க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

நிறைய நாட்களாக இந்தவகைப் பதிவொன்னு (அதாவது சுயதம்பட்டப் பதிவு போடோணும் எண்டு ஆசை... ஆனா ஏனோ போட மறந்திற்று வந்தன்...
அண்டைக்கு திண்ணையில கதைச்சுக் கொண்டு இருக்கும்போது வந்தியண்ணா தான் கிறிக்கெற் அனுபவத்த பதிவிடப் போறன் எண்டு சொன்னதும் எனக்கு பழைய ஆசை வந்திற்றுது....

இது கிறிக்கெற்றில் எனது சுவாரசிய அனுபவங்கள். உங்களுக்கும் சுவாரசியமா இருக்கும் எண்டு நம்புறன்.


நான் கடினப்பந்து கிறிக்கெற்றுக்குள்ள போனதே ஒரு பெரிய சுவாரசியமான கதை.
நான் இப்ப இருக்கிற மாதிரியே (குண்டாவா எண்டு கேட்டா வேட்டைக்காரன் படம் போட்டுக் காட்டுவன் எண்டு சொல்ல மாட்டன்...) கிறிக்கெற் பைத்தியம்.
பள்ளிக்கூடத்தில அணிவீரர்களுக்கு பயிற்சி நடக்கேக்க மைதானத்துக்கு வெளியே நிண்டு அதையே பாத்துக்கொண்டு நிப்பன்.
நான் உப்பிடி நெடுகலும் நிக்கிறதப்பாத்த பயிற்சியாளர் சண்முகலிங்கன் சேர் (உண்மை அவர் அப்ப பயிற்சியாளர் இல்ல. ஆலோசகராத் தான் இருந்தார்) ஏன் நிக்கிறாய்? வந்து மைதானத்தில நில்லு எண்டு என்னை மைதானத்துக்குள்ள அழைச்சிற்றுப் போனார்.
(15 வயதுக்குட்பட்டோர் அணியின் பயிற்சி அது. எனக்கு அப்ப 12 வயது.)
(நான் பாடசாலை சீருடையில தான் நிண்டன்...)

போய் நான் முதலில நான் நிண்ட இடம் fine leg பகுதி தான். போய் நிண்ட 1,2 பந்திலயே ஒரு பந்து சீறிக் கொண்டு வந்திச்சு.. நானும் மென்பந்து பாய்ஞ்சு பிடிக்கிற நினைப்பு இருந்து அந்த வேகத்த மனசில வச்சு பாய்ஞ்சன்... அதுக்குள்ள பந்து ஓடீற்றுது. அப்ப தான் முதல் பாடம் படிச்சுக் கொண்டன் கடினப் பந்தைக் களத்தடுப்புச் செய்யிறதுக்கு ஒரு விசேட வேகம் வேணும் எண்டு.
அப்பிடியெ கொஞ்ச நேரம் களத்தடுப்புச் செய்திற்று இருக்க 'போல் போடத் தெரியுமோ?' எண்டு கேட்டார்...
நான் வழமையப் போல 'பெருசாத் தெரியாது' எண்டு சொன்னன்.
(அடக்கமெல்லாம் இல்ல... என்ர குணமே இது தான். தாழ்வு மனப்பான்மை என்று வைத்துக் கொள்ளலாம்.)
'அது பரவாயில்லை. வந்து போடு' என்றார்.


சரி நானும் தயங்கித் தயங்கி போனா அங்கால துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தவரப் பாத்ததும் நடுக்கம் கூடிற்று. அவர் தான் அணித்தலைவர். அற்புதமான துடுப்பாட்ட வீரர். அந்த மனுசன் மற்றைய அணிகளை மொங்கியெடுக்க நான் தூர இருந்து பாத்திருக்கிறன்.
சரியெண்டு போய் தயங்கித் தயங்கி என்ர ஓவ் ஸ்பின்னை போட்டேன்.
கடினப்பந்து பிடிக்கவே கஷ்ரமாயிருந்தது.
கஷ்ரப்பட்டு பந்துவீசினன். அவர் இடதுகைத் துடுப்பாட்ட வீரர். நான் over the wicket ஆல தான் போட்டன். பந்து கணக்கா ஓவ் ஸ்ரம்ப் பகுதியில் விழுந்து விலகிச் சென்றது. மனுசன் அத defend பண்ணப் பாத்து அது அவரின்ர துடுப்பு ஓரத்தில பட்டு விக்கெற் காப்பாளரிடம் போய் தஞ்சமடைந்தது.
அதற்காக சண்முகலிங்கன் சேர் முதுகில தட்டினது இன்னும் ஞாபகம் இருக்கு.
வந்த சின்னப் பெடியன் போட்ட முதல் பந்திலயே ஆட்டமிழக்கப் பண்ணிற்றான் எண்டு எல்லாரும் என்ன கெட்டிக்காரனாப் பாத்தாங்கள்.

அண்டைய நாள் முடியிற நேரம் சண்முகலிங்கன் சேர் தொடர்ந்து பயிற்சிக்கு வா எண்டு சொன்னார். நான் எதிர்பார்த்திரா விடயம் இது. நானும் சந்தொசமா பயிற்சிக்குப் போனன். அந்தக் காலத்தில மாவட்டமட்டப் போட்டிகள் எல்லாம் முடிஞ்ச படியா பயிற்சிகள் கொஞ்ச நாளில முடிஞ்சுது.

அடுத்த வருசம் எப்பிடியாவது பயிற்சிக்குப் போறது எண்டு முடிவெடுத்து வீட்ட படாதபாடுபட்டு அனுமதி வாங்கி 13 வயதுக்குட்பட்ட அணிப்பயிற்சிக்குப் போனன்.
அந்த வருசம் அணியில சுழற்பந்துவீசும் சகலதுறை வீரரா எடுபட்டு விளையாடும் பதினொருவரில் சேர்க்கப்பட்டேன்.

அந்த வருசப் பயிற்சியில ஒருநாள் முக்கியமான இடத்தில வைக்கிற 'guard' ஐ வீட்ட விட்டிற்றுப் போட்டன். அந்த நாள் பாத்து அந்த பயிற்சியாளர் எனக்கு வலைப்பயிற்சியல துடுப்பெடுத்தாட வாய்ப்பு வந்திற்றுது. அண்டைக்கு என்ர முறை இல்ல எண்டாலும் 2 பேர் பயிற்சிக்கு வராம விட வாய்ப்பு (ஆப்பு....) என்னத் தேடி வந்திற்றுது..
சரியெண்டு அண்டைக்கு 'சேதாரமில்லாம' துடுப்பெடுத்தாடி முடிச்சிற்றன்.

அதப்போல இன்னொருநாள் உண்மையான ஆடுகளத்தில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபொழுது எனக்கும் பந்துவீசிக்கொண்டிருந்த ஒருத்தனுக்கும் போட்டி வந்திற்றுது.
நான் வீணா வாயக் குடுத்திற்றன். அவன் வேகப்பந்துவீச்சாளர்.
அவன் வேணுமெண்டு என்ர உடம்ப நோக்கி பவுண்சர்கள வீசத் தொடங்கினான்.
நானும் எவ்வளவு முடியுமோ அவ்வளவ அடிச்சன் அல்லது அடிக்க முயற்சிச்சன்.
ஒரு பந்து போட்டான் பாருங்கோ.... யப்பா... வந்து வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் இடையில வந்து 'டொங்' எண்டு அடிச்சிச்சு. என்ன வேதனையப்பா...
ஆனா பவுன்சர் பந்துக்கு ஆறு ஓட்டம் அடிச்சுக் காட்டுறன் எண்டுற சவாலுக்காக 5,6 தரம் குனிஞ்சு எழும்பிற்று திரும்பவும் துடுப்பெடுத்தாடினா அடுத்த பந்து நெஞ்சில.
அவ்வளவு தான்... வலியெண்டா வலி தான்...
பயிற்சியாளர் அடிச்சுக் கலைச்சுவிட்டார் போய் ஓய்வெடு எண்டு...

அதுக்குப் பிறகு ஒருநாள் பரியோவான் கல்லூரியோட நடந்த போட்டியொண்டுக்கு முதல்முதலா என்ர குடும்பத்தில இருந்து அண்ணா போட்டியப் பாக்க வந்தார். அவர் வந்த உடனயே நான் துடுப்பெடுத்தாட வேண்டி வந்திற்றுது.
போன முதல் பந்து ஒருபடுபாவி ஓவ் ஸ்பின் போட்டான். நானும் அழகா defend பண்ணுவம் எண்டு பண்ணினா அது துடுப்புக்கும் காலுக்குமிடையால போய் முதல் பந்திலயே போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்திற்றன். பெருத்த அவமானம்....

நிறைய அலட்டப்படாது கண்டியளோ....
இது கடைசி விசயம்.
ஒரு கல்லூரிக்கும் (பெயர் வேணாம்.) எங்கட கல்லூரிக்குமிடையிலான போட்டி நடந்துகொண்டிருந்தது.
நான் எனக்குப் பிடித்த சிலி மிட் ஓவ் இல் (துடுப்பாட்ட வீரருக்கு அருகில் தலைக்கவசத்தோடு நிற்கும் இடம்) நின்று கொண்டிருந்தேன்.
நாங்கள் இனிங்ஸ் வெற்றி ஒன்றிற்காக முயற்சித்துக் கொண்டிருந்தோம்.
4 விக்கெட்டுக்கள் எடுக்க வேண்டி இருந்தது. போட்டி நிறைவடைய கொஞ்ச நேரம் தான் இருந்தது.
ஒரு வேகப்பந்து வீச்சாளர் வீசிக் கொண்டிருந்தார்.
அது ஒரு பவுண்சர். துடுப்பாட்ட வீரர் திமிறி பந்தை விட்டு விலக முயற்சித்த வேளையில் பந்து துடுப்பு ஓரத்தில் பட்டு மேலெழுந்தது. எனக்கு சாதாரணமாக எட்டவில்லை. இனிங்ஸ் வெற்றி வேண்டும் என்ற வெறியில் பாய்ந்தேன் ஒரு பாய்ச்சல்... பந்து என்கையில். அப்படியே கீழே விழும்போது முழங்கை நிலத்தோடு அடித்து பந்து கையை விட்டு நழுவ முற்பட நான் அமுக்கிக் கொண்டேன். எனினும் அந்தக் கணத்தில் பந்து நிலத்தில் பட்டுவிட்டது.
நான் பாய்ந்த தருணத்தில் எனக்கு எதுவுமே நினைவில்லை. எனக்கு பாய்ந்ததும், விழும்போது ஏற்பட்ட வலியும் தான் மனதில் தெரிந்தன.
ஆட்டமிழப்பைக் கோரினேன். நடுவர்கள் இருவரும் சிறிதுநேரக் கலந்துரையாடலின் பின்னர் ஆட்டமிழந்ததாக அறிவித்தனர். ஆனால் அவர்கள் அறிவிக்க எடுத்துக்கொண்ட நேரத்தில் எனக்கு முழுவதும் புரிந்து பந்து நிலத்தில் பட்டது நினைவுக்கு வந்தபோதிலும் நடுவர்கள் கடைசிநேரத்தில் சொல்கிறேன் என்று தப்பாக நினைப்பார்கள் என்று சொல்லவில்லை.
அந்த சம்பவம் என்னை இன்றுவரையும் அவ்வப்போது நினைத்துப் பார்க்கையில் மனதில் குற்ற உணர்வையும், மனதில் ஒரு வலியையும் ஏற்படுத்துவது எனக்கு வியப்பாக இல்லை.


இது எனக்குத் தெரிந்தவரை எனது அனுபவங்கள்.
இவ்வளவு நேரம் பொறுமையாக அறுவையைத் தாங்கியதற்கு நன்றி....

வீணாய்ப்போன கிறிக்கெற் வீரர்கள் பாகம் ஒன்றைப் படிக்க இங்கே அழுத்தவும்.
எனினும் முதலாம் பாகத்தைப் படித்துவிட்டுத் தான் இரண்டாம் பாகத்தைப் படிக்க வேண்டுமென்றில்லை. இரண்டாம் பாகத்தைப் படித்துவிட்டும் முதலாம் பாகத்தைப் படிக்கலாம்.
இல்லை முதலாம் பாகத்தை படிக்காமலேயே விடலாம்.
இல்லை, இரண்டு பாகங்களையுமே படிக்காமலும் விடலாம்.
(கொஞ்சம் அதிகமாவே அறுக்கிறனோ?)

6. சுப்ரமணியம் பத்ரினாத் -
தமிழக அணியின் தலைவராக இருந்து தொடர்ச்சியாக ஓட்டங்களைக் குவித்து வந்தவர்.
26 அல்லது 27 வயதில் தான் சர்வதேசப் போட்டிகளில் ஆடும் வாய்ப்புக் கிடைத்தது.
போதியளவு ஆடாததால் அணியில் தொடர்ந்து நீடிக்கமுடியவில்லை.
எனினும் இலங்கை அணிக்கெதிரான போட்டியொன்றில் இலங்கையில் வைத்து ஆரம்ப இலக்குகள் சற்று வேளைக்கே வீழ்த்தப்பட்ட பின்னர் அணித்தலைவர் டோனியுடன் சேர்ந்து ஆடிய விதம், குறிப்பாக முரளியை சமாளித்து ஆடியவிதம் இவருக்குள் திறமை இருக்கிறது என்பதைக் காட்டியது.
எனினும் சர்வதேச ரீதியில் இனித் தான் பெரியளவில் பிரகாசிக்க வேண்டியிருக்கிறது.
எனினும் இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையில் இவருக்கு இனி இடம்கிடைக்குமா என்பது சந்தேகமே...
2011 உலகக்கிண்ணத்தின் பின்னர் வாய்ப்புக்கிடைக்கலாம்.


7. மிஸ்பா உல்-ஹக் -
அடுத்த இருபதுக்கு இருபது விசேடித்த வீரர். (Twenty 20 specialist)
முதலாவது இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத்தில் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறவும், தோற்கும் நிலையிலிருந்த இறுதிப் போட்டியில் வெல்லும் வாய்ப்புகள் கூட ஏற்பட்டதற்கும் (இறுதியில் தோற்றாலும்) காரணகர்த்தாக்களில் ஒருவர்.
ஏராளமான காலம் உள்ளூர்ப் போட்டிகளில் குப்பை கொட்டிக் கொண்டிருந்த இவர் முதலாவது இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத்திற்கு பின்னர் பாகிஸ்தானின் நட்சத்திரமானார்.
பந்தை ஓங்கி அடிக்கும் வல்லமையுடைய (hard hitting batsman) இவர் சுழற்பந்துவீச்சையும் அழகாக விளையாடக் கூடியவர். (Spin expert)
இருபதுக்கு இருபது என்றால் தன் கையை உயர்த்தி அணிக்காக போட்டிகளை வெல்லும் இவர் ஒருநாள் போட்டிகளில் ஓரளவிற்கு ஆடினாலும். இவரது திறமைக்கு ஏற்றவாறு ஆடவில்லை. (He is not playing up to his standard). இன்னும் ஒருநாள் சதமொன்றைப் பெறாத இவர் தொடர்ந்து திறமையை வெளிக்காட்டுவதில்லை. (inconsistent)
ரெஸ்ற் போட்டிகளில் அதைவிட மோசம்.
ரெஸ்ற் போட்டிகளில் பந்துகளை தொடர்ந்தும் மறித்துக் கொண்டு (defence) ஓட்டங்களை அடிக்க முற்படாதது தான் இவரது பிரச்சினை.
ரெஸ்ற் போட்டிகளில் ஆரம்ப 50 பந்துகளில் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றால் அது இவருக்கு சாதனை.
இவ்வாறு தொடர்ந்து மறித்துக் கொண்டேயிருப்பதால் ஒட்டங்களை எடுக்கும் ஆர்வம் குறையும், அதனால் ஓட்டங்களை எடுக்காமல் விட அழுத்தம் அதிகமாக தேவையற்ற அடிகளை அடித்து ஆட்டமிழப்பது தான் இவர் வழமை.
இலங்கை அணியுடனான கடந்த தொடரில் குலசேகரவின் உள்வளையும் பந்துகள் (Inswingers and Indippers) இவருக்கு பெருஞ்சோதனையாக அமைந்தன.


8. உபுல் தரங்க -
இலங்கை அணிக்கு நல்ல ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ஒருவர் கிடைத்துவிட்டார் என எல்லோரும் மகிழ்ச்சியடைந்தது இவரால் தான்.
தொடர்நது சதங்கள், அரைச்சதங்களும் என்று ஆரம்பத்தில் அசத்திவந்தார்.
இலங்கை சார்பாக ஒருநாள் போட்டிகளில் விரைவாக 1000 ஓட்டங்களை (போட்டிகள் எண்ணிக்கையில்)பெற்ற சாதனைக்குச் சொந்தக்காரர்.
வேகப்பந்துவீச்சுக்களை நன்றாக ட்ரைவ் (என்ன தமிழ் போடுவது?) செய்யக் கூடிய இவரது ஸ்குயர் ட்ரைவ்கள் (Square drives) பார்ப்பதற்கு அழகு தான்...
அனைவரும் இவரை ஒரு முழுமையான துடுப்பாட்ட வீரர் (compact player) என நம்பியிருந்த காலகட்டத்தில் தான் பிரச்சினை ஆரம்பித்தது.
ஓவ் ஸ்ரம்ப் (Off stump) இற்கு சற்று வெளியே விலகிச்செல்லும் பந்துகளுக்கு துடுப்பை நீட்டி இலக்குக் காப்பாளரிடமோ அல்லது ஸ்லிப் வீரர்களிடமோ பிடியைக் கொடுப்பது தான் இவரது ஒரே பிரச்சினை, பெரிய பிரச்சினை.
(Off stump awareness என்று அழைப்பார்கள். இலங்கையின் மஹேல ஜெயவர்தனவிற்கும் இந்தப் பிரச்சினை இருக்கிறது.)
கிட்டத்தட்ட ஓவ் ஸ்ரம்ப் இலிருந்து விலகிச்செல்லும் பந்துகளை வீசினாலே இவரது இலக்கைக் கைப்பற்றிவிடலாம் என்ற அளவிற்கு நிலைமை மோசமாகியது.
எனவே அணயில் இடத்தை இழந்த இவர் அண்மைக்காலமாக உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாக ஆடிவந்ததால் பாகிஸ்தானிற்கெதிரான ஒருநாள் தொடரில் இடம்பெற்ற இவர் முதல் போட்டியில் சொதப்பினாலும் இரண்டாவது போட்டியில் அட்டகாசமாக ஆடினார். எனினும் மூன்றாவது போட்டியில் தனது வழமையான முறையில் ஆட்டமிழந்தார்.
எனினும் இந்தப் பிரச்சினையை சீர்செய்தால் இலங்கை அணி ஓர் சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரரொருவரைப் பெறலாம் என்பது மட்டும் உண்மை.


9. ஸ்ருவேட் மக்கில்
ஷேன் வோண் என்னும் மாபெரும் சுழற்பந்துவீச்சு ஜாம்பவானின் நிழலால் மறைக்கப்பட்ட நட்சத்திரம்.
கிறிக்கெற் உலகில் கடினமான வேலைகளில் ஒன்றாகக் கருதப்படும் மணிக்கட்டுச் சுழற் பந்துவீச்சாளரான இவர் ஷென் வோணை விட இம்மியளவு திறமை குறைவானவர் என்பதால் ஆடமுடியாமல் போனது.
ஒரே அணியில் இரண்டு ஒரே வகைச் சுழற்பந்துவீச்சாளர்களை கொண்டு விளையாடுவது அவ்வாறு சிறந்ததல்ல என்பதால் சர்வதேச மட்டத்தில் பெரிதாக ஆடக் கிடைக்கவில்லை.
விளையாடிய போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும் பின்னர் ஷேன் வோண் ஓய்வுபெற்ற பின்னர் வாய்ப்புக்கிடைக்கும் போது அதிக வயதாகிவிட்டதாலும், உடற்தகுதிநிலைமை காரணமாகவும் ஓய்வுபெறவேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டிருந்தார்.
ஒரு 5 ஆண்டுகள் பிந்திப் பிறந்திருந்தாரானால் இன்னொரு சழந்பந்துவீச்சு ஜாம்பவானை உலகம் கண்டிருக்கும்.



10. பிரட் ஹொக்-
Left arm unorthodox வகை எனப்படுகின்ற பந்துவீச்சாளர்கள் கிறிக்கெற் உலகில் மிகக்குறைவு.
Left arm unorthodox என்பது இடது கையால் இடதுகைத்துடுப்பாட்ட வீரருக்கு லெக் ஸ்பின் வீசுவது தான்.
ஆனால் லெக் ஸ்பின் வீசுவது கடினமான ஓர் விடயம் என்பதாலும், அவ்வாறு கஷ்ரப்பட்டு வீசும் பந்துகள் வலதுகைத் துடுப்பாட்ட வீரருக்கு (உலகில் வலதுகைத் துடுப்பாட்ட வீரர்கள் தான் அதிகம்) உள்திரும்பும் பந்துகளாக அமையும் என்பதால் இந்தப் பந்துவீச்சு முறையை பலரும் தெரிவுசெய்வதில்லை. மாறாக Left arm orthodox பந்துவீச்சாளர்களாக மாறிவிடுகிறார்கள். இவ்வாறு வீசும் போது பந்து வலதுகைத்துடுப்பாட்ட வீரரை விட்டு விலகிச்செல்வதால் இலக்குகளைக் கைப்பற்றும் வாய்ப்புகள் அதிகம்.
(பந்து உள்நோக்கி வரும் போது அதைக் கணித்து ஆடுவது ஓரளவுக்கு சுலபம். அதுவும் மணிக்கட்டுச் சுழல் பந்துகள் உள்நோக்கி வரும் போது ஆடுவது ஓரளவுக்கு சுலபம்.
ஆனால் பந்து துடுப்பாட்ட வீரரை விட்டு விலகிச்செல்லும் போது ஸ்லிப் இடம் பிடிகொடுக்கவோ, இலக்குக் காப்பாளரிடம் பிடிகொடுக்கவோ, அல்லது ஸ்ரம்ப் செய்யப்படவோ வாய்ப்புகள் அதிகம்.)
அப்படிப்பட்ட Left arm unorthodox வகைப்பந்துவீச்சாளரான இவர் திறமை வாய்ந்த பந்துவீச்சாளர்.
ஷேன் வோண் என்னும் மாபெரும் சுழற்பந்துவீச்சு ஜாம்பவானின் நிழலால் மறைக்கப்பட்ட இன்னாரு நட்சத்திரம்.
பெரிதாக சர்வதேச மட்டத்தில் ஆடமுடியாமல் போன இவர் சர்வதேச ஒருநாள்ப் போட்டிகளில் விளையாடிய போட்டிகளில் சிறப்பாக பந்துவீசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


11. மொகமட் அஷ்ரபுல்-
உருவத்தில் கட்டையான சின்னப்பையன் ஒருவன் பங்களாதேஷ் அணியில் விளையாடி எதிரணிகளை துவம்சம் செய்கிறான் என பலரும் கதைத்தார்கள்.
உருவத்தில் சச்சினைப் பொல சிறிது குள்ளமும், சில அடிகளை அடிக்கும் போது சச்சினின் சாயல் தெரிவதாலும், சிறிய வயதில் இவ்வாறு அழகாக ஆடுவதாலும் பங்களாதேஷ் அணிக்குக் கிடைத்த அரவிந்த டீ சில்வா என நினைத்துக் கொண்டேன்.
(உலகில் பிறந்த சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக பலரும் ஏற்குக் கொள்கிறார்கள். அதுபற்றி சொல்ல முற்பட்டால் தனியாக ஒருபதிவே இடவேண்டி வரும்.)
ஆரம்ப காலத்தில் அடித்த ஓட்டங்களும், அவற்றைப் பெற்ற விதமும் என்னை அஷ்ரபுல்லின் இரசிகனாகவே மாற்றிவிட்டிருந்தன.
ஆனால் வழமையைப் போல நான் விரும்பும் புதிய வீரர்கள் காலை வாருவது போல அஷ்ரபுல் உம் என் காலை வாரிவிட்டார்.
அணித்தலைமை கிடைத்த பின்னர் இவரது துடுப்பாட்டம் மோசமாக மழுங்கத் தொடங்கியது.
அத்தோடு மிகச்சிறிய வயதில் மைதானத்தில் பல சிரேஷ்ர வீரர்களோடு மோதுவதும் எனக்கு வெறுப்பைத் தந்தது.
இப்போதெல்லாம் அஷ்ரபுல் துடுப்பாட்டத்தில் ஓட்டங்கள் குவிப்பது நான் புத்தகம் எடுத்துப் படிப்பது போல அரிதாகிவிட்டது.
இப்போது துடுப்பாட்டத்தை விட பந்துவீச்சில் மனிதர் ஏதோ செய்கிறார்.
அற்புதமான ஆடும்நுட்பம் (technic என்பதை இவ்வாறு மாற்றுகிறேன். தமிழ் சரியாக உள்ளதா) கொண்ட ஒருவரான இவருக்கும் பிரச்சினை temperament தான்...
பொறுமை குறைந்தவரான இவர் இரண்டு, மூன்று பந்துகளில் தொடர்ந்து ஓட்டங்களைப் பெறமுடியாவிட்டால் அடுத்த பந்தில் முட்டாள்தனமாக அடித்தெரிவொன்றை (shot selection) மேற்கொண்டு ஆட்டமிழந்துவிடுவார்.
இப்போதெல்லாம் இவரது இரசிகர் என்ற அளவில் இல்லாவிட்டாலும் தனது திறமையை வீணாக்குகிறார் எனக் கவலைப்படுவதுண்டு.


12. மார்லன் சாமுவேல்ஸ்-
என்னை மிகவிரைவாக கவர்ந்த கிறிக்கெற் வீரர்களில் ஒருவர்.
மத்தியவரிசையில் அடித்து ஆடக்கூடிய இவர், சுழற்பந்துவீச்சாளரும் ஆவார்.
போட்டிகளை அணிக்காக வென்று கொடுக்கக் கூடிய திறமை வாய்ந்தவர்.
இறுக அடித்தாடும் துடுப்பாட்ட வீரரான இவர் மேற்கிந்தியத் தீவுகள் கிறிக்கெற் அணியில் ஒரு கலக்கக் கலக்குவார் என்று எதிர்பார்த்தால் மனிதர் எனக்கு ஆப்படித்துவிட்டார்.
ஆட்டநிர்ணய குற்றத்தல் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
ஒழுங்காக இருந்திருந்தால் சிறந்த வீரராக வந்திருப்பார் என்று நம்புகிறேன்.

ஆனால் இவர்கள் எல்லோரையும் விட முக்கியமானவர்,
13. கனகலிங்கம் கோபிகிருஷ்ணா.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் படித்த இவர் இலங்கை அணிக்குத் தலைமை தாங்குவார் என பரவலான பேச்சுக்கள் அடிபட்டன.
சிறந்த சுழற்பந்து வீச்சாளரான இவர் மணிக்கட்டுச் சுழற்பந்தை அநாயசமாக வீசக்கூடியவர், அத்தோடு ஓவ் ஸ்பின்னையும் அட்டகாசமாக வீசக் கூடியவர். சிறந்த கிறிக்கெற் மூளை உடையவரான இவர் பந்துகளின் வேகங்களை மாற்றி, அவற்றின் உயரங்கயும் மாற்றி துடுப்பாட்ட வீரர்களை குழப்புவதில் வல்லவர்.
அத்தோடு சிறந்த மத்தியவரிசை துடுப்பாட் வீரரான இவர் அணியின் தேவைக்கேற்றவாறு நிதானித்து ஆடக்கூடியவர்.
இலக்குகள் ஒருபுறத்தில் சரிந்தால் மறுபுறத்தில் பொறுமையாகவும், மற்றைய வேளைகளில் அடித்தும் ஆடக் கூடிய இவர் பலம் பொருந்திய துடுப்பாட்ட வீரராக கருதப்படுகிறார்.
சிறிது பருத்த (சிறிதா? எண்டு நக்கலா சிரிக்கப்படாது. அது அப்ப...) உருவமானவர் என்றாலும் 30 யார் கோட்டுக்குள் கவர், எக்ஸ்ரா கவர் திசைகளில் அநாயசமாக பாய்ந்து பிடிக்கக் கூடியவர், அத்தோடு துடுப்பாட்ட வீரருக்கு பக்கத்தில் நிற்கும் சிலி மிட் ஓவ், சிலி மிட் ஓன் களத்தடுப்பு நிலையில் அருமையான பிடிகளை எடுக்கக் கூடியவர்.
எனினும் அண்மைக்காலத்தில் கிறிக்கெற் விளையாடாமல் மனிதர் வீங்கி வெடிக்கும் நிலையில் காணப்படுவதாக புலனாய்வுத் தகவல்கள் சொல்கின்றன.
எனினும் இவர் கிறிக்கெற்றிலிருந்து ஒதுங்கி இருப்பதால் இலங்கை கிறிக்கெற் அணி சிறந்ததொரு சகலதுறை வீரரை இழந்திருப்பதாக நண்பர் குமார் சங்கக்கார ஒருசில வாரங்களுக்கு முன்னர் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.
(100% நகைச்சுவையே. 13 ஆவதாக பெயரிட்ட நபரை விட மற்றவர்கள் எல்லோரும் உண்மையான வீரர்களே.
13 ஆவதாக சிறிது நகைச்சுவைக்காக சேர்த்துக் கொண்டேன். ஆகவே நகைச்சுவையை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு எனக்கு ஓட்டோ அனுப்பாமல் விடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.)

அப்படியே வீணாய்ப் போன கிறிக்கெற் வீரர்கள் பட்டியலை நிறைவுசெய்யலாம் என்று நம்புகிறேன்.
இவர்கள் யாவரும் எனது மனதில் தங்கள் திறமையை வீணாக்குபவர்கள் என முத்திரை குத்தப்பட்டவர்களே.
வேறு பலரை நான் தவறவிட்டிருக்கக் கூடும்.

யாழ்தேவி வாக்குப்பட்டையிலும், தமிழிஷ் வாக்குப்பட்டையிலும் வாக்களிக்கலாம்...
பின்னூட்டத்தில் என்னைக் கும்மலாம்...

கிறிக்கெற் என்பது நம்மவர்களுக்கெல்லாம் தேசிய விளையாட்டாக மாறிப் போனாலும் கிறிக்கெற் பற்றி பதிவிட்டால் அதை எதிர்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் இந்த விமர்சனங்களை எல்லாம் கணக்கில் எடுப்பவனா நான்?
யார் என்ன சொன்னாலும் விடமாட்டேன் என்று தொடர்ந்து நகைச்சுவைப் பதிவுகளைத் தானே எழுதுகிறேன். என்னால முடிஞ்சத தானே எழுத முடியும்?

சரி... விடயத்துக்கு வருவோம்...
திறமை இருந்தும் சர்வதேச ரீதியில் பிரகாசிக்காத அல்லது பிரகாசிக்க முடியாமல் போன வீரர்களைப் பற்றி ஓர் பதிவிட வேண்டும் என்று நிறைய நாளாக ஆசை இருந்தது.
இதோ...
பின்னூட்டத்தில் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

இலங்கையில் இருந்து ஆரம்பிப்போம்... (ஓரளவு தற்போதைய கால வீரர்களைத் தான் கணக்கிலெடுக்கிறேன்)

1. சாமர கப்புகெதர
வலதுகைத் துடுப்பாட்ட வீரரான இவரது ஆட்டத் தொழில்நுட்டபத் திறன் (technic) காரணமாக சிறுவயதிலேயே இலங்கை அணிக்குத் தெரிவு செய்யப்பட்டார். ஆரம்பத்தில் அவுஸ்ரேலிய மண்ணில் பிரெட் லீயின் பந்தை துவம்சம் செய்து இவர் ஆடிய விதத்தைப் பார்த்து இவரை இலங்கையின் எதிர்காலம் என எண்ணியவர்கள் பலர். எனினும் இதுவரை தன்னை நிரூபிக்கவில்லை.
இவருக்கு ரெக்னிக் எனப்படும் ஆட்ட நுணுக்கத்தில் எந்த பிரச்சினையும் இல்லை.
இவர் technically sound என பலர் அழைக்கிறார்கள். எனினும் ஏதோ காரணங்களுக்காக தொடர்ந்தும் சறுக்கி வருகிறார்.
எனினும் இன்னும் சிறுவயது என்பதால் மீண்டு வருவார் என நம்புவோம்.


2. இந்திக்க டீ சரம்
வலதுகைத் துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான இவர் இலங்கை அணியில் இடம்பெறும் நோக்கில் சிறிது காலத்திற்கு முன்னர் விக்கெட் காப்புப் பணியை விட்டுவிட்டடு தனியே துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
அடித்தாடும் வீரரான இவர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கு சிறந்தவர் எனக் கருதப்படுகிறார்.
எனினும் அரசியல் காரணங்களாலோ என்னவோ தொடர்நதம் அணியில் இடம் வழங்க மறுக்கப்படுகிறார்.
இந்திய இலங்கை அணிகளுக்கிடையில் இலங்கையில் நடந்த இருபதுக்கு 20 போட்டியில் விளையாடும் பதினொருவரில் இடம்பெற்றிருந்த போதிலும் டில்ஷானால் கடை மத்தியநிலை (ஆறாம் இடத்தில் என்று நினைக்கிறேன்) வீரராக மாற்றப்பட்டு துடுப்பெடுத்தாட வாய்ப்பு கிடைக்காமல் வெறும் களத்தடுப்பாளராக விளையாடினார்.
இம்முறை இடம்பெற்ற இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தில் பதினொருவரி்ல் இடம் கிடைக்கவில்லை. சாமர சில்வா தொடர்ந்து பிரகாசிக்காமல் விட்ட போதிலும் இவரை விளையாட அனுமதிக்கவில்லை.
இவரது தந்தை ஓர் கட்சியின் தீவிர ஆதரவாளர் என்பதால் தான் இந்த நிலை என அறிய முடிந்தது.
இப்போது 36 வயதாவதால் இவரை இனி அணியில் சேர்ப்பார்களா தெரியவில்லை.


3. மாலிங்க பண்டார
கிறிக்கெற் விளையாடுவதில் இரண்டாவது மிகக்கடினமான அம்சம் எனக்கருதப்படும் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளரான இவர் பல காரணங்களால் அணியில் இடம்பெறவில்லை. (முதலாவது கடின அம்சமாக விக்கெட் காப்புப்பணி கருதப்படுகிறது)
அதிகளவான வித்தியாசமான பந்துவீச்சு வகைகள் (variation) இல்லாததால் முன்னரே ஓரளவு கணிக்கப்படக் கூடியவராக (predictable) மாறியதும் ஓர் காரணம். (Wrist spinner's some variations - google, flipper, zooter)
அத்தோடு பந்தை அதிகளவு திருப்பும் தன்மையும் இவரிடம் இல்லை.
ஆனால் தற்போதைய காலகட்டத்தில் கிறிக்கெற் என்பது துடுப்பாட்ட வீரர்களது விளையாட்டாகிவிட்டதால் ஓட்டங்களை மட்டுப் படுத்துவதே சுழற்பந்து வீச்சாளர்களது பிரதான பணியெனக் கருதப்படும் நிலையில் இவர் மட்டுப்படுத்தப்பட்ட பந்துப் பரிமாற்ற போட்டிகளுக்கு சிறந்தவர் என்ற போதிலும் முரளி, மென்டிஸ், ஹேரத் ஆகியோர் இவரை விட முன்னிலையில் நிற்பதால் வாய்ப்புக் கிடைக்காது தவித்து வருகிறார்.


இனி இந்தியா

1. ஸ்ரீசாந்
சிலர் நான் நகைச்சுவை செய்கிறேன் எனக் கருதலாம்.
ஆனால் உண்மையில் ஸ்ரீசாந் அற்புதமான வேகப்பந்து வீச்சாளர்.
Seam position எனப்படும் பந்தின் நூல்ப்பகுதியின் அமைவு என்பது வேகப்பந்து வீச்சாளருக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. கவனித்தப் பார்த்தீர்களானால் இவரது Seam அமைவு சிறப்பாக அமையும். (அதாவது பந்து ஆடுகளத்தை அடிக்கும் போது ஓரளவுக்கு நேராக அடிக்கும். அதிகளவுக்கு சுழராது. Scramble seam எனப்படும் ஓர் வகை இருந்தாலும் இது ஒரு வகை variation ஆகவே கருதப்படுகிறது.)
எனினும் இவரது திரும்பும் பந்துகள் (Swing) துடுப்பாட்ட வீரருக்கு நன்றாக திரும்புவதால் இவரது திரும்பலை அடையாளம் காணமுடிவதாக அலன் டொனால்ட் அண்மையில் தெரிவித்திருந்தார். சிறிய மாற்றமொன்றை செய்தால் இதை நிவர்த்திக்க முடியும். (வேகப்பந்து வீச்சின் இரகசியமாக கருதப்படுவது பந்து பிந்தி திரும்புதல், அதாவது late swing)
ஆனால் இதைவிட இவரது தனிப்பட்ட நடத்தைகள் தான் இவரை அதிகளிவில் பாதித்தன.
எளிதாக உணர்ச்சி வசப்படும் இவரது குணத்தால் தன் கட்டுப்பாட்டை மீறுவதால் இவரது பந்துவீச்சு பாதிக்கப்பட்டுள்ளது.
(அன்ட்ரூ நெல்லின் பந்தை நான்கு ஓட்டங்களுக்கு அடித்து விட்டு ஆடுகளத்தில் துடுப்பைச் சுற்றிச் சுற்றி இவர் ஆடிய ஆட்டம் இதற்கு ஓர் சிறந்த உதாரணம்.)


2. முனாப் பட்டேல்
தனிப்பட்ட ரீதியில் எனக்கு முனாப் பட்டேலை மிகப் பிடிக்கும்.
கவனித்துப் பார்த்தீர்களால் இவரது பந்துவீச்சுப் பாணியும் கிளெய்ன் மக்ராத்தின் பந்துவீச்சுப் பாணியும் கிட்டத்தட்ட ஒன்று போல் இருக்கும்.
அருமையான line and length இல் பந்து வீசக் கூடிய திறமையுள்ளவரான இவர் விக்கெட் எடுப்பதற்கு தேவையான திரும்பல் திறனையும் கொண்டவர்.
முதலாவது மாற்ற பந்துவீச்சாளராக (first change bowler) பந்துவீசுவது என்பதொன்றும் இலகுவான விடயமல்ல.
பந்து ஆரம்ப நிலையைப் போல பெரிதாகக் திரும்பாது. (less swing)
பெரிதான Seam movement உம் இருக்காது.
ஆரம்பப் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளைக் கைப்பற்றாவிட்டால் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவது என்றும், ஆரம்பப் பந்துவீச்சாளர்கள் ஓட்டங்களை வாரி வழங்கினால் ஓட்டங்களை கட்டுப்படுத்துவது என்றும் இவர்களது வேலை மாறிக் கொண்டேயிருக்கும்.
முதலாவது பந்துவீச்சாளர்களாக இருந்து ஆரம்பப் பந்துவீச்சாளர்களாக மாறிய பின்ரே உமர் குல், மிற்செல் ஜோன்சன் ஆகியோர் நிறைய இலக்குகளை கைப்பற்றத் தொடங்கினர்.
இந்தியாவின் சிறந்த முதலாம் மாற்றப் பந்துவீச்சாளர் என ஜவகல் ஸ்ரீநாத் இனால் புகழப்பட்டவர்.

எனினும் காயங்களால் நிறையவே பாதிக்கப்பட்டவர். காயத்தால் பந்துவீச்சு வேகமும் சற்றுக் குறைந்தது.
இப்போது தான் அணியில் மீண்டும் இடம்பெற ஆரம்பித்திருக்கிறார். பார்ப்போம்....


3. ரோகித் சர்மா
முதலாவது ஐ.பி.எல் இன் பின்னர் அடுத்த ரெண்டுல்கர் எனக் கருதப்பட்டவர்.
எனினும் இவர் இருபதுக்கு 20 போட்டிகளையே பெரிதும் விரும்புகிறார்.
ஒருநாள் போட்டிகளில் பெரிதாக சோபிப்பதில்லை.
இவரொன்றும் இறுக அடித்தாடும் துடுப்பாட்ட வீரர் (hard hitting batsman) அல்ல.
இவரைப் போன்ற ஆட்டமுறையைக் கொண்டவர்களை classy batsman என அழைப்பர். (மகேல, ரெண்டுல்கர், மார்க் வோ, ட்ராவிட், சமரவீர, பொன்ரிங் போன்ற பிரபலங்களை நினைத்துக் கொள்ளுங்கள்.)
இவரிடம் நல்ல technic இருந்த பொதிலும் இருபதுக்கு 20 போட்டிகளைத் தவிர மற்றைய போட்டிகளில் பெரிதாக சோபிக்காமல் போனதற்கு இவரின் மனப்பாங்கை (temperament) ஐ இவர் சரியாக கட்டுப்படுத்தாமை தான் காரணம் என கருதப்படுகிறது.


4. ரொபின் உத்தப்பா
தனது முதல் போட்டியில் இங்கிலாந்துக்கெதிராக 86 ஓட்டங்களை எடுத்து இந்திய துடுப்பாட்ட வீரரொருவர் தனது முதல் போட்டியில் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்டங்களில் எடுத்த அதிக ஓட்டங்கள் என்ற சாதனையை தன்வசம் வைத்திருக்கிறார்.
அத்தோடு இந்திய அணி சார்பாக சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் அரைச்சதம் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையையும் தன்வசம் வைத்திருக்கிறார்.
ஓரளவு வழமையான அடிகள் மூலம் (orthodox shots) மூலம் ஓட்டங்களைக் குவிக்கும் திறனுள்ள இவருக்கும் temperament பிரச்சினை இருப்பதால் இதுவரை சர்வதேச ரீதியில் பெரிதாக சாதிக்க முடியவில்லை.
இன்னும் வயது இருப்பதாலும், 2011ம் ஆண்டு உலகக்கிண்ணத்தின் பின்னர் பல சிரேஷ்ர வீரர்கள் ஓய்வுபெறுவார்கள் என்பதாலும் சாதிக்க வாய்ப்புண்டு.


அப்படியே கிறிக்கெற் பற்றி பெரிதாக தெரியாதவர்களுக்காக,
temperament என நான் குறிப்பிட்டது, ஒரு துடுப்பாட்ட வீரர் துடுப்பாட்ட வீரர் ஒருபுறத்தில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போது விக்கெட்டுக்கள் மறுபுறத்தில் சரிந்தாலோ அல்லது பந்துவீச்சாளர் அருமையாக பந்து வீசினாலோ அல்லது பந்து வீச்சாளர் வாய்ச்சண்டைகளில் ஈடுபட்டாலோ அல்லது கொஞ்சப் பந்துகளில் தொடர்ந்து ஓட்டங்கள் பெற முடியாமல் போனாலோ உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக இருப்பது ஆகும்.
அதே போல் பந்துவீச்சாளர்களுக்கும், தொடர்ந்து பந்துகள் எல்லைக் கோடுகளுக்கு அடிக்கப்பட்டாலோ அல்லது துடுப்பாட்ட வீரர் வாய்ச்சண்டைகளில் ஈடுபட்டாலோ அல்லது பிடிகள் தவறவிடப்பட்டாலோ எரிச்சலடையாமல் பொறுமையைக் காத்து தொடர்ந்து சரியாக பந்து வீசுதல்.

பகுதி இரண்டு தொடரும்... (பாப்பம்... பாப்பம்...)
(பகுதி இரண்டில் பாகிஸ்தான் வீரர்களும், ஏனைய வீரர்களும்.)

ஊடகங்களில் வெளியான அறிக்கைகளுக்கு புறம்பாக யுனிஸ்கானின் பதவி விலகலுக்கு வேறு காரணங்களும் இருக்கின்றன.
பதவி விலகலுக்கு காரணமான வெவ்வேறு வகைகள்...

தாஸ்ரியின் வேர்ஷன் (Dasti's Version): பாகிஸ்தானிய பாராளுமன்ற உறுப்பினரான தாஸ்ரி (அல்லது தஸ்ரி) இந்த மாதம் ஒக்ரோபர் என்பதை மறந்து ஏப்ரல் மாதம் எனவும் அவர் அறிக்கை வெளியிட்ட நாள் ஏப்ரல் முதலாம் திகதி எனவும் நினைத்துவிட்டார்.
அதனால் தான் ஆட்ட நிர்ணயசதி மற்றும் வேண்டுமென்றே தோற்றமை குறித்த குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.
அரையிறுதியில் பாகிஸ்தானின் தோல்வியால் கவலையடைந்திருந்த பாகிஸ்தான் மக்களை ஏப்ரல் முட்டாள் நகைச்சுவை சொல்லி அவர்களைத் தேற்ற வந்த அவரின் நல்ல மனதை புரிந்து கொள்ளவில்லை.
அவர் அந்தத் திகதியை ஏப்ரல் முதலாம் திகதி என நினைக்க காரணம் இருக்கிறது.
ஏனென்றால் இஜாஸ் பட் இன் பிறந்த தினம் ஒக்ரோபர் மாதத்திலேயே வருவதால் இரண்டையும் முடிச்சுப் போட்டு முட்டாள் தினம் என்பதால் ஏப்ரல் முதலாம் திகதி என நினைத்துவிட்டார்.


யனிஸ் கான் வேர்ஷன்: யுனிஸ்கான் நினைத்தார் இந்த ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்களில் எதுவும் இல்லை என்று. ஏனென்றால் ஆட்டங்கள் யாவும் முன்னரே நிர்ணயிக்கப்பட்டு இருப்பவை தானே. போதிய ஏற்பாடுகளை செய்வதற்காக முன்னரே ஆட்டங்களின் திகதிகள் நிர்ணயிக்கப்படுவது வழக்கம் தானே. இதில் என்ன இருக்கிறது என விட்டுவிட்டார்.
அதே வேளை தனது திருமண நிறைவுநாள் வருவதால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக இரண்டுநாள் விடுமுறை கேட்டு விடுமுறைக் கோரிக்கை கடிதத்தை (leave letter) இஜாஸ் பட் இடம் கையளித்தார்.
அந்தக் கடிதத்தை ஊடகங்கள் தான் இராஜினாமாக் கடிதம் என வதந்தியாக மாற்றிவிட்டன.
இஜாஸ் பட் உம் ஷகிட் அப்ரிடியை அணித்தலைவராக்க விரும்பியதால் இராஜினாமாக் கடிதம் எனக் கதையை மாற்றிவிட்டார்.
இதற்கெதிராக தனது கையை உயர்த்த யுனிஸ் கான் விரும்பினாலும் அவரது விரலில் முறிவு இருப்பதால் அவ்வாறு செய்ய முடியவில்லை.


திரு.இஜாஸ் பட் இன் வேர்ஷன் : Mr.Butt இன் பெற்றோர்கள் இதைவிட சிறந்த பெயரை அவருக்கு வைத்திருக்க முடியாது. (ஆங்கிலத்தில் எழுதியமையை கவனிக்க.) ஏனென்றால் அணியை மீள கட்டமைக்கும் காலப்பகுதியில் அணி பெற்றுத் தந்த அற்புதமான வெற்றிகளையும், முடிவுகளையும் சிதைத்த இவருக்கு இதைவிட சிறந்த பெயர் வேண்டுமா.
எல்லாவற்றுக்கும் இந்தியாவை நோக்கி விரலைக் காட்டுவதை விட்டுவிட்டு தனது வேலையை தான் ஒழுங்காக செய்திருந்தால் இவையெதுவும் நடந்திருக்காது. அணித்தலைவர் இல்லாமல் அணியைப் பற்றியும், அணியின் பெறுபேறுகளையும் பற்றி அணி வீரர்களோடு அதுவும் முட்டாள், பக்கச்சார்பான ஊடகங்கள் முன்னிலையில் விவாதிக்க இவர் எடுத்த முயற்சிகள் வாசிப்பதற்கும், கேட்பதற்கும் ஆச்சரியத்தையும் சுவாரசியத்தையும் தருகின்றன.


பாகிஸ்தான் இரசிகர்களது வேர்ஷன்: அதிகாரிகளாலும், ஊடகங்களாலும் செய்திகள் பரப்பப்பட்டு இவை நடப்பவை எமக்கொன்றும் புதிதில்லை. இதில் நல்ல விடயம் என்னவென்றால் இந்தக் கொடுமைகள் ஏற்கனவே பலமுறை நடந்திருப்பதாலும் அணிவீரர்கள் இதற்கு பழகிவிட்டார்கள் என்பதும் இவை எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதும் அணியானது மைதானத்தில் சிறப்பாக ஆடும் என்பதும் (குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக) அனைவரும் அறிந்ததே. அணி நிர்வாகத்தை நடத்த இம்ரான் கானை மறுபடியும் கொண்டுவாருங்கள்...


இங்கிலாந்து இரசிகர்களது வேர்ஷன்: கடவுளே! கெவின் பீற்றர்னை கடுப்பாக்குவதற்கு அவரின் முன்னால் வேறு ஒருவரை புகழ்வதற்கு எமக்கு யாருமே இல்லை. அதனால் தான் மைக் ஆதர்ற்றனை உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர் என வர்ணித்தோம்.
பாகிஸ்தானில் ஏராளமான திறமைகள் இருக்கின்றன, அத்தோடு சர்ச்சைகளும் இருக்கின்றன.
பாகிஸ்தான் அணியிலிருந்து ஓரிரண்டு வீரர்களை கொத்திக் கொண்டு போய் எமது இங்கிலாந்து நாட்டு வீரர்களுக்கு பதிலாக விளையாடினால் இங்கிலாந்து நாட்டைச் சேராத இங்கிலாந்து அணியொன்றை கட்டியெழுப்பும் எங்கள் கனவு மெய்ப்படும்.


குறிப்பு: இது என்னுடைய சொந்த ஆக்கமல்ல. ஆங்கிலத்தில் நண்பரொருவர் எழுதிய ஆக்கத்தில் தமிழ் வடிவமே இது.
தன்னுடைய ஆக்கத்தை மொழிமாற்றம் செய்து என்னுடைய தளத்தில் வெளியிட அனுமதி தந்த இந்தியாவைச் சேர்ந்த நண்பர் ரமேஷ் இற்கு நன்றிகள் பல.

****************************************************************************

அப்படியே.... இன்று தீபாவளியைக் கொண்டாடும் நண்பர்கள் அனைவுருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

பிரெட் ட்ரூமான் பந்து வீசிக் கொண்டிருந்தார். பந்து துடுப்பாட்ட வீரரின் துடுப்பின் ஓரத்தில் பட்டு முதலாவது சிலிப் இற்கு சென்றது. ஆனால் முதலாவது சிலிப் இல் நின்ற ரமன் சுப்பா றோ இனால் அதைப் பிடிக்க முடியவில்லை. பந்து அவரின் இரண்டு கால்களுக்குமிடையில் சென்றது. பிரெட் எதுவும் கூறவில்லை. பந்துப் பரிமாற்றம் நிறைவடைந்த பின்னர் றோ பந்துவீச்சாளரிடம் சென்று மன்னிப்பு கேட்கும் விதமாக கதைத்தார். 'நான் இரண்டு கால்களை சேர்த்து ஒட்ட வைத்திருந்திருக்க வேண்டும்' என்றார். பிரெட் சொன்னார் 'மகனே அது நீ அல்ல. உனது அம்மா தான் அதைச் செய்திருக்க வேண்டும்'.

தென்னாபிரிக்காவில் நடைபெற்ற ரெஸ்ற் போட்டியொன்றில் மேர்வ் ஹியூஸ் (அவுஸ்ரேலியா) தென்னாபிரிக்காவின் ஹான்சி குரேஞ்சே இற்கு பந்து வீசிக் கொண்டிருந்தார். தட்டையான அந்த ஆடுகளம் பந்துவீச்சாளருக்கு எந்தவிதத்திலும் நன்மை அளிக்கவில்லை. ஹியூஸ் வீசிய பந்துகளை அரங்கம் முழுவதும் பறக்கச் செய்தார் குரோஞ்சே. ஹியூஸ் வீசிய ஒவ்வொரு பந்துகளும் எல்லைக் கோட்டிற்கு சென்றன. எரிச்சலடைந்த ஹியூஸ் குரேஞ்சேயிடம் சென்று 'அஜீரண வாயுவை' (fart) வெளியேற்றி விட்டு 'உன்னால் முடியுமென்றால் இதை அடித்துப் பார்' என்றார். முழு மைதானத்திலும் மயான அமைதி நிலவியது.

ஹர்பஜன் சிங் துடுப்பெடுத்தாட ஆடுகளத்திற்கு வந்தார். இலக்குக் காப்புப் பணியில் நின்ற சங்கக்கார ஹர்பஜனிடம் 'துடுப்பெடுத்தாட வரும் போது அரைக் கை கொண்ட மேலாடையும், பந்து வீசும் போது முக்கால் கை கொண்ட மேலாடையும் அணிவதற்கு காரணம் என்ன?' என்று கேட்டார். விளைவு- அடுத்த சில நிமிடங்களில் ஹர்பஜன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
(ஹர்பஜன் சிங் பந்தை எறிவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த காலமது. பந்தை வினைத்திறனாக, மற்றவர்களுக்கு தெரியாமல் எறிவதற்காகவே முக்கால் கை கொண்ட ஆடைகளை அணிகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்த காலமது.)

ஆஷஷ் தொடரொன்றில் ரொட் மார்ஷ் மற்றும் இயன் பொத்தம் ஆகியோருக்கிடையில் நடைபெற்றதே இது.
இயன் பொத்தம் துடுப்பெடுத்தாட வந்தார். துடுப்பெடுத்தாட வந்த பொத்தம் ஐ 'அன்பு' வார்த்தைகளில் வரவேற்றார் மார்ஷ் 'உன்னுடைய மனைவியும் என்னுடைய குழந்தைகளும் நலமா?'. விடுவாரா பொத்தம்? பதிலளித்தார் அழகாக. 'மனைவி நலம். ஆனால் குழந்தைகள் மூளை வளர்ச்சிக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்' என்றார்.

அர்யுன ரணதுங்க துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தார். ஷேண் வோண் பந்து வீசிக் கொண்டிருந்தார். ரணதுங்கவை ஆட்டமிழக்க வைக்க முடியாததால் புதிய வகை உத்தியொன்றை கையாண்டார் வோண். பந்தை நன்றாக உயரவிட்டு (பிளைற்றிங்) துடுப்பிலிருந்து சற்று முன்னே விழச் செய்தார். எனவே ரணதுங்க காலை முன்னோக்கி இழுக்கவோ அல்லது இரண்டு அடிகள் முன்னே வைத்து அடிக்க முயல்வார், அதன் மூலம் ஸ்ரம்ப் செய்யலாம் என நம்பினார். ஆனால் ரணதுங்க அசைவதாக இல்லை.
எரிச்சலடைந்த இலக்கக் காப்பாளர் இயன் ஹீலி கத்தினார் 'இதற்குப் பதில் 'மாஷ் சொக்ளெற்' ஒன்றை அங்கே போடு. நீ விரும்புவதை அது செய்யும்' என்றார்.

பிரெட் ட்ரூமானிற்கும் ஓர் அவுஸ்ரேலிய துடுப்பாட்ட வீரருக்கும் இடையில் 1960களில் நடைபெற்றது இது.
அவுஸ்ரேலிய இங்கிலாந்து ரெஸ்ற் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. வீரர்கள் அமரும் பகுதியிலிருந்து மைதானத்திற்குள் வரும் கதவிற்கு அருகில் நின்று பந்து தடுப்புப் பணியில் நின்று கொண்டிருந்தார் ட்ரூமான். ஒரு வீரர் ஆட்டமிழக்க மற்ற வீரர் மைதானத்திற்குள் வந்த பின் அந்தக் கதவை மூட முயன்றார். ட்ரூமான் சொன்னார், 'கஷ்ரப் படாதே மகனே. பூட்டாமல் செல். நீ அங்கே அதிகமாக நிற்கப் போவதில்லை.'.

அவுஸ்ரேலிய தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
நீல் மக்கென்ஸி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தார். நீல் மக்கென்ஸி மூட நம்பிக்கைகளுக்கு பெயர் போனவர். துடுப்பெடுத்தாடும் போடு 'கிறீஸ்' கோட்டை மிதிக்க மாட்டார், எதிரே உள்ள மற்ற துடுப்பாட்ட வீரரை பார்க்க மாட்டார் போன்றன.
பிரெட் லீ பந்து வீசிக் கொண்டிருந்த போது வந்து சொன்னார், 'ஏய் மக்கா! நீ கிறீஸ் கோட்டை மிதித்து விட்டாய். அது உனக்கு துரதிஷ்டத்தை அளிக்கப் போகிறது.'. விளைவு- 99 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் மக்கென்ஸி.

1999ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் ஸ்ரிவ் வோ இன் பிடியொன்றைத் தவறவிட்டார் ஹேர்ச்சில் கிப்ஸ். அந்தப் பந்துப் பரிமாற்றம் நிறைவு பெற்ற பின்னர் ஆடுகளத்தைக் கடந்து சென்ற கிப்ஸ் இடம் கேட்டார் வோ, 'ஹேய் ஹேர்ச்சில்! உலகக்கிண்ணத்தை தவறவிட்டதை எவ்வாறு உணர்கிறாய்?'

அர்யுன ரணதுங்கவிடம் கேட்டார் இயன் ஹீலி, 'உனது கால்கள் நடுங்குகின்றன போலிருக்கிறதே?'. ரணதுங்க சொன்னார் 'ஆம். உனது மனைவியுடன் உறங்கியதால் கால்கள் நடுங்குகின்றன.'

ஜேமி சிடன்ஸ், அவுஸ்ரேலியாவின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர். ஆனால் ரெஸ்ற் போட்டிகளில் விளையாடியதே இல்லை.
ஒரு முறை சிடன்ஸ் சிலிப்ஸ் இல் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது ஒரு துடுப்பாட்ட வீரர் மிகமெதுவாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தார். உடனே சிடன்ஸ் 'ஹேய்! இதொன்றும் ரெஸ்ற் போட்டி இல்லை' என்றார்.
துடுப்பாட்ட வீரர் திரும்பி 'நிச்சயமாக! ஏனென்றால் நீ விளையாடுகிறாயே...' என்றார்.

சுனில் கவாஸ்கர் தனது வழமையான ஆரம்பத் துடுப்பாட்ட ஸ்தானத்தை அந்த ரெஸ்ற் போட்டிக்காக விட்டுக் கொடுத்து 4ம் இடத்தில் வர முடிவு செய்திருந்தார். ஆனால் மேற்கிந்திய ஆரம்பப் பந்து வீச்சாளரான மல்கம் மாஷல் தனது பந்து வீச்சால் அனுஸ்மான் கேய்க்வேட் மற்றும் துலிப் வெங்சாக்கர் ஆகியோரை பூச்சியத்துக்கே அரங்கு திருப்பினார். விளைவு சுனில் கவாஸ்கர் அரங்கு புகும் போது பூச்சியம் ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டிருந்தன. கவாஸ்கரை மேலும் பதற்றப்படுத்த விவியன் றிச்சட்ஸ் சொன்னார் 'மனிதா! நீ ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக வந்தாலென்ன 4ம் இலக்கத்தில் வந்தாலென்ன வேறுபாடில்லை. ஓட்ட எண்ணிக்கை பூச்சியம் தான்'

அவுஸ்ரேலியாவின் கிளெய்ன் மக்ராத் பந்து வீசிக் கொண்டிருந்த போது மேற்கிந்தியத் தீவுகளின் ராம் நரேஷ் சர்வானிடம் 'லாராவின் அது (மக்ராத் கேட்ட வார்த்தையை தணிக்கை செய்திருக்கிறேன்) எவ்வாறு சுவைக்கும்?' என்றாராம்.
உடனே சர்வான் 'எனக்குத் தெரியாது. அதைப் போய் உன் மனைவியிடம் கேள்' என்றாராம்.
மக்ராத் கோபமுற்று 'நீ என் மனைவியை இனி அவமானப் படுத்தினால் உனது தொண்டையை வெளியே எடுத்து விடுவேன்' என்றார்.

டெரய்ல் குலைமான் என்பவர் துடுப்பெடுத்தாட ஆடுகளத்திற்கு வந்தார். உடனே ஷேன் வோண் அருகில் போய் 'உன்னை அவமானப்படுத்த 2 வருடங்களாக காத்திருந்தேன்' என்றார்.
உடனே குலைமான் 'அந்த 2 வருடங்களையும் சாப்பிடுவதிலேயே செலவழித்திருக்கிறாய் போலிருக்கிறதே' என்றார்.

பரோர் என்பவர் துடுப்பெடுத்தாட ஆடுகளம் வந்தார். முதலாவது பந்தை ஆட முயன்றார். ஆனால் பந்து அவர் துடுப்பில் படவில்லை.
இரண்டாவது சிலிப் இல் நின்ற மார்க் வோ 'ஓ! எனக்கு ஞாபகம் இருக்கிறது. சில ஆண்டுகளாக அவுஸ்ரேலியாவில் நீ எதற்கும் உபயோகமற்றவனாக இருந்தாய். இப்போது அதைவிட மோசம்' என்றார்.
உடனே பரோர் திரும்பி 'ஆம். அது நான் தான். அத்தோடு நான் அங்கே இருந்தபோது முதிய, அழுக்கான, வடிவில்லாத நடத்தை கெட்ட பெண்ணோடு திரிந்தாய். இப்போது அவளையே நீ திருமணம் புரிந்து விட்டாயாமே' என்றார் அமைதியாக.

கிளெய்ன் மக்ராத் சிம்பாப்வேயின் கடைசி துடுப்பாட்ட வீரருக்கு பந்து வீசிக் கொண்டிருந்தார். ஆனால் பிரென்ட்ஸால் பந்துக்கு கிட்டவே துடுப்பை கொண்டு போக முடியவில்லை.
எரிச்சலடைந்த மக்ராத் 'ஏன் நீ இவ்வளவு பருத்த உடலுடையவனாக இருக்கிறாய்' என்றார்.
உடனே பிரென்ஸ் 'ஏனென்றால் ஒவ்வொரு முறையும் உன் மனைவியோடு நான் காதல் புரியும் பொழுதும் உன் மனைவி எனக்கு பிஸ்கற்றுக்களை கொடுப்பது வழக்கம். அதனால் தான்' என்றார்.

அவுஸ்ரேலியாவின் மெர்வ் ஹியூஸ் ஐ அடிலெய்ட் இல் நடந்த ஒரு போட்டியின் போது பாகிஸ்தானின் ஜாவிட் மியான்டாட் இருவரும் மோதிக் கொண்ட போது 'பருத்த பேருந்து நடத்துனர்' என அழைத்தாராம்.
சிறிது நேரத்தில் ஜாவிட் மியான்டாட் இன் விக்கெற்றை ஹியூஸ் கைப்பற்றினார். ஜாவிட் மியான்டாட் வெளியேறும் போது ஹியூஸ் சத்தமிட்டார் 'Ticket please'.

ஸ்ரிவ் வோ தனது இறுதிப் போட்டியில் விளையாட ஆடுகளம் வந்தார்.
இலக்குக் காப்பாளரான இந்தியாவின் பார்த்திவ் பட்டேல் 'ஆகவே இது உங்களின் இறுதிப் போட்டி. எங்கே உங்கள் பிரபலமான வார்த்தைச் சண்டைகளை வெளியிடுங்கள் பார்க்கலாம்' என்றார்.
ஸ்ரிவ் வோ அமைதியாக 'எனக்கு மரியாதை செய். நான் எனது முதல் போட்டியில் விளையாடும் போது நீ நப்கின்னோடு தான் இருந்திருப்பாய்' என்றாராம்.

மேற்கிந்தியத் தீவுகளின் கிரெக் தோமஸ் தனது சக வீரரான விவியன் றிச்சட்ஸ் ற்கு உள்ளூர் போட்டியொன்றில் பந்து வீசிக் கொண்டிருந்தார்.
ஓர் அருமையான விலகிச் செல்லும் பந்தொன்று விவியன் றிச்சட்ஸை ஏமாற்றிச் சென்றது.
உடனே தோமஸ் அருகே சென்று 'அது (பந்து) சிவப்பு நிறமானது, கோளமானது, 5.5 அவுன்ஸ் அளவில் பாராமானது' என நக்கல் தொனியில் சொன்னார்.
அதற்கடுத்த பந்தை அரங்கத்திற்கு வெளியே அடித்தார் றிச்சட்ஸ்.
அமைதியாக சொன்னார் ' அது (பந்து) எப்படி இருக்கும் என உனக்குத் தான் தெரியுமே. போ! போய்த் தேடு' என்றார்.