க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

இலங்கை கிறிக்கெற் அணி ரெஸ்ற் தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு வந்தது தெரியும், ஆனால் எப்போது பெரியளவில் தோற்றது என நினைக்கிறீர்களா??? சிலவேளைகளில் பாகிஸ்தான் அணியுடனான கடைசி இரண்டு ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளின் தோல்விகளையும், இருபதுக்கு இருபது போட்டியின் தோல்வியையும் சொல்கிறேனா என்றும் யோசிக்கலாம்.
ஆனால் அதுவல்ல விடயம். கிறிக்கெற்றில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்பதை அறியாத மூடன் அல்லன் நான்.

இலங்கை கிறிக்கெற் அணி கடந்த சிலவருடங்களாக போட்டியின் ஒழுங்குமுறைக்கமைவாக விளையாடும் அணி (Team playing with the Spirit of the game) என்ற விருதை பெற்று வந்தது நீங்கள் அறியலாம்.
ஆனால் கடந்த பாகிஸ்தான் தொடரும், இவ் நியூசிலாந்து தொடரும் அவ்வாறு செல்வதாக தெரியவில்லை.

பாகிஸ்தான் அணியுடனான 2 ஆவது ரெஸ்ற் போட்டியின் போது சங்கக்காரவை நடுவர் பிழையான முறையில் சயீட் அஜ்மலின் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்ததாக அறிவிக்க சங்கக்கார முணுமுணுத்தபடி நடுவரை திரும்ப திரும்ப பார்த்து சென்றமை குறிப்பிடத்தக்கது. அந்த ஆட்டமிழப்பு அறிவிப்பு தவறானது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால் நடுவர் ஆட்டமிழப்பு வழங்கியதும் வெளியேறுவது விதிகளின் படி அவசியம் என்பது சங்கக்கார அறியாதது இல்லை.
பின்னர் ஒருநாள் போட்டித் தொடரில் களத்தடுப்பாட்ட வீரர் எறிந்த பந்து அப்துல் ரஸாக் இன் துடுப்பில் பட்டது தற்செயலாக. ரஸாக் அதைக் கவனிக்காமல் (அப்படித் தான் எனக்குத் தெரிந்தவரை தொலைக்காட்சியில் காட்டினார்கள்) இன்னொரு ஓட்டத்தை ஓட சங்கக்கார ரஸாக் இடம் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. அப்துல் ரஸாக் ஓர் அமைதியான வீரர் எனக் கணிக்கப்படுபவர். அப்படிப்பட்ட அமைதியான வீரர் மீது சங்கக்கார வாக்குவாதப்பட முற்பட்டது பற்றி சில கிறிக்கெற் விமர்சகர்களும் அதிருப்தியை தெரிவித்திருந்தார்கள்.
அதே போல் ஓர் சம்பவத்தில் அப்ரிடி ஈடுபட இம்முறை ஜெயவர்தனா வந்து வாக்குவாதப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எல்லாவற்றிலும் மேலாக யுனிஸ்கானின் ஆட்டமிழப்பொன்றை நடுவர் வழங்காது விட யனிஸ்கான் தானாக வெளியேறியிருக்க வேண்டும் என்ற ரீதியில் யுனிஸ்கானிடம் வார்த்தைப் பிரயோகங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு முரளி கூட அப்ரிடியை ஆட்டமிழக்கச்செய்த பின்னர் போகுமாறு சைகை செய்ததும், இளம்வீரர் உமர் அக்மல் ஆறு ஓட்டமொன்றை அடித்தபின்னர் அடுத்த பந்தில் இலக்குகள் சரிந்து ஆட்டமிழக்க ஆக்ரோஷமான பார்வையை முரளி வெளிப்படுத்தியதும் அடுத்த முறை இலங்கைக்கு விதிகளின் படி ஒழுங்குமுறையாக விளையாடும் அணிக்கான விருது கிடைக்காது என்பதை அடித்துச் சொல்கின்றன.

அணிக்குள்ளும் வீரர்கள் கோப வார்த்தைகளை வீசுவதும் வழக்கமாகிவிட்டது.
லசித் மலிங்க பாகிஸ்தான் அணிக்கெதிராக ஓட்டங்களை வாரிவழங்க சங்கக்கார கத்தியதும், நேற்று முரளி களத்தடுப்பில் ஈடுபடாமல் கால்பந்து விளையாட்டில் ஈடுபட்டு சோம்பறித்தனமாக இருந்ததும், ரங்கன ஹேரத்தின் கையில் பந்து பட்டு பந்து விலகிச்செல்ல முரளி பந்தை எடுக்கும் அவசரம் இன்றி ஆறுதலாக ஓடி (நடந்து) சென்றதும் அவ்வளவு நல்லதாக தெரியவில்லை.
பாகிஸ்தானுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சனத் ஜெயசூரியா பிழையான அழைப்பு மூலம் சங்கக்காரவை ரண் அவுட் செய்ய சங்கக்கார கடுமையான முணுமுணுப்புக்களுடனும், கோபத்துடனும் வெளியேறியதும் அதன் பின்னர் அடுத்த போட்டியில் சனத்திற்கு ஓய்வு (அப்பிடி தான் சொல்றாங்க.) வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய காலகட்டங்களில் அணித்தலைவர் அமைதியானவராக வேண்டப்படுகின்ற வேளையில் சங்கக்கார அனுபவங்களின் மூலம் தனத உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும், ஏனென்றால் கிரேம் ஸ்மித், டோனி போன்ற Captain Cool அணித்தலைவர்கள் மூலம் அவ்வணிகள் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது உள்ளங்கை நெல்லிக்கனி.

சங்கக்காரவின் கிறிக்கெற் அறிவோ, அல்லது அனுபவமோ கேள்விக்குரியதன்று. நாமெல்லோரும் அதை அறிவோம்.

(பம்பல் பதிவர் கனககோபி சீரியஸாக மாறக் கூடாது என்பதால் ஒரு தகவல்-
இரட்டைக் குழந்தைகள் பிறந்ததால் குழந்தைகள் இரவில் அழுது சங்கக்காரவை நித்திரை செய்யவிடாமல் தடுப்பதால் தான் சங்கக்கார இப்படி ஆக்ரோஷமாக நடந்துகொள்கிறாரோ???!!!)

6 பின்னூட்டங்கள்:

முதல் வருகை உங்கள் தளத்திற்குள்.....

பதிவு அருமையாக இருந்தது....

வாழ்த்துக்கள்.....

நல்லாதான் எழுதியிருக்கீங்க நண்பா. ஒரு சின்ன விஷயம். பாகிஸ்தான் இந்தியா வீரருகளை விட இலங்கை வீரர்கள் கண்ணியமாக தான் விளையாடுகிறார்கள் என நினைக்கிறேன். ராணா நவீட், அஜ்மல், சிறிசாந்த், ஹர்பஜன் போன்றோர் பந்து வீசும் போது துடுப்பாட்ட வீரரை மிகவும் கீழ்தரமாக திட்டுவார்கள். அதிலே இந்திய வீரர்கள் ஒருபடி மேலே போய் ஹர்பஜன் சிறிசாந்தை கன்னத்தில் அறைந்தது எல்லாருக்கும் தெரியும். அப்ரிடியோடு மகேல வாக்குவாதப்பட்டது அதற்கு முன்னைய போட்டியிலும் அவரது த்ரோவுக்கு துடுப்பை காட்டி அதில் பந்து பட்டு சென்றவுடன் மேலதிக ஓட்டங்களை பெற்றதால் ஆகும். இதனை கண்ணியமான வீரன் ஒருநாளும் செய்ய மாட்டார்.

உமது தேடல் நன்றாக இருக்குது. மிகவும் சுவாரசியம் ஆக இருந்தது.
வாழ்த்துக்கள்...

// சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
முதல் வருகை உங்கள் தளத்திற்குள்.....

பதிவு அருமையாக இருந்தது....

வாழ்த்துக்கள்.....//

வருகைக்கு நன்றி.
தொடர்ந்து வாருங்கள்...

// யோ வாய்ஸ் கூறியது...
நல்லாதான் எழுதியிருக்கீங்க நண்பா. ஒரு சின்ன விஷயம். பாகிஸ்தான் இந்தியா வீரருகளை விட இலங்கை வீரர்கள் கண்ணியமாக தான் விளையாடுகிறார்கள் என நினைக்கிறேன். ராணா நவீட், அஜ்மல், சிறிசாந்த், ஹர்பஜன் போன்றோர் பந்து வீசும் போது துடுப்பாட்ட வீரரை மிகவும் கீழ்தரமாக திட்டுவார்கள். அதிலே இந்திய வீரர்கள் ஒருபடி மேலே போய் ஹர்பஜன் சிறிசாந்தை கன்னத்தில் அறைந்தது எல்லாருக்கும் தெரியும். அப்ரிடியோடு மகேல வாக்குவாதப்பட்டது அதற்கு முன்னைய போட்டியிலும் அவரது த்ரோவுக்கு துடுப்பை காட்டி அதில் பந்து பட்டு சென்றவுடன் மேலதிக ஓட்டங்களை பெற்றதால் ஆகும். இதனை கண்ணியமான வீரன் ஒருநாளும் செய்ய மாட்டார். //

இந்திய வீரர்களோடு நான் ஒப்படவில்லை ஒருபோதும்.
இலங்கை வீரர்கள் தமக்கெனவைத்திருந்த ஒழுங்கு ரீதியிலான தரத்தில் குறைந்துவிட்டார்கள் என்று தான் சொன்னேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

// M.Buveraj கூறியது...
உமது தேடல் நன்றாக இருக்குது. மிகவும் சுவாரசியம் ஆக இருந்தது.
வாழ்த்துக்கள்... //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தெடல் பெரரிதாக தேவைப்படவில்லை. போட்டியை முழுமையாகப் பார்த்தேன்.