேசி இலக்கத்தைத் தந்தார்.
எனக்குப் பெரிய குழப்பம், அவரை பால்குடி என்று கூப்பிடுறதா அல்லது அவரின்ர உண்மையான பெயரில கூப்பிடோணுமா எண்டு.
சரி எண்டு முடிவே எடுக்காம அவருக்கு அழைப்பு ஏற்படுத்தி,
'ஹலோ... நான் கோபி கதைக்கிறன். கனககோபி எண்ட பெயரில பதிவிடுறனான். நீங்க பால்குடியா?' எண்டு கேட்டன்...
அவர் பயங்கரமா சிரிக்கத் தொடங்கிற்றார். எனக்கும் அப்ப தான் விசயம் விளங்கி நானும் பயங்கரமா சிரிச்சு ஒரு மாதிரி கதைச்சு முடிஞ்சிற்று.
சரி எண்டு அவரோட சேர்ந்து இருக்கிறம் அலுவலகத்திற்கு போனா அங்க தெரிஞ்ச ஒரு முகத்தையும் காணேல.
(பிறகு தான் விளங்கிச்சு, எனக்கு நிறைய முகங்களைத் தெரியாது எண்டு. படுபாவிகள்... 10, 15 வருசத்துக்கு முதல் எடுத்த புகைப்படங்கள வலைப்பதிவில் தங்கட புகைப்படமா போட்டிருக்கிறாங்க.)
பிறகு ஒருவாறு இறக்குவானை நிர்ஷன் மற்றும் யோ வொய்ஸிடம் அறிமுகமானேன். மன்னார் அமுதனை நேரடியாக அடையாளம் கண்டுகொண்டேன்.
பிறகு கொஞ்சம் (கொஞ்சமா.... 3 மணிக்கு சந்திப்பு எண்டா 3.45 வாறது கொஞ்சம் பிந்தியா?) பிந்தி வந்தியண்ணா வந்தார்.
அவருக்குப் போய் கை குடுத்து எங்கட சங்க (பச்சிளம் பாலகர் சங்கம்) முன்னேற்றம் பற்றி கதைச்சிற்று இருக்க சுபாங்கன் வந்தார்.
(வந்தியண்ணாவின் பச்சிளம் பாலகர் சங்க உறுப்பினர் பதவி ஆபத்தில் இருப்பது வேறுகதை)
பிறகு லோஷன் அண்ணா வந்தார். பிறகு மருதமூரான் அண்ணா வந்தார்.
அப்பாடா எண்டு சுபாங்கனும் நானும் கூட்டணி அமைச்சுக் கொண்டம்.
பிறகு புற்தரைக்குப் போய் நாங்கள் அச்சுவலைச் சந்திப்பை பதிவர் சந்திப்பாக மாற்றி 5,6 பதிவர்கள் ஒன்றாக கூடி கதைத்துக் கொண்டிருந்தோம்.
பதிவர்களில் இறக்குவானை நிர்ஷன் மட்டும் முன்னனுக்குப் போயிருந்து அழகாக குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்.
அவர் மூலமாகத் தான் அங்கே என்ன நடந்தது என்பதை அறியப் போகிறோம் என்பது வேறு கதை.
(லோஷன் அண்ணாவும் அமைதியாக இருந்து பார்த்துக் கொண்டிருந்தாலும் அவர் ஊடகவியலாளரும் என்பதால் அவர் தனிப்பிரிவு.)
நிறைய இலத்திரனியல் ஊடகங்களைச் சேர்ந்தவர்களும், அச்சு ஊடகங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
குறிப்பிட்ட ஒரு ஊடகத்திலிருந்து நமது மூத்த, பிரபல பதிவர் ஒருவரது இளவரசி ஒருவர் வரவில்லை என அவர் கவலைப்படுவதை பதிவிடுமாறு இன்னுமொரு பிரபல, மூத்த பதிவர் என்னைக் கேட்டுக் கொண்டாலும் மூத்த,பிரபல பதிவர் பாவம் என்பதால் அதைப் பற்றிப் பதிவிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ;)
(நன்றாகக் கவனிக்க...
ஒருவர் மூத்த, பிரபல பதிவர்... மற்றையவர் பிரபல, மூத்த பதிவர்... ஹி ஹி ஹி...)
சந்திப்பில் இருக்கிறம் சஞ்சிகையின் உள்ளடக்கங்களைப் பற்றி சில விவாதங்கள் இடம்பெற்றாலும் இருக்கிறம் சஞ்சிகையைப் பற்றிக் கதைக்கின்ற உரிமை, தகுதி எனக்கில்லாததால் அதைப்பற்றிக் கதைக்கவிரும்பவில்லை.
இருக்கிறம் சஞ்சிகையின் பிரதிகளில் இதுவரை 5 அல்லது 6 சஞ்சிகைகளைத் தான் வாங்கியிருக்கிறேன்.
ஒரு சஞ்சிகையை வாங்கிப்படிக்காமல் அதைப்பற்றி விமர்சிக்க எனக்கு எந்தத் தகுதியும் கிடையாது.
(இருக்கிறம் சஞ்சிகையை வாங்காததற்கு காரணம் அவர்களது உள்ளடக்கங்கள் சரியில்லை என்பதால் அல்ல. பொதுவாகவே பொழுதுபோக்குச் சஞ்சிகைகளை நான் வாங்குவதில்லை. இந்தியச் சஞ்சிகைகளை வாங்கியதே கிடையாது.)
வேறென்ன...
பதிவர்களின் அலைபேசி இலக்கங்களைப் பரிமாறிக் கொண்டதால் இனி அவ்வப்போது 'superb post' என்று குறுஞ்செய்திகள் செல்வதற்கு இடமுண்டு.
**********************************************************************************************
நேற்றைய சந்திப்பிற்குப் பிறகு இனி பதிவர்கள் எல்லோரையுடைய பெயர்களுக்குப் பின்னாலும் 'அண்ணா' சேர்க்கப்படும்.
இறக்குவானை நிர்ஷன் அண்ணா, யோ வொய்ஸ் அண்ணா, சந்ரு அண்ணா...
சுபாங்கன் தான் நடுவில் நிற்கிறார். 2 வயது மூத்தவர் என்பதால் அண்ணா என்றழைப்பதா இல்லையா என்று மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததும் முடிவு எடுக்கப்படும்.
(மற்றவர்களை ஏற்கனவே அண்ணா என்றழைப்பது தான் வழக்கம் என்பதால் பிரச்சினையில்லை)
**********************************************************************************************
சரி...
இனி ஓரிரண்டு படங்கள்....
இலங்கை கிறிக்கெற் அணி ரெஸ்ற் தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு வந்தது தெரியும், ஆனால் எப்போது பெரியளவில் தோற்றது என நினைக்கிறீர்களா??? சிலவேளைகளில் பாகிஸ்தான் அணியுடனான கடைசி இரண்டு ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளின் தோல்விகளையும், இருபதுக்கு இருபது போட்டியின் தோல்வியையும் சொல்கிறேனா என்றும் யோசிக்கலாம்.
ஆனால் அதுவல்ல விடயம். கிறிக்கெற்றில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்பதை அறியாத மூடன் அல்லன் நான்.
இலங்கை கிறிக்கெற் அணி கடந்த சிலவருடங்களாக போட்டியின் ஒழுங்குமுறைக்கமைவாக விளையாடும் அணி (Team playing with the Spirit of the game) என்ற விருதை பெற்று வந்தது நீங்கள் அறியலாம்.
ஆனால் கடந்த பாகிஸ்தான் தொடரும், இவ் நியூசிலாந்து தொடரும் அவ்வாறு செல்வதாக தெரியவில்லை.
பாகிஸ்தான் அணியுடனான 2 ஆவது ரெஸ்ற் போட்டியின் போது சங்கக்காரவை நடுவர் பிழையான முறையில் சயீட் அஜ்மலின் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்ததாக அறிவிக்க சங்கக்கார முணுமுணுத்தபடி நடுவரை திரும்ப திரும்ப பார்த்து சென்றமை குறிப்பிடத்தக்கது. அந்த ஆட்டமிழப்பு அறிவிப்பு தவறானது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால் நடுவர் ஆட்டமிழப்பு வழங்கியதும் வெளியேறுவது விதிகளின் படி அவசியம் என்பது சங்கக்கார அறியாதது இல்லை.
பின்னர் ஒருநாள் போட்டித் தொடரில் களத்தடுப்பாட்ட வீரர் எறிந்த பந்து அப்துல் ரஸாக் இன் துடுப்பில் பட்டது தற்செயலாக. ரஸாக் அதைக் கவனிக்காமல் (அப்படித் தான் எனக்குத் தெரிந்தவரை தொலைக்காட்சியில் காட்டினார்கள்) இன்னொரு ஓட்டத்தை ஓட சங்கக்கார ரஸாக் இடம் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. அப்துல் ரஸாக் ஓர் அமைதியான வீரர் எனக் கணிக்கப்படுபவர். அப்படிப்பட்ட அமைதியான வீரர் மீது சங்கக்கார வாக்குவாதப்பட முற்பட்டது பற்றி சில கிறிக்கெற் விமர்சகர்களும் அதிருப்தியை தெரிவித்திருந்தார்கள்.
அதே போல் ஓர் சம்பவத்தில் அப்ரிடி ஈடுபட இம்முறை ஜெயவர்தனா வந்து வாக்குவாதப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எல்லாவற்றிலும் மேலாக யுனிஸ்கானின் ஆட்டமிழப்பொன்றை நடுவர் வழங்காது விட யனிஸ்கான் தானாக வெளியேறியிருக்க வேண்டும் என்ற ரீதியில் யுனிஸ்கானிடம் வார்த்தைப் பிரயோகங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு முரளி கூட அப்ரிடியை ஆட்டமிழக்கச்செய்த பின்னர் போகுமாறு சைகை செய்ததும், இளம்வீரர் உமர் அக்மல் ஆறு ஓட்டமொன்றை அடித்தபின்னர் அடுத்த பந்தில் இலக்குகள் சரிந்து ஆட்டமிழக்க ஆக்ரோஷமான பார்வையை முரளி வெளிப்படுத்தியதும் அடுத்த முறை இலங்கைக்கு விதிகளின் படி ஒழுங்குமுறையாக விளையாடும் அணிக்கான விருது கிடைக்காது என்பதை அடித்துச் சொல்கின்றன.
அணிக்குள்ளும் வீரர்கள் கோப வார்த்தைகளை வீசுவதும் வழக்கமாகிவிட்டது.
லசித் மலிங்க பாகிஸ்தான் அணிக்கெதிராக ஓட்டங்களை வாரிவழங்க சங்கக்கார கத்தியதும், நேற்று முரளி களத்தடுப்பில் ஈடுபடாமல் கால்பந்து விளையாட்டில் ஈடுபட்டு சோம்பறித்தனமாக இருந்ததும், ரங்கன ஹேரத்தின் கையில் பந்து பட்டு பந்து விலகிச்செல்ல முரளி பந்தை எடுக்கும் அவசரம் இன்றி ஆறுதலாக ஓடி (நடந்து) சென்றதும் அவ்வளவு நல்லதாக தெரியவில்லை.
பாகிஸ்தானுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சனத் ஜெயசூரியா பிழையான அழைப்பு மூலம் சங்கக்காரவை ரண் அவுட் செய்ய சங்கக்கார கடுமையான முணுமுணுப்புக்களுடனும், கோபத்துடனும் வெளியேறியதும் அதன் பின்னர் அடுத்த போட்டியில் சனத்திற்கு ஓய்வு (அப்பிடி தான் சொல்றாங்க.) வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய காலகட்டங்களில் அணித்தலைவர் அமைதியானவராக வேண்டப்படுகின்ற வேளையில் சங்கக்கார அனுபவங்களின் மூலம் தனத உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும், ஏனென்றால் கிரேம் ஸ்மித், டோனி போன்ற Captain Cool அணித்தலைவர்கள் மூலம் அவ்வணிகள் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது உள்ளங்கை நெல்லிக்கனி.
சங்கக்காரவின் கிறிக்கெற் அறிவோ, அல்லது அனுபவமோ கேள்விக்குரியதன்று. நாமெல்லோரும் அதை அறிவோம்.
(பம்பல் பதிவர் கனககோபி சீரியஸாக மாறக் கூடாது என்பதால் ஒரு தகவல்-
இரட்டைக் குழந்தைகள் பிறந்ததால் குழந்தைகள் இரவில் அழுது சங்கக்காரவை நித்திரை செய்யவிடாமல் தடுப்பதால் தான் சங்கக்கார இப்படி ஆக்ரோஷமாக நடந்துகொள்கிறாரோ???!!!)