க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

பதிவர் சுபாங்கன் என்னை அழகு, காதல், பணம், கடவுள் என்ற தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார்.
எனக்கு உண்மையிலேயே என்ன எழுதுவது என்று தெரியவில்லை.
ஆனால் தந்த அழைப்பிற்காக எழுத வேண்டுமே... அது தான்...


அழகு....


எல்லாமே அழகு தான்...
என்னைப் பொறுத்தவரை நான் விரும்பும் எல்லாமே அழகு தான்.
ஐஸ்வர்யாராஜ் அல்லது ஏனைய உலக அழகிகள், உலக அழகர்கள் எனக்கு அழகாகத் தெரியமாட்டார்கள்... ஆனால் இன்னொருவர் அழும்போது கண்ணீரைத் துடைக்கும் மனிதத்தை கொண்ட, மற்றவர்கள் அழகில்லை என நினைக்கும் ஒருவர் எனக்கு பேரழகியாக, பேரழகனாகத் தெரிவர்...
எல்லாவற்றையும் விட நான் நேசிக்கும், என்னை நேசிக்கும் எவருமே எனக்கு பேரழகர்கள், பேரழகிகள் தான்...
யாரையும் இதுவரை அழகன், அழகி என்ற பார்வையில் வேறுபடுத்தியது கிடையாது. இனிமேலும் அப்படியே இருக்க விரும்புகிறேன்.
அழகு எங்குமில்லை, அன்பில் தான் இருக்கிறது.
சிறுகுழந்தை பொதுவாக எல்லோருக்கும் அழகாகவே தெரிகிறது. அது ஏன்?
ஏனென்றால் அந்தக் குழந்தையை நீங்கள் எதிரியாக நினைப்பதில்லை, அந்தக் குழந்தையிடம் கெட்ட பழக்கங்கள் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே அந்த எண்ணம் தானாகவே அன்பை ஏற்படுத்துகிறது. அந்த அன்பு உங்களை அந்தக் குழந்தையை அழகாகக் காட்டுகிறது.
வளர்ந்த பின்னர் ஒவ்வொருவரும் பிழை செய்ய ஆரம்பிக்கும் போது அந்தப் பிழைகள் எம் கண்முன்னே வருவதால் சிலர் அழகில்லாமற் தெரிகிறார்கள்.
அன்னை தெரேசாவின் முகத்தை உற்றுப் பாருங்கள்... பேரழகியாத் தெரிவார்.



காதல்...



பச்சிளம் குழந்தையிற்ற கேக்கிற கேள்வியா இது?
சரி சரி...
முட்டாளை அறிஞனாக்கும், அறிவாளியை முட்டாளாக்கும் என்று சொல்வார்கள்.
புற அழகில் வரும் காதலை விட உண்மையான அன்பில் வரும் காதல் மேல் நம்பிக்கையுள்ளவன்.
(இது பயங்கர சுயநலம்... ஏனென்டா அழக பாத்து காதலிக்கிறது எண்டா என்னயெலல்லாம் யாரும் காதலிக்க மாட்டாங்க தானே? ;) )



காதலர்கள் பொய்யர்களாக இருந்தாலும், காதல்கள் பொய்யாக அமையாது என்பது எனது நம்பிக்கை.
காதல் இல்லாமல் இங்கு யாரும் இல்லை என்பேன். சிலர் வெளிப்படுத்திக் கொள்வார்கள். பலர் வெளிப்படுத்துவதில்லை.
எனக்குக் காதல் பிடிக்கும். அந்த உணர்வு பிடிக்கும். அது ஏற்படுத்தும் இன்ப வலி பிடிக்கும்.
சில இடங்களில் நிஜவலிகளும் ஏற்படுவதுண்டு.
நடக்க ஆரம்பிக்கும் போது தான் விழுவேன் எனக் குழந்தைக்கு தெரிவதில்லை.
காதலிக்க ஆரம்பிக்கும் பலருக்கும் அது வலிகளையும் தரும் என்பதும் புரிவதில்லை.



'உன்னை மறக்க நினைக்கிறேன், நம் காதல் நம் கண்முன்னே வருகிறது
நம் காதலை மறக்க நினைக்கிறேன், உன் முகம் என் கண்முன்னே வருகிறது இரண்டையும் மறக்க நினைக்கிறேன்... மரணம் கண்முன்னே வருகிறது...'


இது நான் எழுதிய வரிகள்... (கவிதை எண்டு சொன்னா எங்க கவிதய காணேல எண்டு மொக்கை போடுவீங்க தானே? அது தான்)


'உன்னுள் என்னை நான் தொலைத்தேன்...
நீ அருகே இல்லாதபோது என்னைக் கண்டுபிடித்தேன், மறுபடி தொலைக்கும் ஆசையில்'





பணம்...




பணமின்றி வாழ்க்கையில்லை...
ஆனால் பணமே வாழக்கையில்லை...
அடிக்கடி எனக்கு நானே, சிலவேளைகளில் என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு சொல்லும் வரிகள் இவை.
(Money is a must for life, but money isn't the life)


வீட்டில் அடிக்கடி நகைச்சுவையாக 'காசென்ன காசு... இண்டைக்கு வரும்.. நாளைக்கு போகும்' என்று சொல்லிக் கொள்வேள்.
ஆனால் பணமின்றி எதுவுமே இல்லை என்பது எனக்குத் தெரியும்.
பணத்தை நோக்கியே உலகம் அசைகிறது.
இன்னொருவரின் இரத்தத்தைக் குடிக்காத, இன்னொருவரின் கண்ணீரோடு வராத பணம் என்றென்றும் எனக்கு வேண்டும்.



கடவுள்...



கடவுள்...!!! இதுவரை கண்டதில்லை என்கிறார்கள் பலர். ஆனால் பலமுறை கண்டிருக்கிறேன், உணர்ந்திருக்கிறேன்...
மக்கள் கஷ்ரப்படும் போது அவர்களுக்கு உதவும் எல்லோருமே கடவுளர்கள் தான்.
ஆனால் மதங்களையும், வழிபாடுகளையும் வெறுக்கிறேன்.
மதங்கள் இல்லாவில் இந்தியாவில் ஏன் அடிக்கடி கலவரங்கள் ஏற்படப்போகிறது?
மதங்கள் வேண்டாம். கோவில்கள் வேண்டாம்.
மனிதம் மட்டும் போதும்.
உணராத ஒருவிடயத்திற்காக நம்மிடையே சண்டைகள் வேண்டாம்.
எனக்கு மேல் உள்ள சக்தியை நம்புகிறேன். அதைத் தான் கடவுள் என்கிறார்கள். ஆனால் மதங்களை நம்பவில்லை, வெறுக்கிறேன்...
ஒரு மதத்தில் சரியென்று சொல்லப்படுகின்ற விடயம் இன்னொரு மதத்தில் பிழையெனப்படுகிறது.
ஆகவே எங்கேயோ பிழை இருக்கிறதல்லவா...???
(திரும்பவும் மதங்கள் தொடர்பான வாதத்தை ஏற்படுத்த விரும்பவில்லை.)

**************************************************************************


இப்போது தான் எனக்கு மகிழ்ச்சி...
இன்னொருவரை மாட்டிவிடுவதில் என்ன ஒரு மகிழ்ச்சி...
எனக்குத் தெரிந்தவரை பொதுவாக எல்லோரும் எழுதிவிட்டார்கள்.
எனக்கு யாரை அழைப்பது என்று தெரியவில்லை...

மீண்டும் நண்பன் இலங்கனை அழைக்கிறேன்...
நண்பர் Thevash ஐ அழைக்கிறேன். -இப்போது தான் எழுத ஆரம்பித்திருக்கிறார். அவரை குழுமத்தோடு இப்படியான வகையில் சேர்த்தால் அவரின் எழுத்துக்கள் மேலும் வெளிவர உதவும் என நம்புகிறேன். நண்பரே வாருங்கள்.
நண்பர் இறக்குவானை நிர்ஷனை அழைக்கிறேன் - புதிய மலையகம் என்ற இவரது சமூக சீர்திருத்த எழுத்துக்களை இரசிக்கிறேன். நண்பரே வாருங்கள்.
சகோதரி தர்ஷாயினி - ஒப்பீட்டளவில் புதியவர். (நானெல்லாம் 1 வருஷத்துக்கு மெல இருந்து குப்பை கொட்டுறன். என்னோட ஒப்பிட்டா புதியவர் எண்டு சொல்ல வந்தன்.) அருமையான கவிதைகளுக்கு சொந்தக்காரர். அன்புடன் அழைக்கிறேன்.

அழைத்த இரு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
இந்த தொடர் பதிவை மேலும் விரிவுபடுத்துங்கள்.
உங்கள் நண்பர்களை, நீங்கள் படிக்கும் பதிவர்களை தொடர அழையுங்கள்.

குறிப்பு: நண்பர் யோ வொய்ஸிடம் மன்னிப்புக் கோருகிறேன். நீங்கள் தான் முதலில் பிடிக்கும் பிடிக்கும் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தீர்கள். ஆனால் ஏதோ குழப்பத்தில் அழகு, காதல், பணம், கடவுள் தொடர்பதிவை முதலில் வந்ததென நினைத்து எழுதிவிட்டேன்.
உங்கள் தொடர்பதிவை விரைவில் பதிவிடுகிறேன்...

***********************************************************************

நிறைய நாட்களுக்கு முன்னர் வந்தியத்தேவன் அண்ணா என்னை ஊக்கப்படுத்தி விருதொன்றை தந்தார். அவர் தந்து சில நாட்களின் பின்னர் சகோதரர் சதீஷ் அவர்களும் அதே விருதை தந்திருந்தார்கள்.
அவர்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.



நானும் இதை யாருக்காவது கொடுக்க வேண்டும் என்று கிளம்பிற்றன்...
ஆனால் விருது வழங்குபவர் தனக்கு தகுதியில்லாம விருது கொடுக்க வெளிக்கிட்டா பிறகு அண்மைய தமிழக அரசின் சினிமா விருதுகள் போலாகிவிடும் என்பதால் விருது என்ற வார்த்தையை பரிசு என மாற்றிக் கொள்கிறேன்.
என் சார்பான அன்புப் பரிசை கீழ்வரும் நண்பர்களுக்கு கொடுக்கிறேன். பெற்றுக் கொள்ளுங்கள் நண்பர்களே...

இறக்குவானை நிர்ஷன் - படிக்கத் தொடங்கி குறுகிய காலத்தில் வெகுவாகப் பிடித்துப் போய்விட்டது இவரது எழுத்துக்கள். மலையகம் பற்றிய இவரது எழுத்துக்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அவருக்கு என் அன்புப் பரிசு.
நண்பர் இலங்கன் - ஒரே வகுப்பில் படித்திருந்தாலும் இருவரும் எழுதுவது மற்றொருவருக்கு தெரியாமலேயே எழுதிக் கொண்டிருந்தோம் சில காலங்கள். அருமையான நகைச்சுவையாளன். அவரை வாழ்த்தி எனது அன்புப் பரிசு.
நண்பர் தேவேஷ் - புதியவர். கனடாவிலிருந்து பதிவிடுகிறார் என நம்புகிறேன். நண்பரின் கவிதைகளும், ஏனைய ஆக்கங்களும் மென்மேலும் வெளிவர அவரிடம் வேண்டிக் கொண்டு அவருக்கு என் அன்புப்பரிசு.

நண்பர்களே உங்கள் எல்லோருடைய எழுத்துக்களையும் இரசிக்கிறேன். நான் மற்றவர்களுக்கு அன்புப்பரிசு வழங்கவில்லை என்பதால் உங்கள் எழுத்துக்களை இரசிக்கவில்லை என்று அர்த்தப்படாது. மற்றவர்கள் பொதுவாக ஏற்கனவே விருது பெற்றுவிட்டார்கள் என்று நம்புகிறேன்.

பதிவிற்கு முன்பு நான் சில விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்...
நான் நாத்திகக் கருத்துக்களைக் கொண்ட ஆத்திகன்.
எமக்கு மேலான சக்தியை நம்புகின்ற போதிலும் மதங்களையும், வழிபாடுகளையும் தேவையில்லையென்று கருதுகின்றவன்.

எனது அக்காவிற்கு தரம் 2 இல் படிக்கின்ற ஓர் மகள் இருக்கின்றாள். கொழும்பில் இருக்கின்ற பிரபலமான மகளிர் பாடசாலையில் கல்விகற்கிறாள்.
சிலநாட்களுக்கு முன்னர் அவளின் வகுப்பாசிரியை அவளுக்கு அம்மா பகவான் எனப்படுகின்ற ஒருவரின் படத்தை கொடுத்து அவளிடம் வைத்திருக்குமாறு கூறினாராம்.
8 வயதான அந்தப் பிஞ்சு மனதில் ஓர் ஆசிரியை எவ்வாறு அப்படியான ஓர் மதத்திணிப்பை அல்லது போலி கடவுள்களை திணிக்கலாம் என்பது தான் எனது கேள்வி.
இது அம்மா பகவான் என்பவருக்கு எதிரான ஆக்கமல்ல. அவரை பின்பற்றுபவர்களுக்கு எதிரான ஆக்கமுமல்ல. அந்த நம்பிக்கையை மற்றவர்களிடம் திணிக்க எத்தனிப்பவர்களுக்கு எதிரானதே ஆகும்.

8 வயதில் நீங்கள் படிப்பிக்கின்ற ஒவ்வொரு விடயமும் அந்தக் குழந்தைகளின் மனதில் வாழ்க்கை முழுவதும் நிற்கப் போகிறதே?

நீங்கள் சிவபெருமானின் படத்தைக் கொடுத்துவிட்டிருந்தால் வேறுவிடயம். அந்தக் குழந்தை சைவசமயத்தை பின்பற்றுகிறது. ஆகவே அது பிழையானதல்ல.
ஆனால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படாத ஓர் விடயத்தை எவ்வாறு திணிக்கலாம்?

சில காலங்களுக்கு முன்னர் நான் இந்த அம்மா பகவான் பற்றி ஆராய்ந்த போது எனக்கு சில விடயங்கள் அறியக் கிடைத்தன.
அவரின் உண்மையான பெயர் விஜயகுமார் என்றும் அவர் இந்தியாவின் அரச காப்புறுதி நிறுவனமொன்றில் முகவராக பணிபுரிந்தார் என்றும் அங்கிருந்து பணமோசடி காரணமாக பணிநீக்கம் செய்யப்பட இன்னொரு நிறுவனத்தை தான் தொடங்கினாரென்றும் அங்கும் பணமோசடி செய்து காவல்துறையினரால் தேடப்பட பின்னர் இந்த கடவுள் வேடத்துள் நுழைந்தார் என்றும் அறிய முடிந்தது.
அத்தோடு 1990ம் ஆண்டு அல்லது அதற்கு கிட்டிய ஆண்டொன்றில் தனது ஆச்சிரமத்திற்கு வந்த இளம்பெண்களை வீட்டுக்கு அனுப்பாமல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார் என்றும் அதன்பின்னரே இப்போது இருக்கும் தங்கக் கோயிலினுள் (Golden temple) நுழைந்தார் என்றும் அறியக் கிடைத்தது.

சிலவேளை இந்தத் தகவல்கள் முழுமையாக உண்மையாக இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் அவரது இயற்பெயர் விஜயகுமார் என்பதும், அவர் காப்புறுதி நிறுவனத்தில் பணிபுரிந்தார் என்பதையும் அவரது பக்தர் ஒருவர் ஏற்றுக் கொண்டார். ஆனால் அவர் காப்புறுதி நிறுவனத்திலிருந்து தானாக விலகியதாகவும், அவர் புதிய நிறுவனம் தொடங்கியமை உண்மை என்றும் ஆனால் அங்கே பணமோசடி நடைபெறவில்லை என்றும் கூறினார்.
1990 இல் காவல்துறையினர் அவரை பெண்கள் துஷ்பிரயோகத்திற்காக கைதுசெய்ய முயன்றார்கள் என்றும் ஆனால் கைதுசெய்யவில்லை என்றும் மறுத்தார். (விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறார்கள்!)

ஆகவே நான் மேலே கூறியவை உண்மையாக இருக்கலாம்.

ஆனால் இவரைச் சுற்றி இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் போது ஓர் ஆசிரியர் உண்மை நிலை தெரியாமல் எவ்வாறு செயற்படலாம்?
ஆகக் குறைந்தது அந்தக் குழந்தையின் பெற்றோரின் அனுமதி பெறப்பட்டதா?

ஏன் இவ்வாறு ஓர் சமூகத்தை பிழையான வழியில் செலுத்த முயல்கிறீர்கள்?

இதே போன்றதொரு சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் எனக்கு நேரடியாக நடந்தது.
இலங்கையிலுள்ள ஆன்மிக நிறுவனமொன்று (ஒருவகை மிஷன்) வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களிலுள்ள மக்களுக்கு உணவு, உடைகளை அனுப்பியது. அந்த குழுவில் என் நண்பன் ஒருவன் இருந்தான். அவன் அந்தப் பணிக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டதற்கமைய அங்கே சென்றேன்.
(நான் இரண்டு நாட்கள் அதுவும் அரை நாட்கள் தான் செய்தென். அந்த நண்பர்கள் ஏராளமான நாட்களாக அந்தப் புனிதமான பணியை செய்தார்கள். என்னை விளம்பரப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.)

மக்களுக்கு தேவையான பொருட்களை வைத்து பொதிசெய்வது தான் அந்த வேலை.
அந்தப் பொதியில் நிறையப் பொருட்களை வைத்தார்கள்.
ஆனால் அத்தோடு விபூதி உட்பட சில பொருட்களையும், சில சுவாமிப் படங்களையும், சில சுலோகங்களை கொண்ட கடதாசிகளையும் வைத்தார்கள்.
நான் அந்த நண்பனிடம் கேட்டேன், 'எல்லாம் செய்கிறீர்கள் சரி. ஆனால் ஏன் அந்த விபூதி உட்பட்ட சமயப் பொருட்கள். அந்த மக்களில் வேறு சமயத்தவர்கள் இருக்கமாட்டார்களா? நாத்திகர்கள் இருக்கமாட்டார்களா? அந்த மக்களின் அவலத்தைப் பயன்படுத்தி நீங்கள் சமயத்தை அந்த மக்களிடம் திணிக்கிறீர்கள் அல்லவா? ஆங்கிலேயர்கள் எம்மை ஆண்டுவிட்டு எம்மிடம் ஆங்கிலத்தையும் அவர்களது சமயத்தையும் திணித்துவிட்டுச் சென்றதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? கிறிஸ்தவர்கள் மதமாற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை வைக்கும் நீங்கள் இதற்கு என்ன சொல்கிறீர்கள்?' என்றேன்.
நண்பர் விடை சொல்லவில்லை. அவரால் முடியாது. ஆனால் அவர் வெறும் தொண்டர் தான். தலைகள் தான் இவற்றிற்கு பதிலளிக்க வேண்டும்.

குறிப்பு: எந்த மதங்களையோ, அவர்களின் நம்பிக்கைகளையோ கேவலப்படுத்தும் நோக்குடனோ அல்லது எந்த தனிநபர்களிற்கு எதிராகவோ இந்தப் பதிவை இடவில்லை.
நண்பர்களுக்கு எதிர்க்கருத்து இருப்பின் உங்கள் பெயர்களுடன் பதிலளியுங்கள். பெயரை சொல்ல விரும்பாவிடின் பெயரில்லாமல் சொல்லுங்கள். ஆனால் இழிசொற் பிரயோகம் வேண்டாம். ஏற்கனவே இருமுறை நண்பரொருவர் இழிசொற்களை பயன்படுத்தியிருக்கிறீர்கள் முன்னைய ஆக்கங்களில்.