க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

வீணாய்ப்போன கிறிக்கெற் வீரர்கள் பாகம் ஒன்றைப் படிக்க இங்கே அழுத்தவும்.
எனினும் முதலாம் பாகத்தைப் படித்துவிட்டுத் தான் இரண்டாம் பாகத்தைப் படிக்க வேண்டுமென்றில்லை. இரண்டாம் பாகத்தைப் படித்துவிட்டும் முதலாம் பாகத்தைப் படிக்கலாம்.
இல்லை முதலாம் பாகத்தை படிக்காமலேயே விடலாம்.
இல்லை, இரண்டு பாகங்களையுமே படிக்காமலும் விடலாம்.
(கொஞ்சம் அதிகமாவே அறுக்கிறனோ?)

6. சுப்ரமணியம் பத்ரினாத் -
தமிழக அணியின் தலைவராக இருந்து தொடர்ச்சியாக ஓட்டங்களைக் குவித்து வந்தவர்.
26 அல்லது 27 வயதில் தான் சர்வதேசப் போட்டிகளில் ஆடும் வாய்ப்புக் கிடைத்தது.
போதியளவு ஆடாததால் அணியில் தொடர்ந்து நீடிக்கமுடியவில்லை.
எனினும் இலங்கை அணிக்கெதிரான போட்டியொன்றில் இலங்கையில் வைத்து ஆரம்ப இலக்குகள் சற்று வேளைக்கே வீழ்த்தப்பட்ட பின்னர் அணித்தலைவர் டோனியுடன் சேர்ந்து ஆடிய விதம், குறிப்பாக முரளியை சமாளித்து ஆடியவிதம் இவருக்குள் திறமை இருக்கிறது என்பதைக் காட்டியது.
எனினும் சர்வதேச ரீதியில் இனித் தான் பெரியளவில் பிரகாசிக்க வேண்டியிருக்கிறது.
எனினும் இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையில் இவருக்கு இனி இடம்கிடைக்குமா என்பது சந்தேகமே...
2011 உலகக்கிண்ணத்தின் பின்னர் வாய்ப்புக்கிடைக்கலாம்.


7. மிஸ்பா உல்-ஹக் -
அடுத்த இருபதுக்கு இருபது விசேடித்த வீரர். (Twenty 20 specialist)
முதலாவது இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத்தில் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறவும், தோற்கும் நிலையிலிருந்த இறுதிப் போட்டியில் வெல்லும் வாய்ப்புகள் கூட ஏற்பட்டதற்கும் (இறுதியில் தோற்றாலும்) காரணகர்த்தாக்களில் ஒருவர்.
ஏராளமான காலம் உள்ளூர்ப் போட்டிகளில் குப்பை கொட்டிக் கொண்டிருந்த இவர் முதலாவது இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத்திற்கு பின்னர் பாகிஸ்தானின் நட்சத்திரமானார்.
பந்தை ஓங்கி அடிக்கும் வல்லமையுடைய (hard hitting batsman) இவர் சுழற்பந்துவீச்சையும் அழகாக விளையாடக் கூடியவர். (Spin expert)
இருபதுக்கு இருபது என்றால் தன் கையை உயர்த்தி அணிக்காக போட்டிகளை வெல்லும் இவர் ஒருநாள் போட்டிகளில் ஓரளவிற்கு ஆடினாலும். இவரது திறமைக்கு ஏற்றவாறு ஆடவில்லை. (He is not playing up to his standard). இன்னும் ஒருநாள் சதமொன்றைப் பெறாத இவர் தொடர்ந்து திறமையை வெளிக்காட்டுவதில்லை. (inconsistent)
ரெஸ்ற் போட்டிகளில் அதைவிட மோசம்.
ரெஸ்ற் போட்டிகளில் பந்துகளை தொடர்ந்தும் மறித்துக் கொண்டு (defence) ஓட்டங்களை அடிக்க முற்படாதது தான் இவரது பிரச்சினை.
ரெஸ்ற் போட்டிகளில் ஆரம்ப 50 பந்துகளில் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றால் அது இவருக்கு சாதனை.
இவ்வாறு தொடர்ந்து மறித்துக் கொண்டேயிருப்பதால் ஒட்டங்களை எடுக்கும் ஆர்வம் குறையும், அதனால் ஓட்டங்களை எடுக்காமல் விட அழுத்தம் அதிகமாக தேவையற்ற அடிகளை அடித்து ஆட்டமிழப்பது தான் இவர் வழமை.
இலங்கை அணியுடனான கடந்த தொடரில் குலசேகரவின் உள்வளையும் பந்துகள் (Inswingers and Indippers) இவருக்கு பெருஞ்சோதனையாக அமைந்தன.


8. உபுல் தரங்க -
இலங்கை அணிக்கு நல்ல ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ஒருவர் கிடைத்துவிட்டார் என எல்லோரும் மகிழ்ச்சியடைந்தது இவரால் தான்.
தொடர்நது சதங்கள், அரைச்சதங்களும் என்று ஆரம்பத்தில் அசத்திவந்தார்.
இலங்கை சார்பாக ஒருநாள் போட்டிகளில் விரைவாக 1000 ஓட்டங்களை (போட்டிகள் எண்ணிக்கையில்)பெற்ற சாதனைக்குச் சொந்தக்காரர்.
வேகப்பந்துவீச்சுக்களை நன்றாக ட்ரைவ் (என்ன தமிழ் போடுவது?) செய்யக் கூடிய இவரது ஸ்குயர் ட்ரைவ்கள் (Square drives) பார்ப்பதற்கு அழகு தான்...
அனைவரும் இவரை ஒரு முழுமையான துடுப்பாட்ட வீரர் (compact player) என நம்பியிருந்த காலகட்டத்தில் தான் பிரச்சினை ஆரம்பித்தது.
ஓவ் ஸ்ரம்ப் (Off stump) இற்கு சற்று வெளியே விலகிச்செல்லும் பந்துகளுக்கு துடுப்பை நீட்டி இலக்குக் காப்பாளரிடமோ அல்லது ஸ்லிப் வீரர்களிடமோ பிடியைக் கொடுப்பது தான் இவரது ஒரே பிரச்சினை, பெரிய பிரச்சினை.
(Off stump awareness என்று அழைப்பார்கள். இலங்கையின் மஹேல ஜெயவர்தனவிற்கும் இந்தப் பிரச்சினை இருக்கிறது.)
கிட்டத்தட்ட ஓவ் ஸ்ரம்ப் இலிருந்து விலகிச்செல்லும் பந்துகளை வீசினாலே இவரது இலக்கைக் கைப்பற்றிவிடலாம் என்ற அளவிற்கு நிலைமை மோசமாகியது.
எனவே அணயில் இடத்தை இழந்த இவர் அண்மைக்காலமாக உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாக ஆடிவந்ததால் பாகிஸ்தானிற்கெதிரான ஒருநாள் தொடரில் இடம்பெற்ற இவர் முதல் போட்டியில் சொதப்பினாலும் இரண்டாவது போட்டியில் அட்டகாசமாக ஆடினார். எனினும் மூன்றாவது போட்டியில் தனது வழமையான முறையில் ஆட்டமிழந்தார்.
எனினும் இந்தப் பிரச்சினையை சீர்செய்தால் இலங்கை அணி ஓர் சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரரொருவரைப் பெறலாம் என்பது மட்டும் உண்மை.


9. ஸ்ருவேட் மக்கில்
ஷேன் வோண் என்னும் மாபெரும் சுழற்பந்துவீச்சு ஜாம்பவானின் நிழலால் மறைக்கப்பட்ட நட்சத்திரம்.
கிறிக்கெற் உலகில் கடினமான வேலைகளில் ஒன்றாகக் கருதப்படும் மணிக்கட்டுச் சுழற் பந்துவீச்சாளரான இவர் ஷென் வோணை விட இம்மியளவு திறமை குறைவானவர் என்பதால் ஆடமுடியாமல் போனது.
ஒரே அணியில் இரண்டு ஒரே வகைச் சுழற்பந்துவீச்சாளர்களை கொண்டு விளையாடுவது அவ்வாறு சிறந்ததல்ல என்பதால் சர்வதேச மட்டத்தில் பெரிதாக ஆடக் கிடைக்கவில்லை.
விளையாடிய போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும் பின்னர் ஷேன் வோண் ஓய்வுபெற்ற பின்னர் வாய்ப்புக்கிடைக்கும் போது அதிக வயதாகிவிட்டதாலும், உடற்தகுதிநிலைமை காரணமாகவும் ஓய்வுபெறவேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டிருந்தார்.
ஒரு 5 ஆண்டுகள் பிந்திப் பிறந்திருந்தாரானால் இன்னொரு சழந்பந்துவீச்சு ஜாம்பவானை உலகம் கண்டிருக்கும்.



10. பிரட் ஹொக்-
Left arm unorthodox வகை எனப்படுகின்ற பந்துவீச்சாளர்கள் கிறிக்கெற் உலகில் மிகக்குறைவு.
Left arm unorthodox என்பது இடது கையால் இடதுகைத்துடுப்பாட்ட வீரருக்கு லெக் ஸ்பின் வீசுவது தான்.
ஆனால் லெக் ஸ்பின் வீசுவது கடினமான ஓர் விடயம் என்பதாலும், அவ்வாறு கஷ்ரப்பட்டு வீசும் பந்துகள் வலதுகைத் துடுப்பாட்ட வீரருக்கு (உலகில் வலதுகைத் துடுப்பாட்ட வீரர்கள் தான் அதிகம்) உள்திரும்பும் பந்துகளாக அமையும் என்பதால் இந்தப் பந்துவீச்சு முறையை பலரும் தெரிவுசெய்வதில்லை. மாறாக Left arm orthodox பந்துவீச்சாளர்களாக மாறிவிடுகிறார்கள். இவ்வாறு வீசும் போது பந்து வலதுகைத்துடுப்பாட்ட வீரரை விட்டு விலகிச்செல்வதால் இலக்குகளைக் கைப்பற்றும் வாய்ப்புகள் அதிகம்.
(பந்து உள்நோக்கி வரும் போது அதைக் கணித்து ஆடுவது ஓரளவுக்கு சுலபம். அதுவும் மணிக்கட்டுச் சுழல் பந்துகள் உள்நோக்கி வரும் போது ஆடுவது ஓரளவுக்கு சுலபம்.
ஆனால் பந்து துடுப்பாட்ட வீரரை விட்டு விலகிச்செல்லும் போது ஸ்லிப் இடம் பிடிகொடுக்கவோ, இலக்குக் காப்பாளரிடம் பிடிகொடுக்கவோ, அல்லது ஸ்ரம்ப் செய்யப்படவோ வாய்ப்புகள் அதிகம்.)
அப்படிப்பட்ட Left arm unorthodox வகைப்பந்துவீச்சாளரான இவர் திறமை வாய்ந்த பந்துவீச்சாளர்.
ஷேன் வோண் என்னும் மாபெரும் சுழற்பந்துவீச்சு ஜாம்பவானின் நிழலால் மறைக்கப்பட்ட இன்னாரு நட்சத்திரம்.
பெரிதாக சர்வதேச மட்டத்தில் ஆடமுடியாமல் போன இவர் சர்வதேச ஒருநாள்ப் போட்டிகளில் விளையாடிய போட்டிகளில் சிறப்பாக பந்துவீசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


11. மொகமட் அஷ்ரபுல்-
உருவத்தில் கட்டையான சின்னப்பையன் ஒருவன் பங்களாதேஷ் அணியில் விளையாடி எதிரணிகளை துவம்சம் செய்கிறான் என பலரும் கதைத்தார்கள்.
உருவத்தில் சச்சினைப் பொல சிறிது குள்ளமும், சில அடிகளை அடிக்கும் போது சச்சினின் சாயல் தெரிவதாலும், சிறிய வயதில் இவ்வாறு அழகாக ஆடுவதாலும் பங்களாதேஷ் அணிக்குக் கிடைத்த அரவிந்த டீ சில்வா என நினைத்துக் கொண்டேன்.
(உலகில் பிறந்த சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக பலரும் ஏற்குக் கொள்கிறார்கள். அதுபற்றி சொல்ல முற்பட்டால் தனியாக ஒருபதிவே இடவேண்டி வரும்.)
ஆரம்ப காலத்தில் அடித்த ஓட்டங்களும், அவற்றைப் பெற்ற விதமும் என்னை அஷ்ரபுல்லின் இரசிகனாகவே மாற்றிவிட்டிருந்தன.
ஆனால் வழமையைப் போல நான் விரும்பும் புதிய வீரர்கள் காலை வாருவது போல அஷ்ரபுல் உம் என் காலை வாரிவிட்டார்.
அணித்தலைமை கிடைத்த பின்னர் இவரது துடுப்பாட்டம் மோசமாக மழுங்கத் தொடங்கியது.
அத்தோடு மிகச்சிறிய வயதில் மைதானத்தில் பல சிரேஷ்ர வீரர்களோடு மோதுவதும் எனக்கு வெறுப்பைத் தந்தது.
இப்போதெல்லாம் அஷ்ரபுல் துடுப்பாட்டத்தில் ஓட்டங்கள் குவிப்பது நான் புத்தகம் எடுத்துப் படிப்பது போல அரிதாகிவிட்டது.
இப்போது துடுப்பாட்டத்தை விட பந்துவீச்சில் மனிதர் ஏதோ செய்கிறார்.
அற்புதமான ஆடும்நுட்பம் (technic என்பதை இவ்வாறு மாற்றுகிறேன். தமிழ் சரியாக உள்ளதா) கொண்ட ஒருவரான இவருக்கும் பிரச்சினை temperament தான்...
பொறுமை குறைந்தவரான இவர் இரண்டு, மூன்று பந்துகளில் தொடர்ந்து ஓட்டங்களைப் பெறமுடியாவிட்டால் அடுத்த பந்தில் முட்டாள்தனமாக அடித்தெரிவொன்றை (shot selection) மேற்கொண்டு ஆட்டமிழந்துவிடுவார்.
இப்போதெல்லாம் இவரது இரசிகர் என்ற அளவில் இல்லாவிட்டாலும் தனது திறமையை வீணாக்குகிறார் எனக் கவலைப்படுவதுண்டு.


12. மார்லன் சாமுவேல்ஸ்-
என்னை மிகவிரைவாக கவர்ந்த கிறிக்கெற் வீரர்களில் ஒருவர்.
மத்தியவரிசையில் அடித்து ஆடக்கூடிய இவர், சுழற்பந்துவீச்சாளரும் ஆவார்.
போட்டிகளை அணிக்காக வென்று கொடுக்கக் கூடிய திறமை வாய்ந்தவர்.
இறுக அடித்தாடும் துடுப்பாட்ட வீரரான இவர் மேற்கிந்தியத் தீவுகள் கிறிக்கெற் அணியில் ஒரு கலக்கக் கலக்குவார் என்று எதிர்பார்த்தால் மனிதர் எனக்கு ஆப்படித்துவிட்டார்.
ஆட்டநிர்ணய குற்றத்தல் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
ஒழுங்காக இருந்திருந்தால் சிறந்த வீரராக வந்திருப்பார் என்று நம்புகிறேன்.

ஆனால் இவர்கள் எல்லோரையும் விட முக்கியமானவர்,
13. கனகலிங்கம் கோபிகிருஷ்ணா.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் படித்த இவர் இலங்கை அணிக்குத் தலைமை தாங்குவார் என பரவலான பேச்சுக்கள் அடிபட்டன.
சிறந்த சுழற்பந்து வீச்சாளரான இவர் மணிக்கட்டுச் சுழற்பந்தை அநாயசமாக வீசக்கூடியவர், அத்தோடு ஓவ் ஸ்பின்னையும் அட்டகாசமாக வீசக் கூடியவர். சிறந்த கிறிக்கெற் மூளை உடையவரான இவர் பந்துகளின் வேகங்களை மாற்றி, அவற்றின் உயரங்கயும் மாற்றி துடுப்பாட்ட வீரர்களை குழப்புவதில் வல்லவர்.
அத்தோடு சிறந்த மத்தியவரிசை துடுப்பாட் வீரரான இவர் அணியின் தேவைக்கேற்றவாறு நிதானித்து ஆடக்கூடியவர்.
இலக்குகள் ஒருபுறத்தில் சரிந்தால் மறுபுறத்தில் பொறுமையாகவும், மற்றைய வேளைகளில் அடித்தும் ஆடக் கூடிய இவர் பலம் பொருந்திய துடுப்பாட்ட வீரராக கருதப்படுகிறார்.
சிறிது பருத்த (சிறிதா? எண்டு நக்கலா சிரிக்கப்படாது. அது அப்ப...) உருவமானவர் என்றாலும் 30 யார் கோட்டுக்குள் கவர், எக்ஸ்ரா கவர் திசைகளில் அநாயசமாக பாய்ந்து பிடிக்கக் கூடியவர், அத்தோடு துடுப்பாட்ட வீரருக்கு பக்கத்தில் நிற்கும் சிலி மிட் ஓவ், சிலி மிட் ஓன் களத்தடுப்பு நிலையில் அருமையான பிடிகளை எடுக்கக் கூடியவர்.
எனினும் அண்மைக்காலத்தில் கிறிக்கெற் விளையாடாமல் மனிதர் வீங்கி வெடிக்கும் நிலையில் காணப்படுவதாக புலனாய்வுத் தகவல்கள் சொல்கின்றன.
எனினும் இவர் கிறிக்கெற்றிலிருந்து ஒதுங்கி இருப்பதால் இலங்கை கிறிக்கெற் அணி சிறந்ததொரு சகலதுறை வீரரை இழந்திருப்பதாக நண்பர் குமார் சங்கக்கார ஒருசில வாரங்களுக்கு முன்னர் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.
(100% நகைச்சுவையே. 13 ஆவதாக பெயரிட்ட நபரை விட மற்றவர்கள் எல்லோரும் உண்மையான வீரர்களே.
13 ஆவதாக சிறிது நகைச்சுவைக்காக சேர்த்துக் கொண்டேன். ஆகவே நகைச்சுவையை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு எனக்கு ஓட்டோ அனுப்பாமல் விடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.)

அப்படியே வீணாய்ப் போன கிறிக்கெற் வீரர்கள் பட்டியலை நிறைவுசெய்யலாம் என்று நம்புகிறேன்.
இவர்கள் யாவரும் எனது மனதில் தங்கள் திறமையை வீணாக்குபவர்கள் என முத்திரை குத்தப்பட்டவர்களே.
வேறு பலரை நான் தவறவிட்டிருக்கக் கூடும்.

யாழ்தேவி வாக்குப்பட்டையிலும், தமிழிஷ் வாக்குப்பட்டையிலும் வாக்களிக்கலாம்...
பின்னூட்டத்தில் என்னைக் கும்மலாம்...

கிறிக்கெற் என்பது நம்மவர்களுக்கெல்லாம் தேசிய விளையாட்டாக மாறிப் போனாலும் கிறிக்கெற் பற்றி பதிவிட்டால் அதை எதிர்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் இந்த விமர்சனங்களை எல்லாம் கணக்கில் எடுப்பவனா நான்?
யார் என்ன சொன்னாலும் விடமாட்டேன் என்று தொடர்ந்து நகைச்சுவைப் பதிவுகளைத் தானே எழுதுகிறேன். என்னால முடிஞ்சத தானே எழுத முடியும்?

சரி... விடயத்துக்கு வருவோம்...
திறமை இருந்தும் சர்வதேச ரீதியில் பிரகாசிக்காத அல்லது பிரகாசிக்க முடியாமல் போன வீரர்களைப் பற்றி ஓர் பதிவிட வேண்டும் என்று நிறைய நாளாக ஆசை இருந்தது.
இதோ...
பின்னூட்டத்தில் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

இலங்கையில் இருந்து ஆரம்பிப்போம்... (ஓரளவு தற்போதைய கால வீரர்களைத் தான் கணக்கிலெடுக்கிறேன்)

1. சாமர கப்புகெதர
வலதுகைத் துடுப்பாட்ட வீரரான இவரது ஆட்டத் தொழில்நுட்டபத் திறன் (technic) காரணமாக சிறுவயதிலேயே இலங்கை அணிக்குத் தெரிவு செய்யப்பட்டார். ஆரம்பத்தில் அவுஸ்ரேலிய மண்ணில் பிரெட் லீயின் பந்தை துவம்சம் செய்து இவர் ஆடிய விதத்தைப் பார்த்து இவரை இலங்கையின் எதிர்காலம் என எண்ணியவர்கள் பலர். எனினும் இதுவரை தன்னை நிரூபிக்கவில்லை.
இவருக்கு ரெக்னிக் எனப்படும் ஆட்ட நுணுக்கத்தில் எந்த பிரச்சினையும் இல்லை.
இவர் technically sound என பலர் அழைக்கிறார்கள். எனினும் ஏதோ காரணங்களுக்காக தொடர்ந்தும் சறுக்கி வருகிறார்.
எனினும் இன்னும் சிறுவயது என்பதால் மீண்டு வருவார் என நம்புவோம்.


2. இந்திக்க டீ சரம்
வலதுகைத் துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான இவர் இலங்கை அணியில் இடம்பெறும் நோக்கில் சிறிது காலத்திற்கு முன்னர் விக்கெட் காப்புப் பணியை விட்டுவிட்டடு தனியே துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
அடித்தாடும் வீரரான இவர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கு சிறந்தவர் எனக் கருதப்படுகிறார்.
எனினும் அரசியல் காரணங்களாலோ என்னவோ தொடர்நதம் அணியில் இடம் வழங்க மறுக்கப்படுகிறார்.
இந்திய இலங்கை அணிகளுக்கிடையில் இலங்கையில் நடந்த இருபதுக்கு 20 போட்டியில் விளையாடும் பதினொருவரில் இடம்பெற்றிருந்த போதிலும் டில்ஷானால் கடை மத்தியநிலை (ஆறாம் இடத்தில் என்று நினைக்கிறேன்) வீரராக மாற்றப்பட்டு துடுப்பெடுத்தாட வாய்ப்பு கிடைக்காமல் வெறும் களத்தடுப்பாளராக விளையாடினார்.
இம்முறை இடம்பெற்ற இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தில் பதினொருவரி்ல் இடம் கிடைக்கவில்லை. சாமர சில்வா தொடர்ந்து பிரகாசிக்காமல் விட்ட போதிலும் இவரை விளையாட அனுமதிக்கவில்லை.
இவரது தந்தை ஓர் கட்சியின் தீவிர ஆதரவாளர் என்பதால் தான் இந்த நிலை என அறிய முடிந்தது.
இப்போது 36 வயதாவதால் இவரை இனி அணியில் சேர்ப்பார்களா தெரியவில்லை.


3. மாலிங்க பண்டார
கிறிக்கெற் விளையாடுவதில் இரண்டாவது மிகக்கடினமான அம்சம் எனக்கருதப்படும் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளரான இவர் பல காரணங்களால் அணியில் இடம்பெறவில்லை. (முதலாவது கடின அம்சமாக விக்கெட் காப்புப்பணி கருதப்படுகிறது)
அதிகளவான வித்தியாசமான பந்துவீச்சு வகைகள் (variation) இல்லாததால் முன்னரே ஓரளவு கணிக்கப்படக் கூடியவராக (predictable) மாறியதும் ஓர் காரணம். (Wrist spinner's some variations - google, flipper, zooter)
அத்தோடு பந்தை அதிகளவு திருப்பும் தன்மையும் இவரிடம் இல்லை.
ஆனால் தற்போதைய காலகட்டத்தில் கிறிக்கெற் என்பது துடுப்பாட்ட வீரர்களது விளையாட்டாகிவிட்டதால் ஓட்டங்களை மட்டுப் படுத்துவதே சுழற்பந்து வீச்சாளர்களது பிரதான பணியெனக் கருதப்படும் நிலையில் இவர் மட்டுப்படுத்தப்பட்ட பந்துப் பரிமாற்ற போட்டிகளுக்கு சிறந்தவர் என்ற போதிலும் முரளி, மென்டிஸ், ஹேரத் ஆகியோர் இவரை விட முன்னிலையில் நிற்பதால் வாய்ப்புக் கிடைக்காது தவித்து வருகிறார்.


இனி இந்தியா

1. ஸ்ரீசாந்
சிலர் நான் நகைச்சுவை செய்கிறேன் எனக் கருதலாம்.
ஆனால் உண்மையில் ஸ்ரீசாந் அற்புதமான வேகப்பந்து வீச்சாளர்.
Seam position எனப்படும் பந்தின் நூல்ப்பகுதியின் அமைவு என்பது வேகப்பந்து வீச்சாளருக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. கவனித்தப் பார்த்தீர்களானால் இவரது Seam அமைவு சிறப்பாக அமையும். (அதாவது பந்து ஆடுகளத்தை அடிக்கும் போது ஓரளவுக்கு நேராக அடிக்கும். அதிகளவுக்கு சுழராது. Scramble seam எனப்படும் ஓர் வகை இருந்தாலும் இது ஒரு வகை variation ஆகவே கருதப்படுகிறது.)
எனினும் இவரது திரும்பும் பந்துகள் (Swing) துடுப்பாட்ட வீரருக்கு நன்றாக திரும்புவதால் இவரது திரும்பலை அடையாளம் காணமுடிவதாக அலன் டொனால்ட் அண்மையில் தெரிவித்திருந்தார். சிறிய மாற்றமொன்றை செய்தால் இதை நிவர்த்திக்க முடியும். (வேகப்பந்து வீச்சின் இரகசியமாக கருதப்படுவது பந்து பிந்தி திரும்புதல், அதாவது late swing)
ஆனால் இதைவிட இவரது தனிப்பட்ட நடத்தைகள் தான் இவரை அதிகளிவில் பாதித்தன.
எளிதாக உணர்ச்சி வசப்படும் இவரது குணத்தால் தன் கட்டுப்பாட்டை மீறுவதால் இவரது பந்துவீச்சு பாதிக்கப்பட்டுள்ளது.
(அன்ட்ரூ நெல்லின் பந்தை நான்கு ஓட்டங்களுக்கு அடித்து விட்டு ஆடுகளத்தில் துடுப்பைச் சுற்றிச் சுற்றி இவர் ஆடிய ஆட்டம் இதற்கு ஓர் சிறந்த உதாரணம்.)


2. முனாப் பட்டேல்
தனிப்பட்ட ரீதியில் எனக்கு முனாப் பட்டேலை மிகப் பிடிக்கும்.
கவனித்துப் பார்த்தீர்களால் இவரது பந்துவீச்சுப் பாணியும் கிளெய்ன் மக்ராத்தின் பந்துவீச்சுப் பாணியும் கிட்டத்தட்ட ஒன்று போல் இருக்கும்.
அருமையான line and length இல் பந்து வீசக் கூடிய திறமையுள்ளவரான இவர் விக்கெட் எடுப்பதற்கு தேவையான திரும்பல் திறனையும் கொண்டவர்.
முதலாவது மாற்ற பந்துவீச்சாளராக (first change bowler) பந்துவீசுவது என்பதொன்றும் இலகுவான விடயமல்ல.
பந்து ஆரம்ப நிலையைப் போல பெரிதாகக் திரும்பாது. (less swing)
பெரிதான Seam movement உம் இருக்காது.
ஆரம்பப் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளைக் கைப்பற்றாவிட்டால் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவது என்றும், ஆரம்பப் பந்துவீச்சாளர்கள் ஓட்டங்களை வாரி வழங்கினால் ஓட்டங்களை கட்டுப்படுத்துவது என்றும் இவர்களது வேலை மாறிக் கொண்டேயிருக்கும்.
முதலாவது பந்துவீச்சாளர்களாக இருந்து ஆரம்பப் பந்துவீச்சாளர்களாக மாறிய பின்ரே உமர் குல், மிற்செல் ஜோன்சன் ஆகியோர் நிறைய இலக்குகளை கைப்பற்றத் தொடங்கினர்.
இந்தியாவின் சிறந்த முதலாம் மாற்றப் பந்துவீச்சாளர் என ஜவகல் ஸ்ரீநாத் இனால் புகழப்பட்டவர்.

எனினும் காயங்களால் நிறையவே பாதிக்கப்பட்டவர். காயத்தால் பந்துவீச்சு வேகமும் சற்றுக் குறைந்தது.
இப்போது தான் அணியில் மீண்டும் இடம்பெற ஆரம்பித்திருக்கிறார். பார்ப்போம்....


3. ரோகித் சர்மா
முதலாவது ஐ.பி.எல் இன் பின்னர் அடுத்த ரெண்டுல்கர் எனக் கருதப்பட்டவர்.
எனினும் இவர் இருபதுக்கு 20 போட்டிகளையே பெரிதும் விரும்புகிறார்.
ஒருநாள் போட்டிகளில் பெரிதாக சோபிப்பதில்லை.
இவரொன்றும் இறுக அடித்தாடும் துடுப்பாட்ட வீரர் (hard hitting batsman) அல்ல.
இவரைப் போன்ற ஆட்டமுறையைக் கொண்டவர்களை classy batsman என அழைப்பர். (மகேல, ரெண்டுல்கர், மார்க் வோ, ட்ராவிட், சமரவீர, பொன்ரிங் போன்ற பிரபலங்களை நினைத்துக் கொள்ளுங்கள்.)
இவரிடம் நல்ல technic இருந்த பொதிலும் இருபதுக்கு 20 போட்டிகளைத் தவிர மற்றைய போட்டிகளில் பெரிதாக சோபிக்காமல் போனதற்கு இவரின் மனப்பாங்கை (temperament) ஐ இவர் சரியாக கட்டுப்படுத்தாமை தான் காரணம் என கருதப்படுகிறது.


4. ரொபின் உத்தப்பா
தனது முதல் போட்டியில் இங்கிலாந்துக்கெதிராக 86 ஓட்டங்களை எடுத்து இந்திய துடுப்பாட்ட வீரரொருவர் தனது முதல் போட்டியில் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்டங்களில் எடுத்த அதிக ஓட்டங்கள் என்ற சாதனையை தன்வசம் வைத்திருக்கிறார்.
அத்தோடு இந்திய அணி சார்பாக சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் அரைச்சதம் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையையும் தன்வசம் வைத்திருக்கிறார்.
ஓரளவு வழமையான அடிகள் மூலம் (orthodox shots) மூலம் ஓட்டங்களைக் குவிக்கும் திறனுள்ள இவருக்கும் temperament பிரச்சினை இருப்பதால் இதுவரை சர்வதேச ரீதியில் பெரிதாக சாதிக்க முடியவில்லை.
இன்னும் வயது இருப்பதாலும், 2011ம் ஆண்டு உலகக்கிண்ணத்தின் பின்னர் பல சிரேஷ்ர வீரர்கள் ஓய்வுபெறுவார்கள் என்பதாலும் சாதிக்க வாய்ப்புண்டு.


அப்படியே கிறிக்கெற் பற்றி பெரிதாக தெரியாதவர்களுக்காக,
temperament என நான் குறிப்பிட்டது, ஒரு துடுப்பாட்ட வீரர் துடுப்பாட்ட வீரர் ஒருபுறத்தில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போது விக்கெட்டுக்கள் மறுபுறத்தில் சரிந்தாலோ அல்லது பந்துவீச்சாளர் அருமையாக பந்து வீசினாலோ அல்லது பந்து வீச்சாளர் வாய்ச்சண்டைகளில் ஈடுபட்டாலோ அல்லது கொஞ்சப் பந்துகளில் தொடர்ந்து ஓட்டங்கள் பெற முடியாமல் போனாலோ உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக இருப்பது ஆகும்.
அதே போல் பந்துவீச்சாளர்களுக்கும், தொடர்ந்து பந்துகள் எல்லைக் கோடுகளுக்கு அடிக்கப்பட்டாலோ அல்லது துடுப்பாட்ட வீரர் வாய்ச்சண்டைகளில் ஈடுபட்டாலோ அல்லது பிடிகள் தவறவிடப்பட்டாலோ எரிச்சலடையாமல் பொறுமையைக் காத்து தொடர்ந்து சரியாக பந்து வீசுதல்.

பகுதி இரண்டு தொடரும்... (பாப்பம்... பாப்பம்...)
(பகுதி இரண்டில் பாகிஸ்தான் வீரர்களும், ஏனைய வீரர்களும்.)