பிரெட் ட்ரூமான் பந்து வீசிக் கொண்டிருந்தார். பந்து துடுப்பாட்ட வீரரின் துடுப்பின் ஓரத்தில் பட்டு முதலாவது சிலிப் இற்கு சென்றது. ஆனால் முதலாவது சிலிப் இல் நின்ற ரமன் சுப்பா றோ இனால் அதைப் பிடிக்க முடியவில்லை. பந்து அவரின் இரண்டு கால்களுக்குமிடையில் சென்றது. பிரெட் எதுவும் கூறவில்லை. பந்துப் பரிமாற்றம் நிறைவடைந்த பின்னர் றோ பந்துவீச்சாளரிடம் சென்று மன்னிப்பு கேட்கும் விதமாக கதைத்தார். 'நான் இரண்டு கால்களை சேர்த்து ஒட்ட வைத்திருந்திருக்க வேண்டும்' என்றார். பிரெட் சொன்னார் 'மகனே அது நீ அல்ல. உனது அம்மா தான் அதைச் செய்திருக்க வேண்டும்'.
தென்னாபிரிக்காவில் நடைபெற்ற ரெஸ்ற் போட்டியொன்றில் மேர்வ் ஹியூஸ் (அவுஸ்ரேலியா) தென்னாபிரிக்காவின் ஹான்சி குரேஞ்சே இற்கு பந்து வீசிக் கொண்டிருந்தார். தட்டையான அந்த ஆடுகளம் பந்துவீச்சாளருக்கு எந்தவிதத்திலும் நன்மை அளிக்கவில்லை. ஹியூஸ் வீசிய பந்துகளை அரங்கம் முழுவதும் பறக்கச் செய்தார் குரோஞ்சே. ஹியூஸ் வீசிய ஒவ்வொரு பந்துகளும் எல்லைக் கோட்டிற்கு சென்றன. எரிச்சலடைந்த ஹியூஸ் குரேஞ்சேயிடம் சென்று 'அஜீரண வாயுவை' (fart) வெளியேற்றி விட்டு 'உன்னால் முடியுமென்றால் இதை அடித்துப் பார்' என்றார். முழு மைதானத்திலும் மயான அமைதி நிலவியது.
ஹர்பஜன் சிங் துடுப்பெடுத்தாட ஆடுகளத்திற்கு வந்தார். இலக்குக் காப்புப் பணியில் நின்ற சங்கக்கார ஹர்பஜனிடம் 'துடுப்பெடுத்தாட வரும் போது அரைக் கை கொண்ட மேலாடையும், பந்து வீசும் போது முக்கால் கை கொண்ட மேலாடையும் அணிவதற்கு காரணம் என்ன?' என்று கேட்டார். விளைவு- அடுத்த சில நிமிடங்களில் ஹர்பஜன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
(ஹர்பஜன் சிங் பந்தை எறிவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த காலமது. பந்தை வினைத்திறனாக, மற்றவர்களுக்கு தெரியாமல் எறிவதற்காகவே முக்கால் கை கொண்ட ஆடைகளை அணிகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்த காலமது.)
ஆஷஷ் தொடரொன்றில் ரொட் மார்ஷ் மற்றும் இயன் பொத்தம் ஆகியோருக்கிடையில் நடைபெற்றதே இது.
இயன் பொத்தம் துடுப்பெடுத்தாட வந்தார். துடுப்பெடுத்தாட வந்த பொத்தம் ஐ 'அன்பு' வார்த்தைகளில் வரவேற்றார் மார்ஷ் 'உன்னுடைய மனைவியும் என்னுடைய குழந்தைகளும் நலமா?'. விடுவாரா பொத்தம்? பதிலளித்தார் அழகாக. 'மனைவி நலம். ஆனால் குழந்தைகள் மூளை வளர்ச்சிக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்' என்றார்.
அர்யுன ரணதுங்க துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தார். ஷேண் வோண் பந்து வீசிக் கொண்டிருந்தார். ரணதுங்கவை ஆட்டமிழக்க வைக்க முடியாததால் புதிய வகை உத்தியொன்றை கையாண்டார் வோண். பந்தை நன்றாக உயரவிட்டு (பிளைற்றிங்) துடுப்பிலிருந்து சற்று முன்னே விழச் செய்தார். எனவே ரணதுங்க காலை முன்னோக்கி இழுக்கவோ அல்லது இரண்டு அடிகள் முன்னே வைத்து அடிக்க முயல்வார், அதன் மூலம் ஸ்ரம்ப் செய்யலாம் என நம்பினார். ஆனால் ரணதுங்க அசைவதாக இல்லை.
எரிச்சலடைந்த இலக்கக் காப்பாளர் இயன் ஹீலி கத்தினார் 'இதற்குப் பதில் 'மாஷ் சொக்ளெற்' ஒன்றை அங்கே போடு. நீ விரும்புவதை அது செய்யும்' என்றார்.
பிரெட் ட்ரூமானிற்கும் ஓர் அவுஸ்ரேலிய துடுப்பாட்ட வீரருக்கும் இடையில் 1960களில் நடைபெற்றது இது.
அவுஸ்ரேலிய இங்கிலாந்து ரெஸ்ற் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. வீரர்கள் அமரும் பகுதியிலிருந்து மைதானத்திற்குள் வரும் கதவிற்கு அருகில் நின்று பந்து தடுப்புப் பணியில் நின்று கொண்டிருந்தார் ட்ரூமான். ஒரு வீரர் ஆட்டமிழக்க மற்ற வீரர் மைதானத்திற்குள் வந்த பின் அந்தக் கதவை மூட முயன்றார். ட்ரூமான் சொன்னார், 'கஷ்ரப் படாதே மகனே. பூட்டாமல் செல். நீ அங்கே அதிகமாக நிற்கப் போவதில்லை.'.
அவுஸ்ரேலிய தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
நீல் மக்கென்ஸி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தார். நீல் மக்கென்ஸி மூட நம்பிக்கைகளுக்கு பெயர் போனவர். துடுப்பெடுத்தாடும் போடு 'கிறீஸ்' கோட்டை மிதிக்க மாட்டார், எதிரே உள்ள மற்ற துடுப்பாட்ட வீரரை பார்க்க மாட்டார் போன்றன.
பிரெட் லீ பந்து வீசிக் கொண்டிருந்த போது வந்து சொன்னார், 'ஏய் மக்கா! நீ கிறீஸ் கோட்டை மிதித்து விட்டாய். அது உனக்கு துரதிஷ்டத்தை அளிக்கப் போகிறது.'. விளைவு- 99 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் மக்கென்ஸி.
1999ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் ஸ்ரிவ் வோ இன் பிடியொன்றைத் தவறவிட்டார் ஹேர்ச்சில் கிப்ஸ். அந்தப் பந்துப் பரிமாற்றம் நிறைவு பெற்ற பின்னர் ஆடுகளத்தைக் கடந்து சென்ற கிப்ஸ் இடம் கேட்டார் வோ, 'ஹேய் ஹேர்ச்சில்! உலகக்கிண்ணத்தை தவறவிட்டதை எவ்வாறு உணர்கிறாய்?'
அர்யுன ரணதுங்கவிடம் கேட்டார் இயன் ஹீலி, 'உனது கால்கள் நடுங்குகின்றன போலிருக்கிறதே?'. ரணதுங்க சொன்னார் 'ஆம். உனது மனைவியுடன் உறங்கியதால் கால்கள் நடுங்குகின்றன.'
ஜேமி சிடன்ஸ், அவுஸ்ரேலியாவின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர். ஆனால் ரெஸ்ற் போட்டிகளில் விளையாடியதே இல்லை.
ஒரு முறை சிடன்ஸ் சிலிப்ஸ் இல் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது ஒரு துடுப்பாட்ட வீரர் மிகமெதுவாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தார். உடனே சிடன்ஸ் 'ஹேய்! இதொன்றும் ரெஸ்ற் போட்டி இல்லை' என்றார்.
துடுப்பாட்ட வீரர் திரும்பி 'நிச்சயமாக! ஏனென்றால் நீ விளையாடுகிறாயே...' என்றார்.
சுனில் கவாஸ்கர் தனது வழமையான ஆரம்பத் துடுப்பாட்ட ஸ்தானத்தை அந்த ரெஸ்ற் போட்டிக்காக விட்டுக் கொடுத்து 4ம் இடத்தில் வர முடிவு செய்திருந்தார். ஆனால் மேற்கிந்திய ஆரம்பப் பந்து வீச்சாளரான மல்கம் மாஷல் தனது பந்து வீச்சால் அனுஸ்மான் கேய்க்வேட் மற்றும் துலிப் வெங்சாக்கர் ஆகியோரை பூச்சியத்துக்கே அரங்கு திருப்பினார். விளைவு சுனில் கவாஸ்கர் அரங்கு புகும் போது பூச்சியம் ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டிருந்தன. கவாஸ்கரை மேலும் பதற்றப்படுத்த விவியன் றிச்சட்ஸ் சொன்னார் 'மனிதா! நீ ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக வந்தாலென்ன 4ம் இலக்கத்தில் வந்தாலென்ன வேறுபாடில்லை. ஓட்ட எண்ணிக்கை பூச்சியம் தான்'
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக