க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

மற்றவர்களை எரிச்சற் படுத்துதல் அல்லது கொச்சை மொழியில் கடுப்பாக்குதல் என்பது பலருக்கு மிகவும் பிடித்த செயற்பாடுகளில் ஒன்று...
அப்படியான நண்பர்களுக்காக உங்கள் அன்பு நண்பன் க.கோபியின் அழகு அறிவுரைகள்...


10. சிரிப்பு...
சிரிப்பு என்பது சாதாரண விடயமல்ல. சிரிப்பின் மூலம் இணர்டு பிரதான விடயங்களை செய்யலாம். ஒன்று எல்லாவற்றுக்கும் சிரிப்பது. மற்றையது அவர் சொல்லும் எல்லா நகைச்சுவைகளைக் கேட்ட பின்பும் பேசாமல் வாயைத் திறக்காமல் இருப்பது.
உதாரணமாக 'எனது செல்லப்பிராணி இறந்துவிட்டது' என்று ஒருவர் சொல்லும் போது உடனே ஹா ஹா ஹா என்று சத்தமாகச் சிரியுங்கள்... மனிதர் குழம்பிவிடுவார்.
அதேவேளை மிகக் கஷ்ரப்பட்டு நல்ல நகைச்சவையை சொன்ன பின்னர் அமைதியாக இருங்கள்...

9. இலக்கணம்...
நீங்கள் அலுவலகத்தில் வேலைசெய்பவராக இருந்தால் உங்கள் மேலதிகாரியையும், உங்கள் சகதொழிலாளர்களையும் எரிச்சல்படுத்த மிகச்சிறந்த வழி, இலக்கணப்பிழையாக இருப்பது. தான். எல்லாவற்றையும் பிழையாக எழுதுதல் தான் அதன் வழி. 'ஆது ஆவர்களை பையங்கைரமாக கூழப்பூம். ஆது ஆவர்களை பாடு பாயங்காரமாக ஏரிச்சால் பாடுத்தும். எற்பாடுகீன்ற கூழப்பாத்தீல் ஊங்காள் பாக்கமே ஏட்டீப் பார்க்காமட்டர்கள்'


8. இணையம்...
சகாக்களை எரிச்சல்படுத்த இன்னொரு வழி, ஊரிலுள்ள வெற்று வேட்டு மின்னஞ்சல்களையெல்லாம் அவர்களுக்கு முன்னகர்த்துங்கள். அதுவும் முக்கியமாக காதலிக்கும் நண்பர்களுக்கு அனுப்புங்கள். காதலியின் மின்னஞ்சல் வரும் என ஒவ்வொருமுறையும் மின்னஞ்சலைப் பார்க்கும் போது உங்கள் பிரயோசனமற்ற மின்னஞ்சல்களைப் பார்த்து கொலைவெறியுடன் உங்களைத் தேடிவருவார்கள்.


7. பிறகென்ன நடந்தது?
அலுப்புத் தரக்கூடிய தமிழ்வார்த்தைகளில் இதுவும் ஒன்று.
யாராவது ஏதாவது சொல்லும் போது அமைதியாக இருந்துவிட்டு முகத்தில் உணர்ச்சிகள் எவற்றையும் காட்டாமல் 'பிறகென்ன நடந்தது?' என்று கேளுங்கள். அவர்கள் உங்களை கத்தி எடுத்து குற்றும் வரை அல்லது துப்பாக்கி எடுத்து சுடும் வரை 'பிறகென்ன நடந்தது?' என்று கேட்டுக்கொண்டே இருங்கள்.
(குற்றிய பிறகு அல்லது சுட்ட பிறகு உங்களால் கேட்க முடியாது என்பது சோகமான விடயம்.)


6. நேரடி கண்பார்வையை தவிருங்கள்...
இது கேட்பதற்க சிறியவிடயமாக இருக்கும். ஆனால் மிக சக்திவாய்ந்தது. யாராவது உங்களுடன் கதைக்கும் போது அவர்களது கண்களைப் பார்க்காதீர்கள். அவர்களது நெற்றியைப் பார்த்துக் கதையுங்கள். ஒன்றில் தாங்கள் கதைப்பது எதிலும் ஏதும் பிழையிருக்கிறதோ என்று யோசிப்பார்கள் அல்லது தலையில் ஏதும் இருக்கிறதா என தடவிப் பார்ப்பார்கள்.


5. நகைச்சுவை சொல்லுங்கள்...
ஆம்... நகைச்சுவையை சொல்லுங்கள். மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிகப் பெரிய நகைச்சுவையை சொல்லுங்கள். முடிவை மறந்துவிட்டு தலையைச் சொறியுங்கள்.
பக்கத்தில் கிடைக்கும் கட்டையை எடுத்து உங்களைத் தாக்காவிட்டால் அந்த நபரில் ஏதோ பிழையிருக்கிறது என்று அர்த்தம்.


4. சுத்தமாக இருங்கள்...
படுபயங்கர சுத்தமாக இருங்கள். ஆம். மற்றவர்கள் தாங்கள் அசுத்தமாக இருக்கிறோம் என நினைத்தால் அவர்களுக்கு கஷ்ரமாக இருக்கும். எப்போதும் கைகளில் லைசோல், டெற்றோல், நறுமண சிவிறிகள் போன்றவற்றோடு திரியுங்கள்.
அவர்கள் அலுவலகத்தில் தொடும் ஒவ்வொரு பகுதியையும் லைசோல். டெற்றோல் போட்டு கழுவுங்கள்.
அவர்கள் உங்களுடன் கைகுலுக்கினால் உடனே கையை மருந்து போட்டுக் கழுவுங்கள். அத்தோடு நறுமண சிவிறியை கையில் உடனே தெளியுங்கள்.
முகத்தைச் சுழித்து ஓர் பார்வை பார்த்து முறைக்காவிட்டால் வந்து சொல்லுங்கள்.


3. பாடல் பாடுங்கள்...
ஆம். மிகப்பிரபலமான, மென்மையான பாடலை மிகச்சத்தமாக திரும்பத் திரும்ப பாடிக் கொண்டே இருங்கள். முக்கியமாக உங்களுக்கு கிட்ட இருக்கும் நபர்களுக்கு பிடித்த பாடலாக இருந்தால் மிக்க நல்லது.
ஒரு கட்டத்திற்கு மேல் 'நிறுத்துடா' என்றோ 'Stop it' என்றோ கத்தாவிட்டால் அவருக்கு உங்கள் பாடல் திறமையால் காது கேட்காமல் போய்விட்டது என்று அர்த்தம்.


2. எனக்குத் தெரியும்...
யார் என்ன சொன்னாலும் 'எனக்குத் தெரியும்..' என்று சொல்லுங்கள். சொல்வது உங்கள் மேலதிகாரியாக இருந்தாலும் முகத்தில் அறைந்தது போல் 'எனக்குத் தெரியும்' என்று சொல்லுங்கள். மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். முயற்சித்துப் பாருங்கள்...


1. எல்லாவற்றிலும் சிறந்தது சொல்கிறேன்...
இவை எல்லாவற்றையும் விட மிக சக்தி வாய்ந்தது இப்படியான மொக்கைத்தனமான அறிவுரைகள் கொண்ட இரண்டு பதிவுகள் இட்டுப் பாருங்கள்... அவனவன் வந்து கும்மிற்றுப் போவான்...
(ஆனா எனக்கு கும்மக் கூடாது... நான் பச்சப் புள்ள... அகில உலக விரல் சூப்பிகள் சங்கத்தின் ஆயுட்காலத் தலைவர்... தூரத்தில இருந்து பாக்கத் தான் பயங்கரமா இருப்பன்... கிட்ட வந்தீங்க எண்டா மயங்கி விழுந்திடுவீங்க... சீ.. சீ... கிட்ட வந்தீங்க எண்டா 'கெக்க புக்க கெக்க புக்க' எண்டு சிரிப்பீங்க...)

மறத்தமிழர்கள் ஏன் தீவிரவாதிகளாக மாறமுடியாது என்றும், மறத்தமிழர்களால் ஏன் ஒரு விமானத்தைக் கடத்த முடியாது என்றும் தெரியுமா?


(இது முற்றுமுழுதான நகைச்சுவைக்காக மட்டுமே. எந்தவித அரசியல், இன கேவலப்படுத்தலும் கிடையாது)


1. நாம் எப்போதுமே பிந்தித் தான் செயற்படுவோம். அதனால் கடத்த நினைத்த விமானத்தை அல்ல அதற்கு பிறகு சென்ற 10 விமானங்களையும் தவறவிட்டுவிடுவோம்.


2. எப்போதுமே நாம் சத்தமாகவே கதைப்போம். அதனால் விமானநிலையத்திலேயே நாம் கடத்தப்போகும் விடயம் தெரியவந்துவிடும்.


3. விமானத்தில் இருக்கும் இலவச உணவு, சிற்றுண்டிகளைப் பார்த்ததும் நாம் ஏன் விமானத்துக்குள் வந்தோம் என்பதை மறந்து இலவசங்களை ஒருபிடி பிடிப்போம்.


4. எமக்கு கையை நீட்டி, அசைத்து கதைத்தே பழக்கம். எனவே கையில் வைத்திருக்கும் ஆயுதங்களை கீழே தவறவிட்டுவிடுவோம்.


5. எங்களுக்கு விமானத்தில் பறப்பதென்றால் ஓர் ஆசை. விமானத்தில் ஏறியவுடனேயே நாம் விமானத்தை கடத்தும் திட்டத்தை கைவிட்டு அப்படீயே விமானத்தில் பறந்து எங்கேயாவது வெளிநாட்டுக்கு போய்விடுவோம்.


6. விமானத்துக்குள் விவாதங்கள் செய்து சண்டை ஒன்றை நமக்குள்ளேயே தொடங்கி நம்மை நாமே காட்டிக் கொடுப்போம்.


7. எங்களால் இரகசியங்களை காப்பாற்ற முடியாது.
விமானம் கடத்த 1 வாரத்திற்கு மன்னரே ஊரெல்லாம் அதை எப்படியாவத பரப்பி சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வோம்.


8. எங்கள் விமானக்கடத்தல் திட்டத்தை கிறிக்கெற் போட்டிகளைப் பார்க்கும் ஆவலால் தள்ளிப்போட்டுக் கொண்டெ செல்வோம்.


9. நாம் பணயக்கைதியாகப் பிடித்த ஒருவரோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள அடிபட்டு ஒருவர் மேல் ஒருவர் விழுந்து நம்மை நாமே காயப்படுத்திக் கொள்வோம்.

ஹா ஹா...
குழம்பாதீர்கள்...
பில்கேட்சின் மகள் தாள் இவர்....
அன்பான வேண்டுகோள்: வாயிலிருந்த வரும் நீர்வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தவும்...

************************************************************************************************************

குடும்பமே இப்படித் தானா...

நம்ம கந்தன்ர அப்பா தன்ர வீட்டுக்கு புதுசா ஒரு ரோபோ வாங்கிற்று வந்தார்.
அந்த ரோபோ மற்றவர்கள் பொய் சொன்னால் அதை கண்டுபிடிக்கும் திறமை வாய்ந்தது. மற்றவர்கள் பொய் சொன்னால் அவர்களின் கன்னத்தில் ஓங்கி அறையும் வகையில் அதை வடிவமைத்திருந்தார்கள். ('சப்' எண்டு அறையிறது எண்டுவாங்க? அதே தான்)

கந்தன் ஒரு நாள் பாடசாலையை விட்டு பிந்தி வந்தான்.
அப்பா 'எங்க போனனீ இவளவு நேரமும்?' என்று கேட்க 'விசேட வகுப்பு இருந்தது அப்பா.' என்றான் கந்தன். உடனே அவனது கன்னத்தில் ரோபோ அறைந்தது ஓங்கி. அவன் உடனே 'மன்னிச்சுக் கொள்ளுங்கோ அப்பா. படம் பாக்கத் தான் போனன்' என்றான்.
'என்ன படம் பாக்கப் போனாய்?' அதட்டலுடன் கேட்டார் அப்பா. 'சேரனின் பொக்கிஷம் பாக்கப் போனன் அப்பா' என்றான் கந்தன். உடனே இன்னொரு அறை விழுந்தது. கந்தன் அழுதவாறே 'மன்னிச்சுக் கொள்ளுங்கோ அப்பா. நான் வயது வந்தவர்களுக்கான படம் ஒன்று தான் பாக்கப் போனன்' என்றான்.
உடனே அப்பா 'உன்ன நினச்சு வெக்கப்படுறன். எனக்கு சின்ன வயசில இப்பிடியான படங்களென்டா வெறுப்பு. பாத்ததே இல்ல தெரியுமா?' என்றார். உடனே கந்தனின் அப்பாவுக்கு கன்னத்தில் அறை விழுந்தது.
இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கந்தனின் அம்மா 'எல்லாத்துக்கும் மேல அவன் உங்கட மகன் தானே? உங்கள் போல தானே இருப்பான்?' என்றார்.
உடனே கந்தனின் அம்மாவுக்கு விழுந்தது அறை.

பிழை எங்கயெல்லாம் இருக்கு பாத்தீங்களா??? ஹி ஹி ஹி...
(யாராவது என்ன சொல்ல வாறீங்க எண்டு அப்பாவித் தனமா கேட்டா கொலைசெய்யப்படுவர் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்.)


*************************************************************************************************

குறிப்பு: யாழ்தேவியின் இந்தவார நட்சத்திரமாக தெரிவுசெய்யப்பட்டிருக்கிறேன்...
என்னை தெரிவுசெய்த யாழ்தேவி குழுவினருக்கு எனது நன்றிகள்....
இலங்கை வலைப்பதிவர்களின் எழுத்துக்களை ஊக்குவிக்கும் பணியை யாழ்தேவி தொடர்ந்து செய்ய எனது வாழ்த்துக்கள்...

*****************************************************

குறிப்பு இரண்டு...: உங்களை ஏமாற்றியதாக உணர்கிறேன்...

அதிலிருக்கும் பெண்மணி பில்கேட்சின் மகள் இல்லை என மதுவதனன் அண்ணா தெரிவித்திருக்கிறார். இது வேறொரு நடிகையாம்.

தவறுக்கு வருந்துவதோடு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்...

இந்தப் பதிவை அழிக்க முடியாமைக்கு மீண்டும் மன்னிப்புக் கோருகிறேன்...

பதிவிற்கு முன்பு நான் சில விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்...
நான் நாத்திகக் கருத்துக்களைக் கொண்ட ஆத்திகன்.
எமக்கு மேலான சக்தியை நம்புகின்ற போதிலும் மதங்களையும், வழிபாடுகளையும் தேவையில்லையென்று கருதுகின்றவன்.

எனது அக்காவிற்கு தரம் 2 இல் படிக்கின்ற ஓர் மகள் இருக்கின்றாள். கொழும்பில் இருக்கின்ற பிரபலமான மகளிர் பாடசாலையில் கல்விகற்கிறாள்.
சிலநாட்களுக்கு முன்னர் அவளின் வகுப்பாசிரியை அவளுக்கு அம்மா பகவான் எனப்படுகின்ற ஒருவரின் படத்தை கொடுத்து அவளிடம் வைத்திருக்குமாறு கூறினாராம்.
8 வயதான அந்தப் பிஞ்சு மனதில் ஓர் ஆசிரியை எவ்வாறு அப்படியான ஓர் மதத்திணிப்பை அல்லது போலி கடவுள்களை திணிக்கலாம் என்பது தான் எனது கேள்வி.
இது அம்மா பகவான் என்பவருக்கு எதிரான ஆக்கமல்ல. அவரை பின்பற்றுபவர்களுக்கு எதிரான ஆக்கமுமல்ல. அந்த நம்பிக்கையை மற்றவர்களிடம் திணிக்க எத்தனிப்பவர்களுக்கு எதிரானதே ஆகும்.

8 வயதில் நீங்கள் படிப்பிக்கின்ற ஒவ்வொரு விடயமும் அந்தக் குழந்தைகளின் மனதில் வாழ்க்கை முழுவதும் நிற்கப் போகிறதே?

நீங்கள் சிவபெருமானின் படத்தைக் கொடுத்துவிட்டிருந்தால் வேறுவிடயம். அந்தக் குழந்தை சைவசமயத்தை பின்பற்றுகிறது. ஆகவே அது பிழையானதல்ல.
ஆனால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படாத ஓர் விடயத்தை எவ்வாறு திணிக்கலாம்?

சில காலங்களுக்கு முன்னர் நான் இந்த அம்மா பகவான் பற்றி ஆராய்ந்த போது எனக்கு சில விடயங்கள் அறியக் கிடைத்தன.
அவரின் உண்மையான பெயர் விஜயகுமார் என்றும் அவர் இந்தியாவின் அரச காப்புறுதி நிறுவனமொன்றில் முகவராக பணிபுரிந்தார் என்றும் அங்கிருந்து பணமோசடி காரணமாக பணிநீக்கம் செய்யப்பட இன்னொரு நிறுவனத்தை தான் தொடங்கினாரென்றும் அங்கும் பணமோசடி செய்து காவல்துறையினரால் தேடப்பட பின்னர் இந்த கடவுள் வேடத்துள் நுழைந்தார் என்றும் அறிய முடிந்தது.
அத்தோடு 1990ம் ஆண்டு அல்லது அதற்கு கிட்டிய ஆண்டொன்றில் தனது ஆச்சிரமத்திற்கு வந்த இளம்பெண்களை வீட்டுக்கு அனுப்பாமல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார் என்றும் அதன்பின்னரே இப்போது இருக்கும் தங்கக் கோயிலினுள் (Golden temple) நுழைந்தார் என்றும் அறியக் கிடைத்தது.

சிலவேளை இந்தத் தகவல்கள் முழுமையாக உண்மையாக இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் அவரது இயற்பெயர் விஜயகுமார் என்பதும், அவர் காப்புறுதி நிறுவனத்தில் பணிபுரிந்தார் என்பதையும் அவரது பக்தர் ஒருவர் ஏற்றுக் கொண்டார். ஆனால் அவர் காப்புறுதி நிறுவனத்திலிருந்து தானாக விலகியதாகவும், அவர் புதிய நிறுவனம் தொடங்கியமை உண்மை என்றும் ஆனால் அங்கே பணமோசடி நடைபெறவில்லை என்றும் கூறினார்.
1990 இல் காவல்துறையினர் அவரை பெண்கள் துஷ்பிரயோகத்திற்காக கைதுசெய்ய முயன்றார்கள் என்றும் ஆனால் கைதுசெய்யவில்லை என்றும் மறுத்தார். (விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறார்கள்!)

ஆகவே நான் மேலே கூறியவை உண்மையாக இருக்கலாம்.

ஆனால் இவரைச் சுற்றி இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் போது ஓர் ஆசிரியர் உண்மை நிலை தெரியாமல் எவ்வாறு செயற்படலாம்?
ஆகக் குறைந்தது அந்தக் குழந்தையின் பெற்றோரின் அனுமதி பெறப்பட்டதா?

ஏன் இவ்வாறு ஓர் சமூகத்தை பிழையான வழியில் செலுத்த முயல்கிறீர்கள்?

இதே போன்றதொரு சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் எனக்கு நேரடியாக நடந்தது.
இலங்கையிலுள்ள ஆன்மிக நிறுவனமொன்று (ஒருவகை மிஷன்) வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களிலுள்ள மக்களுக்கு உணவு, உடைகளை அனுப்பியது. அந்த குழுவில் என் நண்பன் ஒருவன் இருந்தான். அவன் அந்தப் பணிக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டதற்கமைய அங்கே சென்றேன்.
(நான் இரண்டு நாட்கள் அதுவும் அரை நாட்கள் தான் செய்தென். அந்த நண்பர்கள் ஏராளமான நாட்களாக அந்தப் புனிதமான பணியை செய்தார்கள். என்னை விளம்பரப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.)

மக்களுக்கு தேவையான பொருட்களை வைத்து பொதிசெய்வது தான் அந்த வேலை.
அந்தப் பொதியில் நிறையப் பொருட்களை வைத்தார்கள்.
ஆனால் அத்தோடு விபூதி உட்பட சில பொருட்களையும், சில சுவாமிப் படங்களையும், சில சுலோகங்களை கொண்ட கடதாசிகளையும் வைத்தார்கள்.
நான் அந்த நண்பனிடம் கேட்டேன், 'எல்லாம் செய்கிறீர்கள் சரி. ஆனால் ஏன் அந்த விபூதி உட்பட்ட சமயப் பொருட்கள். அந்த மக்களில் வேறு சமயத்தவர்கள் இருக்கமாட்டார்களா? நாத்திகர்கள் இருக்கமாட்டார்களா? அந்த மக்களின் அவலத்தைப் பயன்படுத்தி நீங்கள் சமயத்தை அந்த மக்களிடம் திணிக்கிறீர்கள் அல்லவா? ஆங்கிலேயர்கள் எம்மை ஆண்டுவிட்டு எம்மிடம் ஆங்கிலத்தையும் அவர்களது சமயத்தையும் திணித்துவிட்டுச் சென்றதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? கிறிஸ்தவர்கள் மதமாற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை வைக்கும் நீங்கள் இதற்கு என்ன சொல்கிறீர்கள்?' என்றேன்.
நண்பர் விடை சொல்லவில்லை. அவரால் முடியாது. ஆனால் அவர் வெறும் தொண்டர் தான். தலைகள் தான் இவற்றிற்கு பதிலளிக்க வேண்டும்.

குறிப்பு: எந்த மதங்களையோ, அவர்களின் நம்பிக்கைகளையோ கேவலப்படுத்தும் நோக்குடனோ அல்லது எந்த தனிநபர்களிற்கு எதிராகவோ இந்தப் பதிவை இடவில்லை.
நண்பர்களுக்கு எதிர்க்கருத்து இருப்பின் உங்கள் பெயர்களுடன் பதிலளியுங்கள். பெயரை சொல்ல விரும்பாவிடின் பெயரில்லாமல் சொல்லுங்கள். ஆனால் இழிசொற் பிரயோகம் வேண்டாம். ஏற்கனவே இருமுறை நண்பரொருவர் இழிசொற்களை பயன்படுத்தியிருக்கிறீர்கள் முன்னைய ஆக்கங்களில்.

ஸ்லம்டோக் மில்லியனையர் திரைப்படத்தைப் பார்த்த பின்னர் பணம் உழைக்க இப்படியான போட்டிகளே போதும் என்பதை உணர்ந்த நம்ம சர்தார் ஒருவர் 1 கோடி ரூபாவைப் பரிசாகத் தரும் போட்டியில் கலந்து கொண்டார்.

அங்கே நடந்ததை பாருங்கள்...

அவருக்கான கேள்விகள்...

1) 100 வருட போர் (100 year war) எவ்வளவு காலம் நடைபெற்றது?
a) 116 வருடங்கள்.
b) 99 வருடங்கள்.
c) 100 வருடங்கள்.
d) 150 வருடங்கள்.

உடனே சர்தார், தான் இந்தக் கேள்வியை தவிர்த்துக் கொள்ள விரும்புவதாக (skip) தெரிவித்தார்.

எனவே இரண்டாவது கேள்வி,

2) 'பனாமா தொப்பிகள்' (Panama hats) எந்த நாட்டில் செய்யப்படுகின்றன?
a) பிரேசில்.
b) சிலி.
c) பனாமா.
d) ஈகுவடோர்.

தனது பல்கலைக்கழக நண்பர்களிடம் உதவி கேட்டார் சர்தார்.

3) பின்வரும் எந்த மாதத்தில் ரஷ்யர்கள் ஒக்ரோபர் புரட்சியை (October revolution) கொண்டாடுகிறார்கள்?
a) ஒக்ரோபர்.
b) செப்ரெம்பர்.
c) நவம்பர்.
d) ஜனவரி.

பார்வையாளர்களிடம் உதவி கேட்டார் சர்தார்.

4) கீழ்வருவனவற்றில் கிங் ஜோர்ஜ் VI இன் முதற்பெயர்?
a) எடேர்.
b) அல்பேட்.
c) ஜோர்ஜ்.
d) மனோஜல்.

அதிர்ஷ்ட அட்டைத் தெரிவைக் கேட்டார் சர்தார்.

5) பசுபிக் சமுத்திரத்திலுள்ள கனரி ஐலன்ட்ஸ் (Canary islands) பின்வருவனவற்றில் எந்தப் பறவையின் பெயரை அடிப்படையாகக் கொண்டது?
a) கனரி பறவை (Canary bird).
b) கங்காரு.
c) நாய்க்குட்டி.
d) எலி.

சர்தார் போட்டியிலிருந்து தானாக விலகினார்.


ஆகவே சர்தார் ஒரு வடிகட்டின முட்டாள் என நினைத்திருப்பீர்கள்.
ஆனால் விடைகளைப் பாருங்கள்...

1) 100 வருடப் போர் 116 வருடங்கள் நீடித்தது. 1337 இலிருந்து 1453 வரை இடம்பெற்றது.

2) பனாமா தொப்பிகள் ஈகுவடோரில் செய்யப்படுகின்றன.

3) ஒக்ரோபர் புரட்சி நவம்பரில் கொண்டாடப் படுகிறது.

4) ஜோர்ஜ் இன் முதற்பெயர் அல்பேட் என்பதாகும். 1936 இல் அவர் தனது பெயரை மாற்றினார்.

5) நாய்க்குட்டிகள். Insularia Canaria என்ற இலத்தீன் பெயரின் அர்த்தம் 'நாய்க்குட்டிகளின் தீவு' என்பதாகும்.

இப்போது சொல்லுங்கள்... யார் வடிகட்டின முட்டாள்? நீங்களா அல்லது சர்தாரா?
இதற்குப் பிறகு சர்தார் நகைச்சுவைகளைப் பார்த்து சிரிக்காதீ்ர்கள்...

********************************************

இப்போது உங்களை பரிசோதிக்கப் போகிறேன்...

ஓர் சர்தார் ஓர் சிறுவனை அவனது பாடசாலையிலிருந்து கடத்தினார். (இலங்கை ஆளா இருப்பாரோ? ;) )
அந்தப் பையனிடம் 'நான் உன்னைக் கடத்தியிருக்கிறேன்' என்று கூறினார். அவனை பாடசாலை மைதானத்திற்கு அழைத்துச் சென்றார்.
ஒரு கடதாசியை எடுத்து 'நான் உங்கள் மகனை கடத்தியிருக்கிறேன். உங்கள் மகன் உயிரோடு வேண்டும் என்றால் எனக்கு 50 இலட்சம் தரவேண்டும். அந்த 50 இலட்சத்தை மைதான மூலையில் உள்ள குப்பைத் தொட்டியில் இடவும். இப்படிக்கு சர்தார்' என்று எழுதினார். எழுதிய கடிதத்தை அந்த சிறுவனிடம் கொடுத்து அவனை வீட்டு அனுப்பினார்.
மறுநாள் குப்பைத் தொட்டியை திறந்து பார்த்தார். சந்தேகமில்லாமல் அங்கே 50 இலட்சம் பணம் இருந்தது. பணத்தோடு ஒரு கடிதமும் காணப்பட்டது. 'ஒரு சர்தாராக இருந்து கொண்டு இன்னொரு சர்தாருக்கு இப்படிச் செய்ய உனக்கு எப்படி மனம் வந்தது? பணத்தை எடுத்துக் கொண்டு என் மகனை விட்டுவிடு. இப்படிக்கு சர்தார்' என்று எழுதியிருந்தது.

யாராவது சிரிச்சீங்களா? இப்ப தானே சிரிக்க வேணாம் எண்டன்???

பள்ளிக் கால நினைவுகளை மீட்டும் இந்த தொடர் விளையாட்டுக்கு என்னை அழைத்த மருதமூரானுக்கும், யோ வாய்ஸ் (யோகா) அவர்களுக்கும் முதலில் எனது நன்றிகள்.

நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே யாழ்ப்பாணம் அரியாலையில் தான். அதனால் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஓர் சனசமூக நிலையத்தினர் நடத்திய முன்பள்ளியில் தான் படித்தேன்.
எனக்கு அது பற்றிய ஞாபகங்கள் பெரிதாக இல்லாவிட்டாலும் விளையாட்டுப் போட்டிகளில் பரிசுபெறும் ஓரிரண்டு புகைப்படங்கள் என்னிடம் இருக்கின்றன.
அத்தோடு ஒரு சம்பவத்தை எனது குடும்பத்தினர் அடிக்கடி சொல்வார்கள்.
சிறுவயதில் நான் கெட்டிக்காரனாம். (இப்ப மட்டும் என்னவாம்? ;))
அந்த முன்பள்ளியொன்றில் இடம்பெறவிருந்த கலைநிகழ்வு ஒன்றிற்கு ஆங்கிலப் பாடல் இசைப்பிற்கு என்னைத் தெரிவுசெய்திருந்தார்களாம். நானும் நன்றாக பயிற்சிசெய்து நன்றாக சொன்னேனாம். வீட்டில் எந்தநேரமும் அதை சொல்லிக் கொண்டிருப்பேனாம். ஆனால் திடீரெண்டு எனக்குப் பதிலாக அந்த நிகழ்ச்சியை செய்ய இன்னொரு பெண்ணை (அப்ப சிறுமி...) வேறசில சொல்ல விரும்பாத காரணிகளால் தெரிவுசெய்து பயிற்சி கொடுத்தார்களாம். இதை அறிந்த என் குடும்பத்தினர் முன்பள்ளியில் சென்று விசாரித்தார்களாம். அந்த நேரத்தில் அந்த முன்பள்ளி நிர்வாகிகள் என்னை அந்தப் பாடலை பாடச் சொல்ல நான் ஒருவரி கூட பாடவில்லையாம். அந்தப் பெண் தான் நிகழ்ச்சி செய்தாராம்.
(அந்தப் பெண் வளர்ந்து 10ஆம் ஆண்டில் ஆங்கில வகுப்பிற்கு வந்தபொழுது நடைபெறும் பரீட்சைகளில் எப்பொழுதும் அவரைவிட அதிகமாக, அனேகமாக முழுப்புள்ளி, புள்ளிகள் எடுத்து நான் வென்றது வேறு கதை. ;) )

எனது அண்ணாமார் மூவரும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலேயே படித்ததாலும், அவர்களில் இருவர் பல்கலைக்கழகம் சென்றதாலும் (மற்றவர் என்னை விட 3 வயதே மூத்தவர் ஆதலால் தரம் 4 இல் இருந்திருப்பார்) எந்தவித சந்தேககங்களும் இன்றி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் சேர்ந்தேன்.
தரம் ஒன்றிலிருந்து தரம் 11 வரை அந்தந்த வகுப்புகளுக்குரிய சிறந்த வகுப்பில் (Best class) இருந்தேன். (அதைவிட சொல்லுமளவில் எந்த சாதனையும் இல்லை. ;) )

தரம் ஒன்றிலிருந்து பொதுவாக 1ம் பிள்ளையாக வருவேன். இடப்பெயர்வுகளின் பின்னர் மீண்டும் தரம் 2 இல் படித்தேன். இராஜரட்ணம் சேர் எண்டு ஒரு ஆசிரியரிடம் தான் படித்தேன். இடதுகைப் பழக்கமுள்ளவர். நன்றாக நுள்ளுவார். (கிள்ளுதல் என்று சொல்வார்கள் பொதுவாக.)

தரம் 4 இல் எனது சொந்த அக்கா தான் எனக்கு வகுப்பாசிரியை. எல்லோரும் வாசி தானே என நினைப்பார்கள். ஆனால் வகுப்பில் எனக்குத் தான் கூடுதலாக அடிவிழும். அதுவரை முதலாம் பிள்ளையாக வந்த நான் திடீரெண்டு ஒரு தவணையில் 5ம் பிள்ளைக்கு இறங்கினேன்.

அதன் பின்னர் 4, 5 ம் தரங்களில் ரஜ்ஜனி என்ற ஆசிரியை தான் வகுப்பாசிரியை. அச்சுவேலியை சேர்ந்தவர் என நம்புகிறேன். மிகுந்த கடமையுணர்வு உள்ளவர். மேலதிக வகுப்புகள் போட்டு அதற்காக தூரப் பிரதேசத்திலிருந்து வருவார். நான் படித்த ஆசிரியர்களில் மிகுந்த கடமையுணர்வு உள்ளவர்களில் ஒருவர் உன்று அவரை நான் கூறுவேன்.
நன்றாக படிக்கும் மாணவன் என்பதால் (முதலாம் பி்ள்ளை. ஹி ஹி...) எனக்கு கண்டிப்பு அதிகம்.
பொதுவாக தரும் வினாக்கள் எல்லாவற்றையும் விரைவாக சரியாக செய்துவிடுவேன்.
ஆனால் 'ஒரு முட்டையை அவிக்க 5 நிமிடம் செலவாகும். 10 முட்டை அவிக்க எவ்வளவு நேரம் செலவாகும்?' என்ற கேள்விக்கு நான் 50 நிமிடங்கள் என எழுதியது ஞாபகம் இருக்கிறது.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் எங்கள் பாடசாலையில் 3 பேர் தான் சித்தியடைந்தார்கள்.
சிவரூபன், வைகுந்தன் என்று இருவரை அதிபர் திரு.இராசதுரை வந்து சொன்ன போது நான் சித்தியடையாமல் போயிருவேனோ என்று என் பிஞ்சு மனம் பதறியமை இப்போதும் ஞாபகம் இருக்கிறது.
அக்கா அதே பாடசாலையில் கல்வி கற்பித்துக் கொண்டிருந்தபடியால் முடிவுகள் சொன்ன உடனேயே எல்லோருக்கும் ரொபிகள், சொக்லற்றுக்கள் வழங்கியதும் ஞாபகம் இருக்கிறது.

தரம் ஆறிற்கு வந்த பின்னர் 3ம் பிள்ளையாக வந்ததற்கு அப்பா பாடசாலையில் வைத்து என் காதைத்திருகி 'ஏன் 3ம் பிள்ளை?'என கேட்டது ஞாபகம் இருக்கிறது. ஆனால் அதற்குப் பழிவாங்கும் விதமாக 8ம் தரத்தில் ஒருமுறை 24ம் பிள்ளையாக வந்தேன். 1ம் பிள்ளைக்கும் எனக்குமிடையில் ஒரு 50, 60 புள்ளிகள் தான் வித்தியாசம் இருந்தது. ஆனால் 24ம் பிள்ளை நான்.
அதன் பின்னர் தான் படிப்பில் மீண்டும் கவனம் செலுத்தினேன்.

தரம் ஆறில் கிருஷ்ணானந்தன் (கிருஷ்ணா சேர் எண்டு கூப்பிடுவம்) ஆசிரியர் ஞாபகம் இருக்கிறார். அப்போது இளைஞர். நிறைய ஆக்கத்திறன் (Creativity) உள்ள ஆசிரியர். சுற்றாடல் கற்பித்தார்.
ஜெகநாதன் சேர் ஞாபகம் இருக்கிறார் நன்றாக. சமய ஆசிரியர். மாணவர்களை அடக்குமுறையால் அடக்க மாட்டார் என்பதால் இவரின் பாடநேரத்தில் வகுப்பில் சத்தம் அதிகமாக இருக்கும்.
(தேவாரம் பாடும் கணிப்பீடுகளில் பாடவேண்டியவர் முன்னே இருந்து சும்மா வாயசைக்க அவருக்கு பின்னாலிருந்து இன்னொருவர் பாடி கணிப்பீடுகளில் புள்ளி எடுப்பார்கள். அனேகமாக நான் தான் புள்ளி பதிவேன். 'சேர், பாவமாயிருக்கு சேர் 90 போடுவம்' என்றால் ஓம் என்பார்.)
தரம் 11 இல் இவரின் வகுப்பில் ஒருவன் அதிகமாக சத்தம் போட்டு விசிலடிக்க ஜெகநாதன் ஆசிரியர் முதன்முறையாக கோபப்பட்டு அவனுக்கு தும்புத்தடியால் அடித்ததும் ஞாபகம் இருக்கிறது.

தரம் 11 இல் நாடகமும் அரங்கியலும் கற்பித்த நந்தன் சேர் ஞாபகம் இருக்கிறார். மட்டக்களப்பைச் சேர்ந்தவர். பாடங்கள் தவிர வேறு நிறைய விடயங்களைப் பற்றியும் கதைப்போம். தனது அனுபவங்களை எல்லாம் எம்மோடு பகிர்ந்து கொள்வார்.

எனக்கு எல்லோரையும் விட முன்னாள் அதிபர் திரு.க.இராஜதுரை அவர்களைப் பிடிக்கும். அருமையான சிந்தனையாளர். எங்கள் பாடசாலையை கடினமான காலப்பகுதியில் வழிநடத்தி ஏராளமான அபிவிருத்திகளைச் செய்தவர். வழமையைப் போல 'இனந்தெரியாத' ஆயுததாரியால் வீரசிங்கம் மணடப வாயிலில் சுட்டுக் கொல்லப்பட்டார். என்னைப் பாதித்த மரணங்களில் இதுவும் ஒன்று.

உயர்தரம் வந்தபின் சிவலிங்கம் ஆசிரியரின் (பெளதிகவியல்) கடமையுணர்வை மனதால் நிறைய முறை பாராட்டியிருக்கிறேன்.

கொழும்பிற்கு 2006ம் ஆண்டு முடிவில் வந்தபின் இங்கே இந்துக் கல்லூரியில் ஆங்கில ஆசிரியரையும், இரசாயனவியல் ஆசிரியை செல்வி.அன்ரனிப்பிள்ளை அவர்களின் கடமையுணர்வையும் நினைத்து பாராட்டுவேன்.

காதல் கதைகள் என்று 'பெரிதாக' எதுவும் இல்லை... எனக்குப் பொதுவாக பெண்களை பிடிப்பதி்ல்லை.
ஆனால் இப்போது ஒரு அக்கா இருக்கிறார், அந்த அக்காவை அறிமுகப்படுத்திய உறவும் இருக்கிறது.


உண்மையாக என்னால் என் உணர்வுகள் முழுவதையும் சொல்ல முடியவில்லை. உணர்வுகள் முழுவதையும் சொல்வதானால் 10 பதிவுகளாவது போடவேண்டும். என் பாடசாலையை (யா.ம.க) நான் நேசிக்கிறேன். என் பாடசாலை அனுபவங்கள் ஏராளம்...

ஆனால் பதிவு நீண்டுவிடும் என்பதால் நிறுத்திவிட்டு நண்பர்களை அழைக்கிறேன் தொடர...

ஏற்கனவே நான்கு பேரை தேவதை தொடர் விளையாட்டில் மாட்டிவிட்டதால் எனக்கு யாரைக் குறிப்பிடுவது என்று தெரியவில்லை.
இதுவரை யாரும் இந்த விளையாட்டில் ஈடுபடாதவர்கள் தொடருங்கள்...
நான் வந்து பார்க்கிறேன்...

'ஆசை இல்லா மனசு, அது ஆளில்லாத தரிசு... புல்லுப் பூண்டு கூட முளைக்காது' என்று தமிழ்ச் சினிமாப் பாடல் ஒன்று இருக்கிறது.
அப்படி எம் எல்லோரிடத்திலும் ஆசைகள் இருக்கின்றன.
பதிவர் சந்ரு என்னை இது சம்பந்தமான தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார்.
10 வரங்களைத் தரக்கூடிய தேவதை என் முன்னால் தோன்றினால் நான் என்னென்ன வரம் கேட்பேன் என்பது தான் இந்த தொடர் விளையாட்டு.
இதோ நான் கேட்க விரும்பும் வரங்கள்...

1. இலங்கையில் இனப்பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்பட வேண்டும்.
எனது தாய்நாடு என்றவகையில் இலங்கையை நான் நேசிக்கிறேன். ஆனால் இந்த நாட்டில் காணப்படும் இனப்பிரச்சினை என்னை வாட்டுவதுண்டு. அடிக்கடி நம் தலைவிதிகளை நினைத்து கவலைப் படுவேன்.
ஆகவே இது தான் என் முதல் கோரிக்கை.

2. தமிழர்களிடையே சாதி பேதம் ஒழிய வரம் கேட்பேன்.
சாதி என்ற பதமே எனக்குப் பிடிக்காத ஒன்று. எமது சமுதாயம் பிரிந்து போய் இருப்பதற்கு இனப்பிரச்சினை அளவுக்கு இதுவும் காரணம் என நம்புகிறேன். பிறப்பால் ஒருவனைத் தாழ்த்துவதையும், உயர்த்துவதையும் எதிர்க்கிறேன்.
எனவே எனது இரண்டாவது கோரிக்கை தமிழர்களிடையே சாதி பேதம் ஒழிய வேண்டும்.

3. மலையக சமுதாயம் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் நெடுங்காலம் இருந்தபடியால் இம் மக்களின் பிரச்சினைகள் எனக்கு 100 வீதம் தெரியாது. ஆனால் இம் மக்கள் எம் எல்லோரையும் விட சுமார் 50 வருடங்கள் பின்தங்கி வாழ்கிறார்கள் என்பதை மட்டும் அறிவேன்.
அவர்கள் 500 ரூபாய் பிச்சைச் சம்பளத்திற்காக போராட்டங்கள் நடத்தும் நிலைமைகள் மாற்றப்பட வேண்டும். இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்புகள் இலங்கையின் பணக்கார வர்க்கமாகவும் மாறவேண்டும்.
எனவே எனது மூன்றாவது கோரிக்கை மலையக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதாகும்.

4. சமயங்களின் பெயரால் கடவுள் என்ற முகமூடியை அணிந்து திரியும் வேடதாரிகளின் வேடங்கள் களையப்பட வேண்டும்.
தமிழர்கள் சென்ரிமென்ற் இடியட்ஸ் என்று சிறிது காலத்திற்க முன்னர் பரவலாக பதிவுகள் இடப்பட்டன. இவ்வாறான குணம் கொண்ட தமிழ் மக்களின் வாழ்க்கையில் சமயங்கள் என்ற ஒன்று பிரச்சினை கொடுக்க அதற்கு மேல் ஒரு படியால் வாழும் மனிதர்கள் பலரும் தங்களை தாங்களே கடவுள் என அறிவித்துக் கொண்டு மோசடி செய்கிறார்கள். இவ்வேடதாரிகளின் உண்மை முகம் மக்களுக்கு காட்டப்பட வேண்டும்.

இனி எனது சுயநல ஆசைகள்...
5. கமல்ஹாசனையும் ஏ.ஆர்.ரஹ்மானையும், ஷேன் வோண் ஐயும், முரளியையும் சந்திக்க வேண்டும்.
சினிமா மீது அந்தளவிற்கு விருப்பமில்லாத எனக்கு கமல்ஹாசனின் அற்புதமான நடிப்பு மட்டும் விருப்பமான ஒன்று. அதில் வியப்பொன்றும் இல்லாதமை வேறு விடயம். அத்தோடு கமலின் கடவுள் பற்றிய கொள்கைகள் இந்த சமுதாயத்தில் பெரிதாக ஏற்றுக் கொள்ளப்படாதவை, ஆனால் தன் கொள்கைகளை எங்கும், எப்போதும் உரத்துச் சொல்லும் அந்த குணம் பிடிக்கும்.
ஏ.ஆர்.ரஹ்மானை எப்போது பிடிக்கத் தொடங்கியது என்று சொல்ல முடியவில்லை. சிறுவனாக (இப்போதும் அப்படித் தான்.) இருந்தபொழுது பெரிதாக பாடல்கள் கேட்பதில்லை. ஆனால் சில பாடல்கள் மட்டும் பிடிக்கும். சிறிது வளர்ந்த பின் அவை ரஹ்மானின் பாடல்கள் என அறிந்தேன். ஆனால் ரஹ்மானின் பாடல்கள் மீது பைத்தியம் என்ற அளவிற்க வந்தது ஒரு 3,4 வருடங்களிற்கு முன்னர் தான்.
முரளி, வோண் இருவரையும் பந்துவீச்சிற்காக பிடிக்கும். பந்துவீச்சைத் தவிர முரளியின் அமைதி, அடக்கம் பிடிக்கும். வோண் இன் கிறிக்கெற் பற்றிய பரந்த அறிவும், தலைமைத்துவமும் பிடிக்கும்.

6. சமுதாய விழிப்புள்ள பதிவுகளை எழுத எனக்கு மனம் வரவேண்டும்.
சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பம் உடையவன் நான். ஆனால் இப்போதெல்லாம் பம்பல் பதிவுகளுடனேயே காலங்கள் செல்கின்றன. நகைச்சுவை என்ற உணர்வு எனக்கு மிகப்பிடித்தது என்றாலும் அதை ஒரு புறமாகவும் சிந்தனைப் பதிவுகளை ஒரு புறமாகவும் எழுத எனக்கு புத்திவரச் செய்யக் கேட்பேன்.

7. வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை மறக்க சக்தி வேண்டும்.
வாழ்வில் நடந்த சில கசப்பான சம்பவங்களை மறந்து வாழ எனக்கு சக்தி வேண்டும். அத்தோடு துரோகங்களையும், பொய்களையும் அடையாளம் காணும் சக்தி வேண்டும்.

8. கிறிக்கெற் விளையாட வேண்டும்.
பாடசாலைக் கிறிக்கெற் அணியில் விளையாடிய நான் பின்னர் உயர்தரத்தில் அந்தப்பக்கமே போகவில்லை. இலங்கை அணிக்காக விளையாடும் ஆசை முன்பெல்லாம் விளையாடும் போது இருக்கும். இப்போது மென்பந்து விளையாடுவதே அபூர்வம் ஆகிவிட்டது. ஆகவே எனது 2 ஆவது உயிரான கிறிக்கெற்றை (முதலாவது உயிர் எதுவென்று கேட்டு என்னை சிக்கலில் மாட்ட யாராவது முயன்றால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.) தொடர்ந்து விளையாட வேண்டும்.

9. என்னை நேசிப்பவர்கள் யாவருக்கும் என் அன்பு புரிய வேண்டும்
நான் பொதுவாக மற்றவர்கள் மேல் வைத்திருக்கும் மதிப்பு, அன்பு போன்றவற்றை எந்த நேரமும் வெளிப்படுத்துவதில்லை. அதனால் சிலவேளைகளில் மற்றவர்கள் என்னைப் புரிந்து கொள்ளாமல் போவதுமுண்டு.
ஒருவரோடு ஒன்றாக இருக்கம் போது கிடைக்கும் மகிழ்ச்சியை விட அவர் எம்மைப் புரிந்து கொள்ளாமல் இருக்கும் போது ஏற்படும் கவலை பன்மடங்கு அதிகமானது.
எனவே கோபி என்பவனின் இயல்பான குணத்தை மற்றவர்கள் புரிய வேண்டும்.

10. ***********************************
சில ஆசைகளை பொது இடத்தில் சொல்ல முடியாது. 10 ஆவது ஆசை (தரப்படுத்தலில் 1 ஆவதாக இருக்கும் என நம்புகிறேன்) அப்படியானது. அந்த ஆசையும் நிறைவேறட்டும்.


இவை தான் என் ஆசைகள்.......
இந்த தொடர்பதிவுக்கு பின்வருவோரை அழைக்கிறேன்...

மருதமூரான்... - பாடசாலைக் காலம் பற்றிய பதிவிற்கு என்னை அழைத்தமைக்கு பதிலாக...
sshathiesh... - விருதிற்காக...
சுபாங்கன்... - யாழ்ப்பாணத்திலிருந்து வந்து மீண்டும் கலக்கத் தொடங்கியமைக்காக...
இலங்கன்... - வகுப்புத் தோழன். யாழ்ப்பாணத்தில் நிற்கிறான் இப்போது.

சச்சின்... ஹி ஹி...

ஆனா இத பிழையான நேரத்தில பதிவிடுறன் எண்டு மட்டும் தெரியும்...

பெப்சியை விட கொக்க கோலா கூடுதலா விற்கப்படுகிறதாம்...

பெப்சி தங்கள் இலட்சனையை எவ்வளவு முறை மாற்ற கொக்க கோலாவைப் பாருங்கள் அதே இலட்சனை...

அப்ரிடி... ஹி ஹி ஹி....

ஒபாமா... நீங்க உயிரோட இருக்கத் தான் வேணுமா...

எங்கே செல்லும் இந்தப் பாதை...

என்னப் போல வேல வெட்டி இல்லாட்டி படத்த நல்லா உற்றுப் பாருங்கோ...

சொர்க்கம் தெரியாட்டியும் ஏதோ ஒண்டு நடக்கும்...

ஹர்பஜன் சிங் தனது வலைப்பதிவில் பெங்களூர் சம்பவம் தொடர்பாக எழுதியதை இங்கு மொழிமாற்றம் செய்ய முற்படுகிறேன்.
இங்கு காணப்படும் கருத்துக்கள் அப்படியே ஹாபஜன் கூறுவதாகவே கூறுகிறேன்.
ஹர்பஜனின் உத்தியோகபூர்வ வலைத்தளத்திற்கு செல்ல http://bhajji.bigadda.com என்ற முகவரிக்கு செல்லுங்கள்.
சரி...
இனி ஹர்பஜன் சொல்வது இது தான்...


நாங்கள் இப்போது கொழும்பில் இருக்கிறோம். இங்கு வந்தது முதல் என்மீது எழுப்பப்படும் ஒரே கேள்வி 'பெங்களூர் விமான நிலையத்தில் நடந்தது என்ன?' என்பது தான்.

ஊடகங்களைச் சேர்ந்த எனது நண்பர்கள் பெரும்பாலான நேரங்களில் செய்திகளுக்காக, ஒளிப்படங்களுக்காக முட்டி மோதுவது குறிப்பிடத்தக்கது, முக்கியமாக புகைப்பிடிப்பு (கமரா மென்) நண்பர்கள். கமரா நண்பர்களின் கமராக்களின் ஓரங்கள் பலவகையான நபர்களை பல்வேறு வகையான நேரங்களில், அவை விமானநிலையங்களில் என்ன ஊடகவியலாளர் சந்திப்புகளில் என்ன இடிப்பதை அல்லது முட்டுவதை கண்டிருக்கிறோம். இதை நிறையப் பேர் ஒத்துக் கொள்வார்கள் என நம்புகிறேன். நீங்கள் வடிவாகப் பார்ப்பதற்கு எனது வலைப்பதிவோடு அதன் வீடியோ வடிவத்தை, உண்மையில் என்ன நடந்தது என்பதைக் காட்டும் வீடியோ வடிவத்தை, இணைத்திருக்கிறேன். அத்தோடு உங்களுக்கு வடிவாக புரிவதற்காக நான் ஓர் விளக்கத்தையும் இங்கே வழங்குகிறேன்.அந்த வீடியோவிற்கான விளக்கம்...

நான் காரிலிந்து இறங்கி எனது பொதிகள் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பின்னால் ஆயதம் தரித்த CISF பாதுகாவலர்கள் ஊடகத்தினரிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் எம்மை பாதுகாத்துக் கொண்டிருந்தனர்.நான் காரை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தென், நீங்கள் வடிவாகப் பார்க்கலாம் எனக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை பற்றி எதுவுமே தெரியாமல் தான் நான் நிற்கிறேன். புகைப்பிடிப்பாளர் என்னை நோக்கி ஓடிவருவதை நீங்கள் பார்க்கலாம். அவர் வந்த வலிமையாலும், வேகத்தாலும் அவரது புகைப்படக் கருவி எனது தலையை தெளிவாகவே இடித்தது. அது மெதுவாக தொடுவது போலல்லாமல் எனது தலையிலும், தொப்பியிலும் ('சிங்'குகள் அணியும் பற்கா தொப்பி) பலமாக இடித்தது.
எனத தலை அல்லது தொப்பியில் அது (கமரா) இடித்தது என்பதில் நான் திடமாக உள்ளேன். மில்லியன் கணக்கானோரும் அவ்வாறே உணர்வர் என நம்புகிறேன். எனது தலையில் என்ன இடிக்கிறது என்று தெரியாமல் இச்சையில் செயற்பாட்டால் (கட்டுப்பாட்டில் இல்லாமல் தானாக நடைபெறுகின்ற) என்னை இடித்த பொருளை தள்ளினேன், அதன் பின்னரே என்னை இடித்ததும், நான் தள்ளியதும் புகைப்படக் கருவி என உணர்ந்தேன். என்னைச் சுற்றி தெளிவாக பாதுகாப்பு கவசம் இருந்தது. அந்த புகைப்படப் பிடிப்பாளர் அந்த கவசத்தை உடைத்தார். CISF பாதுகாவலர்களும், அதிகாரிகளும் புகைப்பிடிப்பாளர் தனது புகைப்பிடிப்புக் கருவியால் என்னை இடிக்கும் தவறைச் செய்ததால் புகைப்பிடிப்பாளரை தள்ளிச் செல்லுமாறு கோரியதை கண்டேன்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் புகைப்படப் பிடிப்பாளரை அறையவோ, அடிக்கவோ இல்லை.இனியெப்போதும் செய்யவும் போவதில்லை. பெரும்பாலான ஊடகவியலாளர்கள் அவர்களுடனான எனது உறவு, நடத்தைகள், ஒத்துழைப்புகள் நட்பு ரீதியாகவும்,மதிப்பு வாய்ந்ததாகவும் இருந்ததை இரண்டாம் பட்சமாக எடுப்பார்கள்.
நான் எப்போதும் ஊடகங்களையும், நாட்டிற்கு செய்திகளை வழங்க வேண்டும் என்ற பின்வாங்காத தன்மையையும் மதிக்கிறேன். அவர்கள் தான் இரசிகர்களோடு எம்மை தொடர்புபடுத்துகிறார்கள்.
தற்போதைய நிலையில் மற்றைய எல்லாவற்றையும் விட எனது அணிக்கு பங்களிப்பு வழங்குவதும், அணியை முதலிடத்திற்கு கொண்டு செல்வதுமே எனது மிக மிக முக்கிய முக்கியமானது.
வருங்காலங்களில் உங்கள் ஆதரவுக்கும் வேண்டுகிறேன். அணி முதலிடம் பெறுவதற்காக எனக்காகவும்,அணிக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.
கொழும்பிலிருந்து பஜ்ஜி (Bhajji)

ரைற்றானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால் என்னென்ன அறிக்கைகள் கிடைக்கப்பெறும் எனப் பாருங்கள்...

அமெரிக்கா...
சுதந்திரத்தை நோக்கி வந்துகொண்டிருந்த கப்பலொன்று தீவிரவாதிகளால் தாக்கப்பட்டுள்ளது. நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம். அவர்களுக்கு உரிய பாடத்தை புகட்டுவோம். பின்லேடனுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். தேடி அழிப்போம். அல்-குவைதா வலையமைப்பை எங்கிருந்தாலும் தேடி அழிப்போம்.

இங்கிலாந்து...
நான் அமெரிக்க ஜனாதிபதியுடன் கதைத்துள்ளேன். மூழ்கிக் கொண்டிருக்கும் ரைற்றானிக், முஸ்லிம் தீவிரவாதிம் அழிக்கப்பட வேண்டும் என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டு என்பதை இருவரும் ஏற்றுக் கொண்டுள்ளோம். இதை முழு உலகமும் எதிர்க்க வேண்டும்.

இஸ்ரேல்...
இது ஹமாஸ் மற்றம் பிற தீவிரவாத வலையமைப்பால் செய்யப்பட்டதென்பதற்கான ஆதாரம் உள்ளது. இது விபத்து அல்ல. ஹமாஸ் தீவிரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலாலேயே இடம்பெற்றது. இப்போது நாங்கள் பலஸ்தீனர்கள் மீது ஊரடங்கை பிறப்பிப்போம், கைது செய்வோம், அடிப்போம், கொலை செய்வோம், அவர்களின் வீடுகளை தரைமட்டம் செய்வோம்.

இந்தியா...
இது பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைமையில் அந்த நாட்டு தீவிரவாதிகளின் நடவடிக்கை தான். பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கடவுச் சீட்டுக்களை கண்டெடுத்துள்ளோம். அத்தகைய நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

இலங்கை...
விடுதலைப் புலிகளை அழித்து விட்டாலும், சிலர் பதுங்கி இருக்கின்றனர். அவர்களின் சர்வதேச வலைப்பின்னலின் செயற்பாடே இது. இந்த சம்பவம் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை அழிக்க சர்வதேச நாடுகள் எமக்கு உதவ வேண்டும் என்பதை உணர்த்தி நிற்கிறது.

ஐக்கிய நாடுகள் சபை...
ஓ! இது நடந்து விட்டது. இது நடந்தமைக்காக நாங்கள் வருந்துகிறோம்.


கப்பல் பயணிகள்...
ஐயோ... காப்பாற்றுங்கோ... அது ஓர் பனிப்பாறை... காப்பாற்றுங்கோ... காப்பா..

பணக்காரர்களின் மனைவிமார் பொதுவாக ஏன் அழகாக இருப்பதில்லை என்ற வினா உங்கள் மனதில் எழுந்திருந்தால் இந்தப் பதிவு அதற்கு விடை பகரும் என்று நம்புகிறேன்.

ஓர் ஊரில் ஓர் பெண் இருந்தாள். அவள் பணக்காரர்கள் அடங்கிய குழுவொன்றிற்கு எழுதிய கடிதம் இதோ.
'நான் நேர்மையாக செயற்பட விரும்புகிறேன். நான் இந்த ஆண்டு 25 வயதை அடைகிறேன். நான் மிகவும் அழகானவள், நல்ல சுவை கொண்டவள், அத்தோடு மிக நல்ல பண்பாடு உடையவள். நான் வருட வருமானம் 20 இலட்சத்திற்கு மேல் உழைக்கும் ஒருவரை மணம் முடிக்க விரும்புகிறேன். நீங்கள் சிலவேளை என்னை பேராரச பிடித்தவள் என எண்ணலாம். ஆனால் இப்போதெல்லாம் மாத வருமானம் 1 இலட்சம் என்பது மத்தியதர வர்க்கமாகவே கருதப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த குழுவில் வருட வருமானம் 20 இலட்சத்திற்கு மேல் உள்ள யாராவது உள்ளீர்களா? நீங்கள் எல்லோரும் மணமுடித்தவர்களா? நான் உங்களிடம் கேட்க விரும்புவது இது தான். உங்களைப் போல் உள்ள பணக்காரர்களை மணமுடிக்க நான் என்ன செய்ய வேண்டும்? நான் இதுவரை காதலித்தவர்களில் அதிக பணக்காரன் வருடம் 10 இலட்சம் தான் உழைத்தான். நான் வாழ விரும்பும் வாழ்க்கைக்கு 10 இலட்சம் போதாது.
நான் சில கேள்விகளை கேட்கிறேன்.
1. மணமுடிக்காத பணக்காரர்கள் எங்கே அதிகமாக இருப்பர்?
(தயவுசெய்து அவர்களின் பெயர்கள், முகவரிகள், அவர்கள் செல்லும் மதுபான நிலையங்கள், உணவுவிடுதிகளை வரிசைப்படுத்தவும்.)
2. எந்த வயதினரை நான் குறிவைக்க வேண்டும்?
3. ஏன் பொதுவாக பணக்காரர்களின் மனைவிமார் அழகாக இருப்பதில்லை. நான் பல பெண்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் பெரிதாக கவர்ச்சியாக செயற்படுபவர்களாகவும் இல்லை.
4. உங்கள் மனைவி அல்லது காதலிகளை தெரிவு செய்யும் போது எவ்வாறு தெரிவுசெய்வீர்கள்?
(எனது இப்போதைய இலக்கு மணம் புரிவது தான்)

உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
செல்வி. அழகி.

இதோ அதற்கான பதிலை வழங்குகிறார் அந்த குழுவிலுள்ள ஓர் பணக்காரர்.

வணக்கம் செல்வி அழகி அவர்களே!
நான் உங்களது கடிதத்தை மிக ஆவலுடன் வாசித்தேன். உங்களைப் போல் ஏராளமான பெண்களுக்கும் இந்த சந்தேகம் இருக்கும் என நம்புகிறேன்.
நான் ஒரு தொழில்வல்லுனராக உங்களுக்கு பதில் வழங்குகிறேன்.
எனது ஆண்டு வருமானம் 20 இலட்சத்துக்கு மேல். ஆகவே நான் இங்கே நேரத்தை வீணடிக்கவில்லை என்பதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன்.
ஓர் வியாபார மனிதனாக இருந்து கொண்டு உங்களை மணப்பது என்பது பிழையான முடிவாகும். அதற்கான காரணம் மிக இலகுவானது. நான் புரிய வைக்கிறேன்.
நீங்கள் என்ன செய்ய முற்படுகிறீர்கள் என்றால் அழகையும் பணத்தையும் ஒன்றுக்கொன்று பரிமாற்றம் செய்ய முற்படுகிறீர்கள். நபர் 'அ' அழகை வழங்க, நபர் 'ஆ' அதற்கு பணம் செலுத்துகிறார். மேலோட்டமாக பார்க்கும் போது சரியாகத் தான் தோன்றும். ஆனால் இங்குள்ள பெரிய பிரச்சினை என்னவென்றால், உங்கள் அழகு குறைவடையும். ஆனால் என் பணம் தானாக பெரிய பிரச்சினைகள் வந்தாலொழிய குறைவடையாது. என் வருமானம் எதிர்காலத்தில் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் நீங்கள் மேலும் மேலும் அழகாக முடியாது. ஆகவே பொருளியலாளர்களின் நோக்கில் நான் வளரும் சொத்து. நீங்கள் குறையும் சொத்து. குறைவு என்பது சாதாரணமானதொன்றல்ல. வெளிப்படையாகவே மிக வேகமாக குறையும் சொத்து. அழகு ஒன்று தான் உங்கள் சொத்து என்றால் இன்னும் 10 வருடங்களில் உங்கள் பெறுமதி இல்லாமலே போய்விடும்.
எங்கள் பங்குவர்த்தகத்தில் பெறுமதி குறையும் போது நாங்கள் பங்குகளை விற்பது வழக்கம். அதனால் தான் நாங்கள் திருமணத்தை பெரிதாக நினைப்பதில்லை.
வருட வருமானம் 20 இலட்சத்தை கொண்ட எவரும் முட்டாளல்ல. நாங்கள் உங்களை காதலிக்கவே விரும்புவோம், மணமுடிக்க அல்ல. ஆகவே பணக்காரனொருவனை மணமுடிக்கும் உங்கள் ஆசையை கைவிடுங்கள். மறுதலையாக நீங்கள் 20 இலட்சம் உழைப்பவராக மாறலாம். இந்த முறையில் சிலவேளையில் நீங்கள் தேடும் பணக்காரரொருவரை மணமுடிக்க வாய்ப்புக்கள் உள்ளன.'

இலங்கையில் புதியதொரு

தொலைக்காட்சி அலைவரிசை…


உங்கள் கண்களுக்கு வேட்டு

வைக்க இதோ…


“சொத்தி T.V.”எமது நிகழ்ச்சிகளைப் பற்றிய ஓர் சிறிய அறிமுகம்.


• காலை 6 மணிக்கு எமது காலை நேர பிரதான செய்திகள். (எமது செய்திகளை பற்றிய விளக்கம் பிற்பகுதியில் தரப்படும்.)


• காலை 6.30 ற்கு எமது நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும். எமது காலை நேர நிகழ்ச்சி “Bad morning viewers.” ஆகும்.


• 6.50 மணியளவில் “இன்றைய இராசி பலன்” பகுதி இடம்பெறும். இன்று எத்தனையோ பேர் நேர்முகத் தேர்வுகளுக்கும், பரீட்சைகளுக்கும், புதிய செயல்களை தொடங்குவதற்கும் தயார் செய்திருப்பர். “இன்று புதிய செயல்களை தொடங்குவது நன்றன்று, புதிய செயல்களை தவிருங்கள்” என்று சொல்வதன் மூலம் அவர்களுக்கு மன ரீதியாக தாக்குதல் நடத்துவோம்.


• அதன் பின்னர் “வாழ்த்தும் நேரம்”. பிறந்த நாள், திருமணங்கள், திருமண நிறைவு நாட்கள், நேர்முகத் தேர்வுகளுக்கு செல்வோர், மற்றும் பலருக்கு வாழ்த்து தெரிவிக்கலாம்.


• அதன் பின்னர் “எங்கள் தலைப்பில் உங்கள் உளறல்” பகுதி இடம்பெறும். தலைப்பு என்ற பெயரில் நாம் தருவதைப்பற்றி நீங்கள் கதைக்கலாம். இந்த நிகழ்ச்சியில் எம்மால் இயன்றவரை ஆங்கிலம் கலந்து கதைக்க முயற்சிப்போம். வடிவேல் சொல்வது போல் என்றால் “எவ்வளவு முடியுமோ… அவ்வளவு இங்கிலீச கதைப்பமுள்ள…!”. எமது தொலைக்காட்சி நிலையத்தில் ஆஸ்தான அறிவிப்பாளர் ஒருவர் இருப்பார். அவரின் பெயர் “சொத்தியப் புரியாணி”. இவரை நீங்கள் எப்போதும் எமது ஒளிபரப்பில் காணலாம். இவர் இல்லையென்றால் எமது நிறுவனம் இல்லை.


• இந்த கொடுமையை நீங்கள் தாங்கிய பின்னர் 8.30 முதல் இந்திய தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகிய ஒரே நிகழ்ச்சியை திரும்ப திரும்ப ஒளிபரப்புவோம். 10.00 மணிவரை இந்த கொடுமைகள் ஒளிபரப்பப்படும்.


• 10.00 மணி முதல் 12.00 மணி வரை இந்திய தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகிய தொடர் நாடகங்கள் ஒளிபரப்பப்படும். தொடர் நாடகங்களைப் பற்றி சொல்லவா வேண்டும்? “அடிச்சு முழக்குவமுள்ள…!”.


• 12.00 மணிக்கு “பெண்மணிக்காக…”. இங்கு பெண்கள் மாத்திரம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நேயர்களிடம் குறிப்புகளை பகிர்ந்து கொள்ளலாம். “எங்களிடம் நீங்க call பண்ணி tips அ share பண்ணலாம். எங்களுக்கு நீங்க call பண்ணும் போது உங்க T.V volume அ கம்மி பண்ணிற்று தான் call பண்ணனும். அப்ப தான் நீங்க சொல்ற tips clear ஆ கேக்கும். முதலாவதா ஒரு tips- உங்க face பளிச்சுன்னு தெரியணும்னா உங்க வீட்டு கண்ணாடிய நல்லா துடைக்கணும். சரி… சூப்பரான tips கேட்டம். இனி ஒரு சூப்பரான பாட்ட பாத்திற்று வருவம்.’


• 12.30 ற்கு பெண்கள் நேரம். இலங்கைப் பெண்களின் தற்போதைய பெரும் பிரச்சினைகளான “புகைத்தல், குடித்தல், அழகு சிகிச்சைகள்” போன்றன பற்றி நிறையவே கதைப்போம்.


• 1.00 மணிக்கு எமது “lunch time news”. இந்த சொல்லிற்கு எமக்கு தமிழ் தெரியாததால் ஆங்கிலத்திலேயே பெயர் இடுவோம்.


• 1.15 ற்கு “சொத்தியின் weekday film festival”. திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும்.


• 4.00 மணியிலிருந்து 6.00 மணி வரை சிறுவர் நேரம். அமானுஷிய கதாபாத்திரங்கள் கொண்ட கேலிச்சித்திர தொடர்கள் ஒளிபரப்பப்படும். சிறார்களின் மனங்கள் பாதிக்கப்படுவதைப் பற்றி எமக்கு என்ன கவலை?
எம்மைப் பொறுத்தவரை எமக்கு அனுசரனையாளர்கள் கிடைத்தால் போதுமானது.


• 6.00 மணிக்கு “புத்தம் புதுப்பாடல்”. பராசக்தி, இரத்தத்திலகம், உலகம் சுற்றும் வாலிபன் போன்ற புத்தம் புதிய திரைப்படங்களிலிருந்து புத்தம் புதிய பாடல்கள் அரை-குறையாக ஒளிபரப்பப்படும்.


• 6.30 ற்கு “அலங்கோலங்கள்”-நெடுந்தொடர் ஒளிபரப்பாகும்.


• 6.55 ற்கு முதன்மைச் செய்தி என்ற பெயரில்; “உப்புச்சப்பில்லாத” செய்திகள் ஒளிபரப்பாகும்.


• 7.00 மணிக்கு “கலசத்தை கவிழ்த்த பெண்”-நெடுந்தொடர் ஒளிபரப்பாகும்.


• 7.30 ற்கு “மந்திரத்தால் மாங்கனி வீழ்ந்திடுமோ?” என்று கேட்ட மகாகவியின் வேடத்தை போட்ட பெண்மணியின் படத்தை இட்டு, “பேய், ஆவி, மந்திரம், கடவுளின் நேரடி விஜயம்” போன்றவற்றை கதை இல்லாதபடியால் சேர்த்து ஆக்கப்பட்ட “(பார்ப்போருக்கு) கண்ணீர் அஞ்சலி” எனும் நெடுந்தொடர் ஒளிபரப்பாகும்.


• 8.00 ற்கு எமது செய்தியறிக்கை.


• எமது செய்தியறிக்கையின் பெயர் “UNP 1st” ஆகும்.


• எமது செய்திகளில் “ஐக்கிய தேசிய கட்சித் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் இன்று மூச்சு விட்டார்கள்” என்பதே தலைப்புச்செய்தியாக அமையும். “ஜே.வி.பி உறுப்பினர்களும், அரசாங்க உறுப்பினர்களும் இன்று மூச்சு விடவில்லை” என திஸ்ஸ அத்தநாயக்க சொன்ன செய்தியை எமது முக்கிய செய்தியாக கொண்டு எமது செய்தியறிக்கை காணப்படும். அவர் சொன்னது சரியா பிழையா என்பது எமக்கு தேவையற்றது.


• எமது செய்தியறிக்கையின் மறுபெயர் “Believe last” ஆகும். அத்தோடு பல கிளை செய்திகளும் காணப்படும். “Sports 1st, Weather 1st, Entertainment 1st, Traffic 1st, Nature 1st, Water 1st, Train 1st, Bus 1st, Lorry 1st” போன்ற ஏராளமானவை.


• “International bureau update” பகுதியில் தமிழை கதைக்கத் தெரியாத தமிழர்களைக் கொண்டு சம்பந்தமில்லாமல் கதைத்து செய்தி வாசிப்போம்.


• 8.30 ற்கு “செல்வி” நெடுந்தொடர் ஒளிபரப்பாகும். ஏனைய எல்லா நெடுந்தொடர்கள் போலவே “இரண்டு மனைவி” கதையை கொண்டதாக இது அமையும்.


• 9.00 மணிக்கு U.N.P 1st இன் ஆங்கில செய்தியறிக்கை இடம்பெறும்.


• 9.30 முதல் மீண்டும் நெடுந்தொடர்கள்.


• 11.00 ற்கு “நெஞ்சம் மறப்பதில்லை”. பழைய பாடல்களையும், நினைவுகளையும் மீட்டிப்பார்க்கும் ஓர் நிகழ்ச்சி.
• வார இறுதி நாட்களில் எமது ஒளிபரப்பு நேரங்களை ஈடு செய்ய ஏதேனும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.


• உதாரணமாக “இது நிகழ்ச்சி இல்லை, போயிட்டாங்கய்யா போயிட்டாங்க” போன்ற அலட்டல் நிகழ்ச்சிகள், “Waste full” என்ற விமர்சன நிகழ்ச்சி, “SMS கொடுமை, T.V ஐ பூட்டுவோமா?, 30 என்ற SMS நிகழ்ச்சி (7+7+8+8=30)” போன்றனவும் குறிப்பிடத்தக்கன.


• எம்மிடம் நிதித்தட்டுப்பாடு ஏற்படின் SMS மூலமான போட்டிகள், இசைப் போட்டிகள் நடத்தப்பட்டு உங்கள் தலையில் மிளகாய் அரைக்கப்படும். “கேக்கிறவன் கேனையனா இருந்தா எருமை மாடு ஏரோ பிளேன் ஓட்டுமாம்” என்பது பழையது. “கேக்கிறவன் கேனையனா இருந்தா சொத்தி T.V தாறது நல்ல நிகழ்ச்சியாம்” என்பது புதியது.


• “GRAND MASTER” என்ற ஒரே உருப்படியான நிகழ்ச்சியை “சொத்தியப் புரியாணி” தொகுத்து வழங்குவார். அவருக்கு சேலைகளை அணிய அனுமதி வழங்கப்பட மாட்டாது.


• ஏனையன இந்திய தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.


• முக்கிய குறிப்பு: எமது

நிகழ்ச்சிகள்

இலங்கையிலுள்ள சக்தி T.V எனும்

நிறுவனத்தின் நிகழ்ச்சிகளை போல்

அப்படியே உள்ளதாக அந்நிறுவனத்தினர்

பிரச்சினை செய்வதால் அப்பிரச்சினைகள்

தீர்ந்த பின்னர் எமது ஒளிபரப்புகள் மீள

ஆரம்பிக்கப்படும்.