க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

உண்மையாகவே இருக்கிறம் ஏற்பாடு செய்த அச்சுவலைச் சந்திப்புப் பற்றி பெரிதாகக் குறைசொல்லி எந்தப் பதிவும் இடக்கூடாது என்று தான் இருந்தேன்.
ஏனென்றால் பொதுவாகவே நான் சக்தி தொலைக்காட்சியை எதிர்த்துப் பதிவிட்டு, பின்னூட்டமிடுவதோடு, அம்மா பகவான் பற்றியும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தேன். இதனால் சில மஞ்சட் காமாலைக் கண்களுடையவர்கள் நான் குற்றம் சொல்லிப் பிரபலமடைய முற்படுவதாக நினைத்தார்கள்.
இதனால் சில விடயங்களை கொஞ்சம் அடக்கிவாசிக்கலாம் என்று நினைத்திருந்தேன்.
மற்றவர்கள் என்ன நினைத்தாலும் எனது மனச்சாட்சிக்குச் சரியென்று படுகின்ற எல்லாவற்றையும் சொல்கின்ற, செய்கின்ற கோபி எங்கே போனான் என்று என்னை யோசிக்க வைத்த சம்பவங்கள் அவை.
(நான் அம்மா பகவான் பற்றிப் பதிவிட்ட அன்று எனது கைத்தொலைபேசிக்கு ஒரு மனநோயாளி அழைப்பெடுத்த அவருக்கு அவரது தாய் தந்தையர்கள் அல்லது நண்பர்கள் சொல்லிக்கொடுத்த இனிய வார்த்தைகளை சம்பந்தமில்லாமல் கதைத்ததை அப்போது சும்மா விட்டுவிட்டேன். பின்னர் தான் யோசித்தேன் சிலவேளை அது அந்தப்பதிவை வாசித்த ஓர் பக்தரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று.)


என்னை இந்தப் பதிவை பதிவிட வைத்தது ஓர் பின்னூட்டம் தான்.
எனது கடந்த பதிவிற்கு kajee என்ற பெயரில் இடப்பட்டிருந்த அந்தப் பின்னூட்டத்தில்
'எல்லாரும் தண்ணியில தத்தளிச்சீங்களாமே?' என்று கேட்கப்பட்டிருந்தது.

அதைப் பதிவிட்ட நண்பர் சந்திப்பிற்கு வரவில்லை என்பது வெளிப்படை. இது ஒரு விஷமத்தனமான பின்னூட்டம் என்பதிலும் எனக்கு எந்த கருத்து வேறுபாடு கிடையாது.
ஆனால் 'எல்லாரும்' என்பதன் மூலம் சும்மா வாய் பார்த்துக் கொண்டிருந்த என்னைப் போன்ற ஏராளமான பதிவர்களுக்குமல்லவா கெட்ட பெயர்?
எனக்கு யார் மது அருந்தியது அல்லது மது அருந்தவில்லை என்பது பிரச்சினை கிடையாது. யாருடைய தனிப்பட்ட உரிமையிலும் மூக்கை நுழைக்கவிரும்பவில்லை.
மது அருந்துவதற்கு 21 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் சட்ட ரீதியாக முடியும்.
(இங்கும் நான் தட்டுப்படுகிறேன். எனக்கு இன்னும் 20 ஆகவில்லை)

ஆனால் எனது கேள்வி என்னவென்றால் என்னைப் போன்ற சிறியவர்கள் அன்று வந்து மது அருந்தி வீட்டிலோ அல்லது எங்கோ பிரச்சினை ஏற்பட்டிருந்தால் ஒட்டுமொத்தப் பதிவர்களுக்கும், சந்திப்புக்குமல்லவா கெட்டபெயர் ஏற்பட்டிருக்கும்.
(இப்போது மட்டும் சந்திப்புக்கு நல்ல பெயர் இருப்பதாக சொல்லவரவில்லை)
நான் கோக் ஒன்றை எடுக்கச் சென்ற பொழுது 'என்ன வேணும்?' என்று கேட்கப் பட்டது.
'நான் கோக் வேண்டும்' என்றேன்.
அப்போது அதில் நின்றவர் 'கோக் தான் வேணுமா?'என்றார்.
நானும் 'ஓம்' என்றேன். அவர் மீண்டும் 'கோக் ஆ?' என்று நான் ஏதோ விஷத்தைக் கேட்பது போலக் கேட்டார்.
இதை எனது மொழியில் 'மதுப்பழக்கத் திணிப்புகள்... கெளரவமான வடிவில்...' என்று சொல்லலாமா???


மது அருந்துதல் என்பது வெளிநாட்டு சந்திப்புகளில் சாதாரணம் என்ற நவீனக் கருத்தை பலர் சொல்லாம்.
உண்மை தான். ஆனால் அது மேற்கைத்தேய நாடுகளில்.
இங்கு மதுபான ஏற்பாட்டுக்களைச் செய்திருந்தால் அதை சந்திப்பு முடியும் தறுவாயில் ஆரம்பித்திருந்தால் சந்திப்பும் ஒழுங்காக இருந்திருக்குமல்லவா?
மு.மயூரன் அண்ணாவின் பதிவில் சொன்னது போல 'இளையதம்பி தயானந்தா அவர்கள் இணையம் மூலம் உரையாற்றும் போது உங்களோடு முடிவில் மீண்டும் கதைக்கிறேன். ஆனால் அப்போது நீங்கள் அதைக் கேட்கும் தறுவாயில் கேட்கும் நிலையில் இருப்பீர்களோ தெரியாது என்று சொன்னது தசாவதாரம் படத்தில் பூவராகவன் கமலிடம் சந்தானம் அவரது ஆட்கள் குடிபோதையில் மிதப்பதை சுட்டிக் காட்டியது' போல இருந்தது.


எங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் 'வலைப்பதிவர்களுக்கும் அச்சு இலத்திரனியல் ஊடகவியலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு' என்றே சொல்லப்பட்டதே தவிர 'இருக்கிறம் சஞ்சிகையின் ஒன்றுகூடல்' அல்லது 'இருக்கிறம் சஞ்சிகையின் கொள்கைவிளக்கச் சந்திப்பு' என்றோ குறிப்பிடப்படவில்லை.
வலைப்பதிவர்களிடமும் ஊடகவியலாளர்களிடமும் சந்திப்பை ஏற்படுத்துவதை செய்ய முற்பட்டீர்கள் என்றால் அதற்காக என்ன செய்தீர்கள், ஆரம்பத்தில் எங்களை சுருக்கமாக அறிமுகப்படுத்தச் சொன்னதைத் தவிர?
நிறையப் பதிவர்கள் தூர இடங்களிலிருந்து இந்தச் சந்திப்புக்காக வந்திருந்தார்கள். பணம் என்பது ஒருபுறமிருக்க அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு என்ன பதில்?
தூர இடங்களிலிருந்த வந்த பதிவர்கள் சிலரின் மன ஓட்டத்தை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
(பதிவர்கள் யாருக்காவது இந்தச் சந்திப்பு திருப்தியளித்தது என்றால் என்னிடம் காரணத்துடன் சொல்லுங்கள். காரணம் எற்புடையது என்றால் இந்தப் பதிவிற்காக நான் பகிரங்கமாக பதிவில் மன்னிப்புக் கோருகிறேன்.)

சிலர் புதிய காரணமொன்றுடன் வரலாம்.
இருக்கிறம் சஞ்சிகை யாரையும் வற்புறுத்தி அழைக்கவி்ல்லை, விரும்பியவர்களையே அழைத்தது என்று.
இதற்குப் பெயர் தான் சப்பைக் கட்டு கட்டுதல் என்பது.
'இலங்கைப் பதிவர்களையும் ஊடகவியலாளர்களையும் இணைக்கும் இனிய சந்திப்பு' என்றால் அந்தப் பதத்தின் மூலம் இலங்கையிலிருந்து பதிவிடும் ஒவ்வொருவரும் இந்தச் சந்திப்பின் காரணிகளாகிவிடுகின்றனர்.
பதிவர்கள் இந்தச் சந்திப்பைப் பகிஷ்கரித்திருந்தாலோ, அல்லது ஓரிருவர் மட்டும் கலந்து கொண்டிருந்தாலோ சந்திப்பு உண்மையில் தோல்வியடைய வேண்டும்.

பதிவர்களையும் ஊடகவியலாளர்களையும் இணைக்கும் சந்திப்பு என்றால் பதிவர்கள் சார்பாக யார் உரையாற்றினார்கள்?
லோஷன் அண்ணா ஊடகவியலாளர்.
மருதமூரான் அண்ணா யாழ்தேவி திரட்டியின் சார்பில்.
எங்கே பதிவர்கள் சார்பாக???
பதிவர்களைப் பற்றி யார் கணக்கெடுத்தது?
ஏதோ பாடசாலையில் வைத்து படிப்பிப்பது போல எம்மை நிற்கவைத்துவிட்டு (இருக்கிறம் சஞ்சிகையில் நின்றோம்... ஹா ஹா ஹா... மிக்க நன்றி) முன்னால் ஏதோ கதைத்துக் கொண்டிருந்தால் நாம் என்ன செய்வது?

இங்கே சிலர் பதிவர்கள் என்றால் என்ன பெரியவர்களா?
இலவசமாக புளொகர் அல்லது வேர்ட்பிரஸில் அல்லது வேற ஒரு தளத்தில் கணக்கைத் தொடங்கிவிட்டு ஓர் யுனிக்கோட் தமிழ் எழுதுவானும், ஒரு கணணியும், ஓர் இணைய இணைப்பும் இருந்தால் யாருமே பதிவிடலாமே.
பிறகென்ன நீங்கள் நின்றால் ஏதோ ஜனாதிபதி நின்றதைப் போல குறை சொல்கிறீர்கள் என கேள்வி எழுப்பலாம்.
நிச்சயமாக... நாம் சாதாரமானவர்கள் தான்...
எம்மிடம் இருப்பது சிறிய நகைச்சுவை உணர்வும், சிறிய தேடலும் தான்...
நாங்கள் டம்மிகள் தான்...
ஆனால் டம்மிகளை சந்திக்கவும், அவர்கள் மூலமாக ஒரு சஞ்சிகையை பிரபலப்படுத்த நடவடிக்கை எடுத்தீர்கள் என்றால் அந்த சஞ்சிகையை என்னவென்று சொல்வது?
(சஞ்சிகையின் பிரபலத்திற்கு(ம்) இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை திரு.இளையதம்பி தயானந்தா ஏற்றுக் கொண்டதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்)

பதிவர்கள் மீதும் குற்றச் சாட்டுக்கள் எழுப்பப்படலாம்.
இரண்டாம் கொட்டகையிலிருந்து அதற்குப் பின் யாருமே நிகழ்ச்சியைக் கவனிக்கவில்லை என்று.
உண்மை... இரண்டாம் கொட்டகையிலிருந்தவன் என்ற வகையில் அதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.
எங்களுக்கு எதுவுமே கேட்கவில்லை.
லோஷன் அண்ணா உரையாற்றத் தொடங்கியபோது எங்களுக்கு 'கிர் கிர் கிர்' என்று ஏதோ ஒரு சத்தம் தான் கேட்டது.
மருதமூரான் அண்ணா உரையாற்றியபோதும் அதே பிரச்சினை.
மற்றவர்களின் பேச்சுக்களை நாங்கள் கேட்க விரும்பவில்லை என்று நீங்கள் தப்பாக நினைத்துக் கொண்டாலும் மேலே குறிப்பிட்ட இருவரும் பதிவர்கள். அவர்கள் எங்களில் ஒருவர். அவர்கள் பேசும் போது அதைக் கேட்காமல் விடுத்து அவர்களை அவமானப்படுத்த எமக்கு என்ன அவசியம்?

மழையை நோக்கி விரலை நீட்டுவதை என்னால் ஏற்கமுடியவில்லை.
கொழும்பின் பொதுவான வானிலை சுட்டெரிக்கும் வெயில் தானே?
அன்று வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தால் பதிவர்கள் யாவரும் அந்த வெயிலில் காய வேண்டுமா?
மழை மட்டும் தான் அசெளகரியமா?

பலர் நேரடி ஒளிபரப்பில் குறை இருப்பதாக குறை சொல்லியிருந்தார்கள்.
ஐயா! நாங்கள் நேரே சென்றே எங்களால் ஒன்றையும் காணமுடியவில்லை. நீங்கள் நேரடி ஒளிபரப்பைப் பற்றிக் கதைக்கிறீர்கள்.
நேரடி ஒளிபரப்பை செய்த அதே கெளபோய்மது தான் பதிவர் சந்திப்பையும் நேரடி ஒளிபரப்புச் செய்தார்.
அங்கே போதுமான Extension code கள் கூட இல்லை என்று சொன்னதாக ஓர் நினைவு.
அவர் என்ன செய்யமுடியும்?
அது அவரது தனிப்பட்ட முயற்சி.
அவரது முயற்சிக்கு நான் தலைவணங்குகிறேன்.

நான் பலரிடம் தெரிவித்ததை திரும்பவும் சொல்கிறேன்...
அச்சு-வலை சந்திப்பு என்பதில் வலை என்பது குறிக்கும் வலைப்பதிவர்கள் சந்திப்பில் தனியே ஒரு மூலையில் நின்ற உணர்வு.
திருமண வீட்டிற்கு வருமாறு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வந்தவர்களை நிற்கவைத்து கடைசிப்பந்தியில் கருகிப்போன அடிப்பானைச் சோறு போட்ட உணர்வு...

நான் உறுதியாகத் தெரிவிக்கிறேன்... நான் அன்றைய சந்திப்பை பதிவர் சந்திப்பு என்று நினைத்து வந்து ஏமாறவில்லை.
வலைப்பதிவர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டுதான் சென்றேன்.

எங்கள் பதிவர்களின் இரண்டாம் சந்திப்பு இடம்பெறும் பாருங்கள்...
அப்போது நிகழ்ச்சிகளை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்றும், அழைப்பாளிகளை எவ்வாறு மதிப்பது என்றும் சொல்லித் தருகிறோம்.

*************************************************************************************************
எனக்கு இருக்கிறம் மீது எந்தத் தனிப்பட்ட கோபமும் கிடையாது.
நான் இனி இருக்கிறமை முன்பைவிட அதிகமாக வாங்கத் தான் போகிறேன், ஏனென்றால் எங்கள் பதிவர்களின் ஆக்கங்கள் எழுத்தில் வருவதை படிப்பதற்கு எனக்கு பெருமை, விருப்பம் தான்.
நான் எந்தத் தனிப்பட்ட நபர்களையும் தாக்கவில்லை. அந்த அவசியமும் கிடையாது.
எனது சில கருத்துக்கள் சில நண்பர்களின் பதிவுகளின் சொல்லப்பட்ட கருத்துக்களாக இருக்கலாம். எனினும் எந்தக் கருத்தையும் களவாடும் நோக்கம் எனக்கில்லை. சில கருத்துக்கள் பொதுவாக இருப்பது பிழையில்லையே. சில கருத்துக்கள் என்னைப் பாதித்திருக்கலாம்...

*************************************************************************************************

அன்றைய சந்திப்பிற்கு வந்த நண்பர்கள் தயவுசெய்து எனது மின்னஞ்சல் முகவரியான kanagagopi@gmail.com என்பதற்கு ஓர் மின்னஞ்சல் அனுப்புங்கள்.
என்னிடம் கொஞ்சப் புகைப்படங்கள் உள்ளன. அவற்றை மின்னஞ்சல் முகவரி தெரிந்த அனைவருக்கும் அனுப்பிவிட்டேன்.
அவற்றை வலைப்பதிவில் வெளியிட விரும்பாததால் தனித்தனியே அனுப்புகிறேன்.
வேண்டுமானால் தொடர்புகொள்ளுங்கள்.

இலங்கையிலிருந்து வெளியாகும் பொழுதுபோக்குச் சஞ்சிகையான 'இருக்கிறம்' ஏற்பாடு செய்த அச்சுலைச் சந்திப்பு நேற்று (02.11.2009)மாலை இடம்பெற்றது.
'அச்சு' ஊடகத்தினருக்கும் 'வலை'ப் பதிவர்களுக்குமிடையில் இணைப்பொன்றை ஏற்படுத்த இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மழை வந்து குழப்பிவிட ஏற்பாடுகள் ஒருகணம் ஆடிப்போயின.
எனினும் ஓரளவுக்கு சுதாகரித்துக் கொண்ட ஏற்பாட்டுக் குழுவினர் மாற்று ஏற்பாடுகளைச் செய்து நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு ஆவன செய்தனர்.

சரி... இனி எனது தமிழில்....

நான் அச்சவலைச் சந்திப்புக்குப் போனதே பெரிய பமபல்.
எனக்கு இருக்கிறம் அலுவலகம் எங்க இருக்கு எண்டு தெரியாது. சரி எண்டு வந்தியண்ணாற்ற கேட்டன். அவரும் ஆதிரை அண்ணாற்ற கேள் எண்டார்.
ஆதிரை அண்ணா தான் அலுவலகம் செல்ல வேண்டி இருப்பதால் சரியான நேரத்துக்கு வரமுடியாது என்பதால் பதிவர் பால்குடி அண்ணாவ தொடர்பு கொள்ளுமாறு அவரின் தொடர்பு கொள்ளுமாறு கூறி அவரின் அலைபேசி இலக்கத்தைத் தந்தார்.
எனக்குப் பெரிய குழப்பம், அவரை பால்குடி என்று கூப்பிடுறதா அல்லது அவரின்ர உண்மையான பெயரில கூப்பிடோணுமா எண்டு.
சரி எண்டு முடிவே எடுக்காம அவருக்கு அழைப்பு ஏற்படுத்தி,
'ஹலோ... நான் கோபி கதைக்கிறன். கனககோபி எண்ட பெயரில பதிவிடுறனான். நீங்க பால்குடியா?' எண்டு கேட்டன்...
அவர் பயங்கரமா சிரிக்கத் தொடங்கிற்றார். எனக்கும் அப்ப தான் விசயம் விளங்கி நானும் பயங்கரமா சிரிச்சு ஒரு மாதிரி கதைச்சு முடிஞ்சிற்று.


சரி எண்டு அவரோட சேர்ந்து இருக்கிறம் அலுவலகத்திற்கு போனா அங்க தெரிஞ்ச ஒரு முகத்தையும் காணேல.
(பிறகு தான் விளங்கிச்சு, எனக்கு நிறைய முகங்களைத் தெரியாது எண்டு. படுபாவிகள்... 10, 15 வருசத்துக்கு முதல் எடுத்த புகைப்படங்கள வலைப்பதிவில் தங்கட புகைப்படமா போட்டிருக்கிறாங்க.)
பிறகு ஒருவாறு இறக்குவானை நிர்ஷன் மற்றும் யோ வொய்ஸிடம் அறிமுகமானேன். மன்னார் அமுதனை நேரடியாக அடையாளம் கண்டுகொண்டேன்.
பிறகு கொஞ்சம் (கொஞ்சமா.... 3 மணிக்கு சந்திப்பு எண்டா 3.45 வாறது கொஞ்சம் பிந்தியா?) பிந்தி வந்தியண்ணா வந்தார்.
அவருக்குப் போய் கை குடுத்து எங்கட சங்க (பச்சிளம் பாலகர் சங்கம்) முன்னேற்றம் பற்றி கதைச்சிற்று இருக்க சுபாங்கன் வந்தார்.
(வந்தியண்ணாவின் பச்சிளம் பாலகர் சங்க உறுப்பினர் பதவி ஆபத்தில் இருப்பது வேறுகதை)
பிறகு லோஷன் அண்ணா வந்தார். பிறகு மருதமூரான் அண்ணா வந்தார்.
அப்பாடா எண்டு சுபாங்கனும் நானும் கூட்டணி அமைச்சுக் கொண்டம்.

பிறகு புற்தரைக்குப் போய் நாங்கள் அச்சுவலைச் சந்திப்பை பதிவர் சந்திப்பாக மாற்றி 5,6 பதிவர்கள் ஒன்றாக கூடி கதைத்துக் கொண்டிருந்தோம்.
பதிவர்களில் இறக்குவானை நிர்ஷன் மட்டும் முன்னனுக்குப் போயிருந்து அழகாக குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்.
அவர் மூலமாகத் தான் அங்கே என்ன நடந்தது என்பதை அறியப் போகிறோம் என்பது வேறு கதை.
(லோஷன் அண்ணாவும் அமைதியாக இருந்து பார்த்துக் கொண்டிருந்தாலும் அவர் ஊடகவியலாளரும் என்பதால் அவர் தனிப்பிரிவு.)

நிறைய இலத்திரனியல் ஊடகங்களைச் சேர்ந்தவர்களும், அச்சு ஊடகங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
குறிப்பிட்ட ஒரு ஊடகத்திலிருந்து நமது மூத்த, பிரபல பதிவர் ஒருவரது இளவரசி ஒருவர் வரவில்லை என அவர் கவலைப்படுவதை பதிவிடுமாறு இன்னுமொரு பிரபல, மூத்த பதிவர் என்னைக் கேட்டுக் கொண்டாலும் மூத்த,பிரபல பதிவர் பாவம் என்பதால் அதைப் பற்றிப் பதிவிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ;)

(நன்றாகக் கவனிக்க...
ஒருவர் மூத்த, பிரபல பதிவர்... மற்றையவர் பிரபல, மூத்த பதிவர்... ஹி ஹி ஹி...)

சந்திப்பில் இருக்கிறம் சஞ்சிகையின் உள்ளடக்கங்களைப் பற்றி சில விவாதங்கள் இடம்பெற்றாலும் இருக்கிறம் சஞ்சிகையைப் பற்றிக் கதைக்கின்ற உரிமை, தகுதி எனக்கில்லாததால் அதைப்பற்றிக் கதைக்கவிரும்பவில்லை.
இருக்கிறம் சஞ்சிகையின் பிரதிகளில் இதுவரை 5 அல்லது 6 சஞ்சிகைகளைத் தான் வாங்கியிருக்கிறேன்.
ஒரு சஞ்சிகையை வாங்கிப்படிக்காமல் அதைப்பற்றி விமர்சிக்க எனக்கு எந்தத் தகுதியும் கிடையாது.
(இருக்கிறம் சஞ்சிகையை வாங்காததற்கு காரணம் அவர்களது உள்ளடக்கங்கள் சரியில்லை என்பதால் அல்ல. பொதுவாகவே பொழுதுபோக்குச் சஞ்சிகைகளை நான் வாங்குவதில்லை. இந்தியச் சஞ்சிகைகளை வாங்கியதே கிடையாது.)

வேறென்ன...
பதிவர்களின் அலைபேசி இலக்கங்களைப் பரிமாறிக் கொண்டதால் இனி அவ்வப்போது 'superb post' என்று குறுஞ்செய்திகள் செல்வதற்கு இடமுண்டு.

**********************************************************************************************

நேற்றைய சந்திப்பிற்குப் பிறகு இனி பதிவர்கள் எல்லோரையுடைய பெயர்களுக்குப் பின்னாலும் 'அண்ணா' சேர்க்கப்படும்.
இறக்குவானை நிர்ஷன் அண்ணா, யோ வொய்ஸ் அண்ணா, சந்ரு அண்ணா...
சுபாங்கன் தான் நடுவில் நிற்கிறார். 2 வயது மூத்தவர் என்பதால் அண்ணா என்றழைப்பதா இல்லையா என்று மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததும் முடிவு எடுக்கப்படும்.
(மற்றவர்களை ஏற்கனவே அண்ணா என்றழைப்பது தான் வழக்கம் என்பதால் பிரச்சினையில்லை)

**********************************************************************************************

சரி...
இனி ஓரிரண்டு படங்கள்....
































காதலி: நாங்க கலியாணம் முடிச்சதும், உன்ர எல்லாத் துக்கங்களிலயும், கஷ்ரங்களிலயும் உனக்கு ஆறுதலா இருக்க விரும்புறன். உன்ர கண்ணீர எப்பயும் துடைக்க விரும்புறன்.
காதலன்: உன்ர அன்புக்கு நன்றி. ஆனா எனக்குத் தான் இப்ப எந்தக் கஷ்ரமோ துன்பமோ இல்லையே?
காதலி: அது ஏனென்டா நாங்க இன்னும் கலியாணம் கட்டேலயே...


வழிகாட்டி: வாங்கோ... இது தான் நயகரா நீர்வீழ்ச்சி.(கவனமாக வாசிக்கவும். நயன்தாரா அல்ல... நயகரா...) உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி...
இந்த வீழ்ச்சிகளின்ர சத்தம் மிகப்பெரியது. 20 சுப்பர்சொனிக் விமானங்கள் இந்த நீர்வீழ்ச்சிக்கு மேலால பறந்தாலும் அந்த விமானங்களின்ர சத்தம் கீழ நிக்கிற எங்களுக்கு கேக்காது. அந்தளவுக்கு இரைச்சல் வாய்ந்தது.
அதுசரி, இந்தக் குழுவில இருக்கிற பெண்கள் கொஞ்சம் கதைக்காம விடுறீங்களா? அப்பத் தான் நீர்வீழ்ச்சியின்ர சத்தத்த நாங்க கேக்க முடியும்.


நம்ம சுப்பிரமணியம் அண்ண புதுசா மாருதி கார் வாங்கினார்.
கார் வாங்கிற்று சொந்த ஊருக்குக் கிளம்பினார்.
கொழும்பில இருந்து சிலமணி நேரங்களிலயே வவுனியாவுக்குப் போய்ச் சேர்ந்திட்டார்.
அங்க போய் ரெண்டு, மூண்டு நாள் இருந்திற்று ஒருநாள் விடிய கொழும்பில இருக்கிற மனிசிக்கு அழைப்பு எடுத்தார்.
'இஞ்ச, நான் இப்ப வெளிக்கிடுறன். அங்க 5,6 மணித்தியாலத்தில வந்திடவன்' எண்டார்.
மனுசியும் பாத்து பாத்து களைச்சுப் போச்சுது.
அழைப்பு எடுத்து இரண்டாவு நாள் களைச்ச சுப்பிரமணியத்தார் வந்து சேர்ந்தார்.
'என்னப்பா நடந்தது? ஏன் பிந்தினது?' எண்டு மனுசி கேட்டிச்சு.
'இவங்கள் கார் செய்யிறவங்களுக்கு விசர். மூளை இல்ல. முன்பக்கம் போறதுக்கு 4 gear வச்சிருக்கிறாங்கள். ஆனா பின்பக்கம் வாறதுக்கு ஒரே ஒரு கியர் தான். முட்டாளுகள்...' எண்டார் சுப்பிரமணியத்தார்.


ஆசிரியை: எருதும், பசுவும் புல் 'மேய்ந்தது' என்ற வாக்கியத்தை சரியாக சொல்...
மாணவன்: பசுவும், எருதும் புல் மேய்ந்தது
ஆசிரியை: ஏன் அப்பிடி?
மாணவன்: பெண்களுக்கு முதலிடம் ரீச்சர்.


திருமணத்தின் முன்னர் ஓர் ஆண் ஓர் பெண்ணின் கையை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தால் அது அவள் மீது அவன் காட்டும் அன்பு.
திருமணத்தின் பின்னர் அவளின் கையை இறுகப் பற்றிப் பிடித்தால் அது தற்பாதுகாப்பு.


ஓர் கணவனின் ஆதங்கம்.
என்னால் கடவுளைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
பெண்கள் என்னும் அழகைப் படைக்கும் கடவுள், பின்னர் ஏன் அவர்களை மனைவிகளாக மாற்றிவிடுகிறான்?


தன்பக்கம் உண்மையிருக்கும் போது அதை ஏற்று சரணடைபவன், நேர்மையாளன்.
தன்கருத்து பற்றி முடிவாகத் தெரியாத போது சரணடைபவன், பரந்த மனம் கொண்டவன்.
தன்பக்கம் உண்மை இருந்த பொழுதிலும் சரணடைந்து மன்னிப்புக் கேட்பவன், கணவன்.

(தலைப்பு விளக்கம்....
இதை வாசித்துவிட்டு 'இவன் திருந்த மாட்டனா... எப்ப பாத்தாலும் பெண்களை குறை சொல்றதயே பிழைப்பா வச்சிருக்கிறான்' என்று நீங்கள் மனதில் நினைத்ததைத் தான் தலைப்பாக இட்டிருக்கிறேன்...
நான் பெண்களை நகைச்சுவைகளில் அதிகம் எடுக்கக் காரணம், அப்போது தான் பெரும்பான்மை ஆண் வாசகர்கள் சிரிப்பீர்கள்.
பெண்கள் புத்திசாலிகள் என்பதால் நகைச்சுவையாக எடுத்துக் கொள்வார்கள்...
இது எப்பிடி இருக்கு விளக்கம்....???)


*******************************************************************************************

இருக்கிறம் சஞ்சிகையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அச்சுவலைச் சந்திப்பு இன்று மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.
முதலாவது பதிவர் சந்திப்பை நினைத்து மகிழ்ச்சியாக இருந்ததைவிட இம்முறை கொஞ்சம் அதிகமாகவே மகிழ்ச்சியாக இருக்கிறேன். காரணம் முதலாவது பதிவர் சந்திப்பின் பின்னர் தான் நிறையப் பேரை அறிந்து கொண்டேன்.
முதலாம் சந்திப்பில் தெரியாத முகங்களை சந்திக்கச் சென்றேன், இம்முறை தெரிந்த முகங்களை அறியச் செல்கிறேன்.

ஆனால் ஒரு முக்கியமான வேண்டுகோள்...
இன்று நடக்கும் அச்சுவலைச் சந்திப்பில் எனக்கு (அதாவது கனககோபிக்கு) இரசிகர் மன்றம் வைக்கப் பேச்சுக்கள் நடப்பதாக புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அத்தையக முயற்சி எடுப்பவர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகொள், எச்சரிக்கை.
எனது பெயரில் எந்த முயற்சியை எடுத்தாலும் என்னிடம் தக்க அனுமதி பெற்று செய்யுமாறு வேண்டுகிறேன்.
அத்தோடு இரசிகர் மன்றம் என்பதில் எனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லாததால் அந்த முயற்சியைக் கைவிடுமாறும் அன்பாக வேண்டுகிறேன்.
என்னை கெளரவப்படுத்த நினைத்தால் ஏற்கனவே உள்ள அகில உலக கனககோபி இரசிகர் மன்றத்தில் சேர்ந்து அதற்குரிய சந்தாப்பணத்தை எனது தனிப்பட்ட வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன்...

(யாராவது இதை வாசிச்சிற்று கொலைவெறியோட என்னத் தேடினா, அவங்களுக்கு நான் சொல்றது ஒண்டே ஒண்டு தான்...
கொலை வழக்கில மாட்டிடுவீங்க... சொல்லிற்றன்....)

*************************************************************************************************************************************

இனி சீரியஸான விடயம்....
அச்சுவலைச் சந்திப்பிற்கு வெள்ளவத்தையிலிருந்து செல்லும் நண்பர்கள் யாராவது என்னையும் அழைத்துக் கொண்டு செல்ல முடியுமா?
நான் உங்களோடு எங்கே, எத்தனை மணிக்கு இணையலாம் என மின்னஞ்சல் செய்வீர்களா???